ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஸவே காரணம் எனச் சுட்டிக்காட்டி, நாட்டு மக்கள் பாரிய போராட்டங்களின் ஊடாக அவரை பதவியிலிருந்து விரட்டியடித்தனர்.

அதைத் தொடர்ந்து, இலங்கையின் 8வது ஜனாதிபதி என்ற அந்தஸ்தை நாடாளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க தனதாக்கிக் கொண்டார்.

நாடு எதிர்நோக்கியிருந்த பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த ஓராண்டு காலத்திற்குள் நாட்டை மீட்டெடுப்பதற்கான அனைத்து வித முயற்சிகளையும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணமானது, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

பதவியேற்றதன் பின்னர், பிரித்தானியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஏன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி பலரது மனங்களில் எழுந்திருந்தது.

குறிப்பாக இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றதன் பின்னர், அயல் நாடு என்ற விதத்தில் முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு செல்வதை வழக்காகக் கொண்டிருந்தனர்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவின் விவகாரத்தில் அது அவ்வாறு நடந்தேறவில்லை.

இதற்கான காரணம் என்னவென்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட பத்திரிகையாளருமான அ.நிக்ஸனிடம் பிபிசி தமிழ், வினவியது.

ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திரம் என்ன?

கே: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ப: ”பிரிக்ஸ் அமைப்புடன் சேர்ந்து இந்தியா பயணிக்கின்றது. அதில் ரஷ்யா, சீனா எல்லாம் இருக்கின்றன. அவர்களோடு சேர்ந்துதான் இந்தியா பயணிக்கின்றது. அதே வழியைத்தான் ரணில் விக்ரமசிங்க எடுக்கின்றார்.

விரும்பியோ, விரும்பாமலோ அவர் இந்தியாவுடன் நிற்கின்றார். சீனாவுடனும் பகைத்துக்கொள்ளாமல் போகலாம். பிரிக்ஸ் அமைப்போடு சேர்ந்து பயணிக்கும் வேலைத்திட்டத்தை ரணில் ஆரம்பித்துள்ளார்.

ஏனென்றால், ரணிலுக்கு சீனா தேவைப்படுகின்றது. பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா நிற்கின்ற காரணத்தால், அது தொடர்பில் இந்தியா பெரிதாக கருத்தில் கொள்ளாது. பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இந்தியாவிற்கு சிக்கல் இருக்காது.

ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் மாத்திரம் எங்களோடு இரு என்ற விதத்தில் இந்தியா கூறியிருக்கும். ரணில் விக்ரமசிங்க புத்திசாலியான ராஜதந்திரி. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனிமைப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன்தான் நிற்கும். அதில் மாற்றம் இல்லை.

ஆனாலும், பணிப்போர் ஒன்று ஓடிக்கொண்டுள்ளது. இந்த அமெரிக்க – இந்திய பணிப் போரை இலங்கை சிறப்பாகப் பயன்படுத்துகின்றது. ரணில் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு போகின்றார்.”

ரணில் விக்ரமசிங்க ஏன் ஓராண்டாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை?

கே: ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவியேற்ற அனைவரும் முதல் விஜயமாக இந்தியா செல்வார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு முதல் விஜயத்தை மேற்கொள்ளவில்லை. இந்தியாவும் அழைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன?

ப: ”ஆமாம், ரணில் விக்ரமசிங்க மீது இந்தியாவிற்கு சந்தேகம் இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க, இந்தியாவை கடந்து, சீனாவுடனும், அமெரிக்காவுடனும் சமாந்திரமாகப் பயணிக்கக்கூடியவர். அது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும்.

அதனாலேயே, இலங்கையை இந்தியா விட்டுப் பிடித்தது. ரணிலை விட்டுப் பிடித்தது. விரும்பியோ விரும்பாமலோ பிரிக்ஸ் அமைப்போடு சேர்ந்து பயணிக்கின்றார் என்றால், அவர் சீனாவையும் விரும்புகின்றார் என்றே கூறவேண்டும்.

அமெரிக்காவிடமிருந்து முழுமையாக விலகுகிறார். சீனாவிடமிருந்து இலங்கை உதவி பெறலாம், ஆனால், அமெரிக்காவிடம் முழுமையாக செல்லக்கூடாது என இந்தியா விரும்புகின்றது.

இலங்கை அமெரிக்காவிடம் முழுமையாகச் செல்வதை இந்தியா விரும்பாது. பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இல்லை. ஆனாலும், பிரிக்ஸ் கொள்கைகளுடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு திட்டத்தை ரணில் விக்ரமசிங்க கையாண்டுள்ளார் என்றே நான் நம்புகின்றேன்.”

இந்தியா, இலங்கைக்கு இடையிலான பரஸ்பர நலன்கள்

கே: ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக ஓராண்டு பூர்த்தியாகும் நாளிலேயே அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றார். அதற்கான காரணம் என்ன?

