கார் ஓட்டுனராக இருந்து மத போதகராக மாறியவர் 2003-ல் குட் நியூஸ் இன்டர்நேஷனல் அமைப்பை தொடங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மனைவியுடன் மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரு வழிபாட்டு இயக்கத்தை நடத்திய மதபோதகர் ஒருவர் தன்னை பின்பற்றுபவர்கள் கடவுளை காண, குடிநீரோ, உணவோ எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும் என மூளை சலவை செய்துள்ளார்.

இதனை மூடத்தனமாக நம்பி ஒரு காட்டில் அவருடன் விரதம் இருந்தவர்களில் 400 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.

கார் ஓட்டுனராக இருந்து மத போதகராக மாறியவர் பால் என்தென்கே மெக்கன்ஸி. குட் நியூஸ் இன்டர்நேஷனல் எனும் வழிபாட்டு அமைப்பை 2003-ல் தொடங்கிய அவரை பலர் பின்பற்றி வந்தனர்.

தன்னை பின்பற்றும் நூற்றுக்கணக்கானவர்களை கடவுளை காண ஷகஹோலா காட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உபதேசம் செய்தார். இதனை நம்பியவர்களை குழந்தைகளுடன் அங்கேயே தங்கி தடையின்றி விரதம் இருக்க வைத்திருக்கிறார்.

இந்த அப்பாவிகள் திடீரென முடிவை மாற்றிக் கொண்டு தப்பியோட முயற்சிக்கும்போது குண்டர்கள் மூலம் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்து காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 13 அன்றே அங்கு சென்றிருக்கின்றனர்.

அங்கே சிலர் இறந்தும், சிலர் மிகவும் மெலிந்து குற்றுயிராகவும் கண்டெடுக்கப்பட்டனர். அதில் இருந்து இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று 12-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கடும்பசியால் பலர் இறந்திருந்தாலும் குழந்தைகள் உட்பட பலர் கழுத்து நெரிக்கப்பட்டும், அடிக்கப்பட்டும், மூச்சுவிட முடியாமலும் இறந்திருக்கின்றனர் என தெரிய வந்திருக்கிறது.

இந்த கூட்டு புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், கடந்த ஏப்ரல் மத்தியில் மெக்கன்ஸி, அவர் மனைவி மற்றும் 16 பேருடன் கைது செய்யப்பட்டார்.

இனப்படுகொலைக்கான தண்டனையை எதிர்நோக்கும் மெக்கன்ஸிக்கு ஜூலை 3 அன்று மோம்பாஸா நகர நீதிமன்றம் காவலை நீடித்தது.

5 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கும் கென்யாவில் 4 ஆயிரத்திற்கும் மேம்பட்ட மத வழிபாட்டு அமைப்புகள் உள்ளதாகவும் அவற்றில் பெரும்பான்மையானவை தவறான போதனைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் மெக்கன்ஸியை பின்பற்றுபவர்களில் 65 பேர் உணவு உண்ண மறுத்து தற்கொலைக்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். கென்யாவின் தேசிய மனித உரிமை ஆணையம் இதனை கண்டித்து அவர்களுக்கு தண்டனை வழங்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply