முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் நேற்று அமைதியின்மை நிலவியது. புத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த அமைதியின்மைக்கு காரணம்.
முல்லைத்தீவு பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள இடமே குருந்தூர்மலை.
இந்தப் பகுதியில் பௌத்த விகாரை ஒன்றும், ஆதிசிவன் ஐயனார் ஆலயமும் காணப்படுகின்றன.
இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குருந்தூர் மலைப் பகுதியில் இதற்கு முன்னர் கூம்பக வடிவிலான பண்டைய கால கட்டடமொன்றின் சிதைவுகள் காணப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது பௌத்த விகாரையொன்றின் சிதைவுகள் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்து மத விழுமியங்களை பின்பற்றுகின்ற அப்பகுதி மக்கள் இந்த கட்டட இடிபாடானது இந்து மத வழிபாட்டுத் தலம் ஒன்றின் இடிபாடுகள் எனக் கூறியிருந்தனர்.
அதற்கு ஆதாரமாக தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வின் மூலம் வெளியில் எடுக்கப்பட்ட எண்கோண வடிவிலான சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை ஆதாரம் காட்டுகின்றனர்.
இந்தப் பின்னணியில், தொல்பொருள் அடையாளங்களில் காணப்படும் சிதைவுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியும் என நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது.
எனினும், சிதைவடைந்திருந்த விகாரை, பின்னரான காலத்தில் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் கூறுகின்றனர்.
தமிழர்கள் வழிபாடுகளுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிங்கள பௌத்த மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்
இந்த நிலையில், குறித்த பகுதிக்குள் சென்று வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தொல்பொருள் திணைக்களத்தால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமையவே இந்தப் பகுதிக்குள் சென்று வழிபாடுகளில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த இடத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றத்தால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குருந்தூர்மலை பகுதிக்கு, முல்லைத்தீவு நீதிபதி தலைமையிலான குழுவொன்று கடந்த 4ஆம் தேதி பயணம் செய்து விடயங்களை ஆராய்ந்திருந்தது. அப்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, குருந்தூர்மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் பொங்கி, வழிபாடுகளை நடத்த இந்துக்கள் தீர்மானித்திருந்தனர்.
இந்த நிலையில், குருந்தூர்மலையில் சில தரப்பினர் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்து வருவதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் பிக்கு ஒருவர் முறைபாடொன்றை செய்திருந்தார்.
இதையடுத்து, இந்த பொங்கல் பொங்கும் நிகழ்வை நடத்துவதன் ஊடாக அமைதியின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதைத் தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறும் போலீசார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்திருந்தார்.
இதையடுத்து, பௌத்த மக்கள் நேற்று தினம் குருந்தூர் மலைக்கு வருகை தந்து காலை வேளையில் மத வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.
இதன்படி, இன்றைய தினம் குறித்த பகுதிக்கு தமிழர்கள் வழிபாடுகளுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிங்கள பௌத்த மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த பகுதி புத்த மதத்திற்குச் சொந்தமானது எனவும், இது தொல்பொருள் பெறுமதி வாய்ந்தமை என்பதால் தீ பற்ற வைப்பதற்கு முடியாது எனவும் தெரிவித்து பௌத்த பிக்குகள் தலைமையிலான பௌத்த மக்கள் குழுவொன்று எதிர்ப்பை வெளியிட்டது.
பௌத்த விகாரை அமைந்துள்ள பகுதியிலிருந்து, இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதியை நோக்கி வருகை தந்த பௌத்த மக்கள், இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்துக்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்ததை அடுத்து, அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பௌத்த மக்கள் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து, இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்த மற்றுமொரு பௌத்த பிக்குகள் குழு, தமது மத அனுஷ்டானங்களை நடத்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து, அந்த இடத்திலிருந்த இந்து மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு, பௌத்த பிக்குகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
இதன்போது, அந்த இடத்திலிருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த முயன்றனர்.
எனினும், இரண்டு தரப்பினரும் போலீஸாரின் பேச்சுகளை செவிமடுக்காது, தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதனால், இரண்டு தரப்பினரையும் அந்த இடத்திலிருந்து கலைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
பௌத்த மக்களை வலுக்கட்டாயமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தம்மை வெளியேற்றுவதைப் போன்று, இந்துக்களையும் அங்கிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மக்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்ததால், போலீசார் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
பின்னர், அங்கு அமர்ந்திருந்த இந்துக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, போலீசாருக்கும், இந்துக்களுக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
எனினும், தமது வழிபாடுகளை நடத்தாமல் குறித்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது என இந்துக்கள் தெரிவித்ததை போலீசார் பின்னர் ஏற்றுக்கொண்டனர்.
நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்குவதாகவும், ஆனால் தீ பற்ற வைத்து பொங்கல் சமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது எனவும் போலீஸார் இந்துக்களிடம் கூறியிருந்தனர்.
அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து, 30 நிமிடங்களில் வழிபாடுகளை நடத்தி அங்கிருந்து வெளியேறுமாறு போலீஸார், இந்துக்களிடம் தெரிவித்திருந்தனர்.
அதற்கு ஏற்றாற்போல், வழிபாடுகளை ஆரம்பித்த இந்துக்கள், போலீசாரின் உத்தரவுக்கு அமைய குறித்த நேரத்தில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன் காரணமாக, நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியது.
