உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி இன்றோடு 500-வது நாள் ஆகியுள்ளது உக்ரைன் இந்த போரில் 9 ஆயிரம் பொதுக்களை இழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது

ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது.

இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

இந்த ரஷிய- உக்ரைன் போர் உடனே முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றோடு 500 நாட்கள் கடந்தும் நீடிக்கிறது.

படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் குடிமக்கள் பயங்கரமான எண்ணிக்கையில் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு நீண்ட போரில் இன்று நாம் மற்றொரு சோகமான மைல்கல்லை அடைந்திருக்கிறோம்” என்று அந்த அமைப்பின் துணைத்தலைவர் நோயல் கால்ஹவுன் (Noel Calhoun) கூறியிருக்கிறார்.

2023-ன் தொடக்கத்தில் சராசரி உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ஐ விட குறைவாக இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாகமீண்டும் ஏறத் தொடங்கியது. ஜூன் 27-ல், கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பின்பு மேற்கு நகரமான லிவிவ் நகர தாக்குதலில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10-வதாக ஒரு உடலை கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 37 பேர் காயமடைந்திருந்தனர் எனக்கூறிய மேயர் ஆண்ட்ரி சடோவ்யி “படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனது நகரத்தில் உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல்” என்றும் கூறியிருந்தார்.

உலக பாரம்பரிய மாநாட்டின் மூலம் “பாதுகாக்கப்பட்ட பகுதி” என அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் சேதமடைந்ததாகவும் யுனெஸ்கோ (UNESCO) தெரிவித்துள்ளது.

பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது.

குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், பொதுமக்களின் மின்சார மற்றும் தண்ணீர் தேவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. புச்சா மற்றும் மரியுபோல் நகரங்கள், கடந்த ஆண்டு ரஷிய அட்டூழியங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியது.

அங்கு நடந்த படுகொலைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ரஷியாவின் மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளை அதிகரித்தது.

நீண்டு கொண்டே செல்லும் இந்த போர், விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Share.
Leave A Reply