உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்

ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]
“மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனால் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் ….

தூரத்தில் சிங்கம் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது …. அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது.

அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come … love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back … took her upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.] என்றும்

அதன் பின் தன் தந்தையான சிங்கத்தை, சிங்கபாகு கொன்று, தன் உடன்பிறந்த சகோதரியான சிங்கசீவலியை மணந்து, ராணியாக்கி, நாளடைவில் சிங்கசீவலி பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாகப் பெற்றாள்.

மூத்தவன் விஜயன் இரண்டாவது சுமித்த ஆகும். எல்லோருமாக முப்பத்திரண்டு மகன்மார்கள் ….. [ As time passed on his consort bore twin sons sixteen times, the eldest was named Vijaya, the second Sumitta; together there were thirty-two sons ….. ] என்றும்

மற்றும் ஏழாம் அத்தியாயம் விஜயனின் பட்டாபிஷேகத்தில் [CHAPTER VII / THE CONSECRATING OF VIJAYA ], தேவர்களுடைய பெரும் சபையில், மாமுனிவரும், பேச்சாற்றல் உடையவர்களிலேயே மிகச் சிறந்தவருமான புத்தபெருமான், அவருடைய நிர்வாணத்துக்கான படுக்கையிலே படுத்திருந்துகொண்டு, தம் அருகில் நின்ற சக்கனிடம் (இந்திரன்) “சிங்கபாகு” வின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான்.

தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக, அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக.” என்று கூறினர்.

ததாககர் [புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய – விஷ்ணு] ஒப்படைத்தான் [(Tathagata) was lying on the bed of his nibbana, in the midst of the great assembly of gods, he, the great sage, the greatest of those who have speech, spoke to Sakka (Indra, king of the gods) who stood there near him: ‘ Vijaya, son of king Sihabahu, is come to Lanka from the country of Lala, together with seven hundred followers. In Lanka, O lord of gods, will my religion be established, therefore carefully protect him with his followers and Lanka. When the lord of gods heard the words of the Tathagata he from respect handed over the guardianship of Lanka to the god who is in colour like the lotus (Visnu)] என்கிறது.

ஆகவே நாம் இங்கு சிங்கம் [மிருகம்] மனிதனுடன் குடும்ப வாழ்வு நடத்துவதையும்,மீண்டும் தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும் காண்கிறோம்.

ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து மதம், சமண மதம் சூழலில் பிறந்து வாழ்ந்து, அவைகளின் நடவடிக்கைகள், போதனைகளில் திருப்தி அற்றவராகி, அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், அதேபோல மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும் உணர்ந்து, எனவே அவை இரண்டையும் தவிர்த்து, ஒரு மத்திம மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மற்றும் நான்கு உயரிய சத்தியங்களைப் புரிந்துகொண்டு அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதித்தவர் சித்தார்த்தர்.

அது மட்டும் அல்ல, தானே ஞானோதயம் [அறிவொளி] பெற்று, நிர்வாண நிலையை, அதாவது ஆசாபாசங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட்டு பூரண அமைதியையும் ஞானோதயத்தையும் அடைந்து மக்களுக்கு வழியும் காட்டினார்.

மேலும் இவர்.மரணப் படுக்கையில் தன் சீடர்களுக்கு “எவருடைய உதவியையும் நாடாமல் சத்தியத்திலே தன்னந் தனியாக நின்று முக்தியை நாடித் தேடுங்கள்.” என்று கூறியதாக ஒரு தகவலும் உண்டு.

ஞானோதயம் தெய்வத்திடமிருந்து வருவது இல்லை, ஆனால் நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள ஒருவர் எடுக்கும் சொந்த முயற்சியிலிருந்து தான் வருகிறது என்பது புத்தரின் கருத்தாகும்.

கடவுளைப் பற்றி அவர் அதிகமாக எதுவும் சொல்லவில்லை. புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை, என அவர் கூறினார்.

“புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள் ஆகும். அதேபோல “ததாகதர்” என்பதற்கு உண்மையை அறிந்தவர் என்று பொருள். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகுவதையே “விடுதலை” அல்லது “நிர்வாண நிலை” என்றுரைப்பர்.

இந்த உண்மை நிலையில் நின்று நாம் மேலே கூறியவற்றை அலசும் பொழுது, கட்டாயம் இவை புத்தரின் போதனைக்கும் நம்பிக்கைக்கும் புறம்பாகவே, ஏற்கமுடியாததாகவே காட்சி அளிக்கிறது.

எனவே இதற்கு ஏதாவது உள்நோக்கம் மகாநாம தேரருக்கு இருந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதன் விளைவு தான், இன்று இலங்கையில் பர்மாவில் நடப்பவையாகவும் இருக்கலாம்? என்றாலும் அது நியாயமான இலங்கையை ஆண்ட மன்னர்களின் விபரங்களை, சரி பிழைகள் இருந்தாலும் ஓரளவு வரிசைக் கிரமமாக தருகிறது. அது மட்டும் அல்ல, மிகவும் நாகரிக இலங்கை பழங்குடி மக்களான நாகர்கள், இயக்கர்களைப் பற்றிய தகவல்களை தரும் சில அரிய நூல்களில் இதுவும் ஒன்று ஆகும்.

-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 11

Share.
Leave A Reply