யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
தனியார் வகுப்பு உரிமையாளர்கள் விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும், தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள் தரப்பில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப் பின்னர் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்குமாறும் கோரப்பட்டது.
அதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல்கள் தரம் 9 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்திய போதும், பிரத்தியேக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதை கட்டுப்படுத்துமாறும் அந்த நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஏழுநாட்களும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளபாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.