பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள்

மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. பின்னர் சகோதரிகளில் மூத்த பெண்ணை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அவரது தங்கையையும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவன் அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 

Share.
Leave A Reply