ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர்.
டெனெரிஃப்பில் இருந்து சுமார் 1,700 கிமீ (1,057 மைல்) தொலைவில் தெற்கு செனகலின் கடலோர நகரமான கஃபௌன்டைனில் இருந்து மீன்பிடி படகு சென்றதாக ‘வாக்கிங் பார்டர்ஸ்’ என்ற உதவி குழு கூறுகிறது.
படகில் பயணித்த புலம்பெயர்ந்தோரில் பலர் குழந்தைகள் என்றும் இந்த உதவி குழு கூறியதாக ஸ்பெயின் நாட்டின் Efe செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டஜன் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற இதேபோன்ற இரண்டு படகுகளும் நடுக்கடலில் மாயமானதாக தெரியவருகிறது.
சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு ஜூன் 27 அன்று கஃபௌன்டைனில் இருந்து கேனரி தீவுகளை நோக்கிச் சென்றது.
ஸ்பெயின் நாட்டின் மீட்புக்குழுவினருடன் கடல்சார் மீட்பு விமானம் ஒன்றும் அவர்களைத் தேடும் முயற்சியில் உதவி வருவதாக Efe தெரிவித்துள்ளது.
காணாமல் போன மற்ற இரண்டு படகுகளில், ஒன்றில் 65 பேர் பயணம் செய்ததாகவும், மற்றொரு படகில் 60 பேர் பயணம் செய்ததாகவும், ‘வாக்கிங் பார்டர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த ஹெலினா மலேனோவை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், கடலில் மாயமானவர்களின் மொத்த எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருக்கும்.
மத்திய தரைக்கடலில் கிரீஸ் கடற்கரைக்கு அருகே, ஐரோப்பாவின் மிக மோசமான விபத்து என கருதப்படும் அளவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இழுவைப் படகு தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்துக்குப் பின்னர் தற்போது 200 பேருடன் சென்ற படகு கடலில் மாயமாகியுள்ளது.
அந்த இழுவைப் படகு தண்ணீரில் மூழ்கியதில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 500 பேர் என்ன ஆனார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு பயணம் செய்வது புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் பொதுவாக சக்திவாய்ந்த அட்லாண்டிக் நீரோட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் போது எளிதில் தூக்கி எறியப்படும் சாதாரண மீன்பிடி படகுகளில் பயணம் செய்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஸ்பெயின் தீவுகளுக்குச் செல்ல முயன்ற 559 பேர் கடலில் பயணம் செய்த போது இதே போல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச குடியேற்றத்துக்கான பிரிவு (IOM) தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டில் இப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,126 பேர்.
2022 இல் 15,682 பேர் இது போல் அதிகாரப்பூர்வமற்ற பயணங்கள் மூலம் கேனரி தீவுகளுக்கு வந்ததாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி IOM கூறுகிறது. இது 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% குறைவு.
“ஒவ்வொரு ஆண்டும் இப்படி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், 2020 முதல் ஆபத்தான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது,” என்று IOM கூறுகிறது.
இதற்கிடையே, கடந்த புதனன்று கிரீஸ் நாட்டுக்கு அருகே இழுவைப் படகு கடலில் மூழ்கிய போது, மீட்பு நடவடிக்கைகளில் கிரீஸ் மீட்புக் குழுவினர் போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்கள் பிபிசிக்குக் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிபிசி எழுப்பிய சந்தேகத்துக்கு அந்நாட்டு அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.
பிபிசிக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, விபத்து நேர்ந்த பகுதியில் பிற கப்பல்களும் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், விபத்துக்குள்ளான படகு சுமார் 7 மணிநேரம் ஒரே இட,த்தில் நின்றிருந்ததாக கருதப்படுகிறது.
அந்தப் படகு ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தது என்ற நிலையில், விபத்து நேர்ந்த போது கிரீஸ் அரசு வேகமாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க முடியும்.
ஆனால், அது தொடர்ந்து இத்தாலியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்ததாகவும், அப்போது அவர்கள் ஆபத்தான எந்த சூழ்நிலையிலும் இல்லை என்றும் கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த விபத்தை கிரீஸ் அரசு கையாண்ட விதம் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, இது தொடர்பாக முழு அளவிலான விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.