உக்ரேன் போரில் என்ன விலை தந்தேனும் வெற்றியைச் சுவைப்பது எனத் திடசங்கல்பத்தோடு செயற்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்த துருப்புச் சீட்டாக தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
உலகின் 110 இற்கும் அதிகமான நாடுகளால் தடை செய்யப்பட்ட அத்தகைய குண்டை வழங்க வேண்டிய தேவை என்ன என்பதற்கு அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ள காரணமோ விசித்திரமானது.
‘உக்ரேன் போரில் ரஷ்யாவின் வெற்றி மனித குலத்துக்கே ஒவ்வாதது. அத்தகைய வெற்றியைத் தடுப்பதாயின் கொத்தணிக் குண்டுகளை வழங்கியே ஆகவேண்டும்.’ இதுவே அமெரிக்காவின் நிலைப்பாடு.
அமெரிக்கா கூறுவதைப் போன்று போரில் ரஷ்யாவின் வெற்றி என்பது மனித குலத்துக்கே எதிரானது என வைத்துக் கொண்டாலும் கூட, அத்தகைய மனித குலத்துக்கே எதிரான ஒன்றைத் தடுப்பதற்காக மனித குலத்துக்கே விரோதமானது என முடிவு செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் எனப் புரியவில்லை. இத்தனைக்கும், நேற்றுவரை அதன் பாவனைக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நாடு அமெரிக்கா.
உக்ரேன் போர் ஆரம்பமான காலப்பகுதியில் போரில் ரஷ்யா கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்கின்றது என்ற குற்றச்சாட்டை வைத்து அதனை வன்மையாகக் கண்டித்திருந்தது அந்நாடு.
ஆனால், ஒரு வருட இடைவெளியினுள் அதே கொத்தணிக் குண்டுகளை உக்ரேனுக்குப் பரிசளிக்கின்றது என்றால் அமெரிக்காவின் மனிதநேயத்தின் அளவீடுதான் என்ன என்ற கேள்வி எழுகின்றது.
‘சய’வும் ‘சய’வும் சேர்ந்தால் ‘சக’வாகிவிடும் எனக் கணிதத்தில் ஒரு சமன்பாடு இருக்கிறது. இரண்டு ‘மைனஸ்’கள் சேரும்போது ஒரு ‘பிளஸ்’ வந்துவிடும் என்பது கணிதத்தில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம்.
அதற்காக தீயதும் தீயதும் இணைந்தால் நல்லது நடைபெறும் என அதனை வியாக்கியானம் செய்வது தவறு.
அமெரிக்கா எது செய்தாலும் அதனைச் சரி என ஏற்றுக் கொள்ளும் புத்திசாலிகள்(?) அநேகர் உலகில் உள்ளனர்.
அவர்களைப் பொறுத்தவரை ரஷ்ய அபாயத்தில் (?) இருந்து உக்ரேனைப் பாதுகாக்க ஒரே வழி இறுதி ஆயுதமான (?) கொத்தணிக் குண்டுகளை வழங்குவதே. ஆனால், இதில் அறம், மனித மாண்பு என்பவை எங்கே உள்ளன?
நவீன உலகில் அதிகமான நாடுகளில் போர்களை நடத்திய நாடு, தொடர்ந்தும் போர்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நாடு எதுவெனக் கேள்வி கேட்டால் அது அமெரிக்கா எனச் சிறுபிள்ளை கூடச் சொல்லிவிடும்.
அதுவே, அமெரிக்காவின் வரலாறு. இன்று கூட உலகின் பல பாகங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்காவின் போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
ஓய்வில்லாமல் தொடரும் இத்தகைய போர்களில் அமெரிக்காவின் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் போர்க் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றை மறுதலித்துள்ள அமெரிக்கா பலவற்றைச் சட்டை செய்ததேயில்லை.
ஆனால், ஏனைய நாடுகள் குறிப்பாகத் தனக்குப் பிடிக்காத நாடுகள் ஒரு சிறிய தவறை இழைத்தால் கூட அதனை ஊதிப் பெருப்பித்து, மிகப் பாரிய குற்றமாக உலகின் கண்களுக்குத் தெரிய வைப்பதில் அமெரிக்க அரசாங்கமும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு இருப்பதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகின்றது.
கொத்தணிக் குண்டுகளைப் பொறுத்தவரை அவை ஒரு குண்டில் இருந்து பல நூற்றுக் கணக்கான சிறிய குண்டுகளை வீசி அடிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை. அவ்வாறு வீசி அடிக்கப்படும் சிறிய குண்டுகள் அனைத்தும் உடனடியாக வெடித்து விடாது. பல வருடங்கள் கூட வெடிக்காமல் இருக்கும்.
அத்தகைய குண்டுகளைக் கண்டுபிடித்து அகற்றுவதும் கடினமான விடயம். அவ்வாறு வெடிக்காத குண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளின் பின்பு கூட அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இத்தகைய அம்சத்தைக் கருத்தில் கொண்டே 2008ஆம் ஆண்டில் இத்தகைய குண்டுகளின் பாவனையைத் தடுக்கும் ஐ.நா. பட்டயம் வெளியிடப்பட்டது. அதனை அப்போது 110 நாடுகள் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்திருந்தன.
அந்தப் பட்டயத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஸ்பெயின், பிரித்தானியா, கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை அமெரிக்காவின் தற்போதைய முடிவைக் கண்டித்துள்ளன.
ஜேர்மனி நாடு அமெரிக்காவின் முடிவை நேரடியாகக் கண்டிக்காத போதிலும் கொத்தணிக் குண்டுகளை தான் உக்ரேனுக்கு வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் ஒரு சிலவும் அமெரிக்காவின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
எனினும், அவை யாவும் வழக்கம் போலவே அமெரிக்காவால் கண்டு கொள்ளாமல் விடப்படும் என்பது தெரிந்ததே.
ஒரு வகையில் சொல்வதானால் – அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் அனொட்டலி அன்ரனவ் கூறியதைப் போன்று – அமெரிக்கா ஒரு கையறு நிலைக்குச் சென்றுவிட்டது போலவே தென்படுகின்றது.
மறுபுறம், ரஷ்யப் படைத்துறை அமைச்சர் சேர்கை சொய்கு இது தொடர்பில் காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொத்தணிக் குண்டுகளை உக்ரேன் பாவித்தால் பதிலுக்கு ரஷ்யாவும் தன்னிடம் உள்ள அத்தகைய குண்டுகளைப் பாவிக்க வேண்டிய நிலை உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, கொத்தணிக் குண்டுகள் உக்ரேன் போரின் முடிவுகளை மாற்ற மாட்டாது என ரஷ்யா அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது.
உக்ரேன் போர் ஆரம்பமான நாள் முதலாகவே, இந்தப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழி சமைக்கக் கூடும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையை முழு உலகுமே அறியும்.
உக்ரேன் போரில் எதனை இழந்தாவது வெற்றியை மாத்திரமே சுவைக்க வேண்டும் என நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மனோநிலை நாளை ரஷ்யாவுக்கு எதிராக படைகளை அனுப்பி வைப்பதற்கும், முடிவில் அணுகுண்டுகளைப் பாவிக்கும் நிலைக்கும் கூட வித்திடலாம்.
அத்தகைய ஒரு நிலை உருவானால் உலகம் முழுவதுமாக அழிந்தே போகும். பின்னர் உக்ரேன் போரைப் பற்றிக் கவலைப்பட அமெரிக்காவும் இருக்காது, மேற்குலகும் இருக்காது.
-சுவிசிலிருந்து சண் தவராசா-