குருந்தூர் மலையிலிருந்து பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் அனைவரையும் வெளியேற்றி, பின்னர் பாதுகாப்பு பிரிவினரும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று காலை முதல் குறித்த பகுதியில் போலீஸார், விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தாம் பொங்கல் பொங்க முயன்றபோது, அதை வன்முறையாளர்கள் தடுத்ததாக யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமி குறிப்பிட்டார்.
”கற்களை வைத்து, அதற்கு மேல் தகரத்தை வைத்து, தகரத்திற்கு மேல் கற்களை வைத்து பொங்கலை பொங்குமாறு தொல்பொருள் அதிகாரிகள் கூறினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
நாங்கள் பொங்கல் பொங்கும்போது, பஞ்சபூத தத்துவங்களில் ஒன்றான தீயானது, பூமாதேவியில் படவேண்டும். அவ்வாறு பொங்குவதுதான் சிறப்பாக இருக்கும். சூரியன், இயற்கை அன்னை இருக்கின்ற இடத்தில் அந்த வழிபாடு செய்யப்பட வேண்டும்.
ஆனால் சமாதானத்தை குழப்பக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக தான் விட்டுக்கொடுத்து நாங்கள் நிலத்திலே பொங்காமல், கல் வைத்து, தகரம் வைத்து மீண்டும் கல் வைத்து பொங்கல் பொங்குவதற்கு இணங்கினோம். அதைக்கூட செய்ய முடியாமல் போனது.” என்றார்.
மேலும் இலங்கை போலீசார் தங்களிடம், “சமாதானத்தை குழப்புகின்ற நிலைப்பாடு இருக்கின்ற காரணத்தினாலே நீங்கள் இங்கே நெருப்பு வைத்துப் பொங்க முடியாது,” என கூறியதாகத் தெரிவித்தனர்.
“தொல்பொருள் திணைக்களம் சொல்கின்ற விதத்தில் செயற்பட்டபோது, சில வன்முறையாளர்கள், பொங்கல் வைக்கின்ற தகரத்தையும் கற்களையும் காலாலே எட்டி உதைத்தார்கள். வன்முறையைத் தூண்டுகின்ற செயற்பாட்டை அந்த சமூகம் செய்துகொண்டிருக்கின்றது,” என வேலன் சுவாமி தெரிவிக்கின்றார்.
பௌத்த புக்குகள் இந்த இடத்தில் வன்முறையைத் தூண்ட முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.
”சைவ வழிபாடுகள் இடம்பெறும் இடம் இது. 1000 ஆண்டுகளுக்கு மேல் இந்த இடத்திலே ஆதி சிவன் வழிபாடு நடைபெற்ற இடமாக இருந்து வருகிறது. இந்த இடத்திலே ஒரு லிங்கத்திற்கு மேல் ஐந்து தலை நாகங்களைக் கொண்ட ஓர் உருவம் 100 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றது என்பதற்கு வரலாற்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, சிவனுடைய அடையாளமான சூலம் இந்த வழிபாட்டில் முக்கியமான ஒரு பொருளாக இருந்தது. இந்த இடத்தை தற்போது ஆக்கிரமித்து வைத்துள்ள சிங்கள பௌத்தவர்கள், இந்த இடத்தை சிங்கள பௌத்த அடையாளமாக மாற்ற முயல்கின்றனர்.
இதை அண்டிய பகுதியில் அவர்கள் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட அப்பாவி மக்கள், இந்தப் பொங்கல் விழாவிற்கு எதிராக தூண்டிவிடப்பட்டிருக்கின்றார்கள்.
இதில் வன்முறையை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. பௌத்த தேரர்கள் வன்முறையை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்,” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், குருந்தூர் மலை விகாரையானது, அநுராதபுரம் யுகத்திற்கு முன்னரான காலத்திற்குச் சொந்தமானது என குருந்தூர் விகாரையின் விகாராதிபதி பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
”தொல்பொருள்ரீதியில் பொலன்னறுவை பகுதியில் சிவன் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆலயத்தை உடைக்க பௌத்தர்கள் யாரும் செல்லவில்லை.
பல பௌத்த விகாரைகளுக்கு நடுவிலேயே சிவன் ஆலயம் உள்ளது. நாம் அந்த ஆலயத்தை வணங்குகின்றோம். மதிப்பளிக்கின்றோம். அனைத்து பௌத்தர்களும் அதைப் பாதுகாக்கின்றனர்.
இந்த இடத்தில் இரு சமூகங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். உண்மையான இந்து அடையாளங்கள் இலங்கையில் இருக்கின்றன. அதைப் பாதுகாக்க வேண்டும். அவற்றைப் பாதுகாக்க அவர்கள் செல்வார்களாயின், அது எமக்குப் பிரச்னை கிடையாது.
எந்தவொரு இனத்தவரும் இந்தப் பிரதேசத்திற்கும் வருகை தர முடியும். விகாரையை வணங்க முடியும். பார்வையிட முடியும். முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமிழ் மக்களின் உரிமை இது.
தமது பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையைப் பாதுகாக்க வேண்டும். மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றனர்,” என குருந்தூர் விகாரையின் விகாராதிபதி தெரிவிக்கின்றார்.