ப:  ”அதாவது, இவ்வளவு காலம் இந்தியாவுடன் ஒரு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கேட்கின்றது. அதில் ரணிலுக்கு உடன்பாடு இல்லை. அதுதான் உண்மை.

அது தேவையில்லை எனக் கூறிய மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக இருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு நண்பன் அங்கிருக்கின்றார். இவர் இங்கு ஜனாதிபதியாக இருக்கின்றார். அப்படியென்றால், 13வது திருத்த சட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அது தேவையில்லை என்று சொன்னால்தான் இந்தியாவுடன் கூட்டு சேர்வதாக இருந்தது.

அதற்கான நகர்வு வந்துள்ளதாக நான் நினைக்கின்றேன். இந்தியாவிற்கு தேவையான விஷயங்களை ரணில் விக்ரமசிங்க இலங்கையில் செய்து கொடுக்கின்றார். அதற்குப் பதிலாக 13ஐ நீங்கள் விடுங்கள், நான் பார்த்துக்கொள்கின்றேன் என ரணில் இந்தியாவிடம் சொல்லியிருக்கின்றார்.

அதை நடைமுறைப்படுத்துமாறு கோருவது சம்பிரதாயபூர்வமாக மாத்திரமே. இலங்கையின் அரசியல் தீர்வு என்றால், அமெரிக்காவிற்கு 13ற்கு அப்பால் செல்ல முடியாது. அதை அமெரிக்கா விரும்பலாம். ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவை மீறி, அமெரிக்கா ஒரு காலமும் செயல்படாது.

ஆனால், 13 தேவையில்லை என்ற கணக்கு தான் ரணிலுக்கு உள்ளது. அதற்கான விடையை ரணில் எடுத்துள்ளார். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் ஏதோ ஒரு பரஸ்பர நலன்கள் ஓடுகின்றன. அந்த நலன்களின் அடிப்படையிலேயே ரணில் இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றார்.

இவ்வளவு காலம் அந்த நலன்கள் இழுப்பட்டன. இனப் பிரச்னை விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது என்பதே அந்த விடயம். 13ஐ கைவிடும் விடயம் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் நிறைவேறியுள்ளது. இந்தச் சூழலில்தான் ரணில் அங்கு போகின்றார்.”

மேலும், ரணில் விக்ரமசிங்கவின் மீது இந்தியாவிற்கு தொடர்ந்தும் சந்தேகம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் கூறுகின்றார்.

”இவர் புத்திசாலி. பிரிக்ஸ் உடன் சேர்ந்து பயணிக்கும்போது லாபம் கிடைக்கும் என ரணில் கணக்குப் போட்டிருப்பார். ரஷ்யா, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தாலும், பிரிக்ஸ் அமைப்பில் சீனா, ரஷ்யா இருக்கின்றமையால் , சீனாவிடமிருந்து பொருளாதார உதவிகளை பெறும்போது இந்தியா பெரிதாகக் கண்டுக்கொள்ளாது.

மற்றது இந்தியா 13ஐ பற்றிப் பேசாமல் இருப்பது ரணிலுக்கு விருப்பமாக இருக்கும். இந்தியா பேசாமல் இருக்க வேண்டும் என்றால், இலங்கையில் இந்தியாவிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.

முக்கியமாக இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கையின் ஆதரவை இந்தியா எதிர்பார்க்கின்றது. முரண்பாடுகளைக் கண்டுபிடித்து, அதனூடாக ரணில் பயணிக்கின்றார். இந்தியாவும், அமெரிக்காவும் ரணிலை பெரிதாக விரும்பாது. ஏனென்றால், முரண்பாடுகளை கண்டுபிடித்து ரணில் தன்னுடைய வேலைகளைப் பார்த்துக்கொள்வார். அவர் ஒரு புத்திசாலி. அதனால், ரணிலை இந்தியா பெரிதாக விரும்பாது. இலங்கையில் ஜனாதிபதியாக புத்திசாலிகள் இருப்பதை இந்தியா விரும்பாது.”
ரணில் விக்ரமசிங்க

ரணிலை கண்டு இந்தியா பயப்படுகிறதா?

கே: ரணில் விக்ரமசிங்கவை கண்டு, இந்தியா பயப்படுகின்றதா?

ப: ”இருக்கலாம். ஏற்கெனவே இலங்கை, இந்தியாவிற்கு பல விடயங்களில் கரியைத்தான் பூசியுள்ளது. இந்தியாவின் ராஜதந்திரம் இலங்கையிடம் தோல்வியடைந்தது என்பதே என்னுடைய கருத்து.

ரணிலை இந்தியாவாத சமாளிக்க முடியாது. இந்தியா முடிந்த அளவுக்கு இறங்கிப் போகிறது. வெட்கத்தால் வெளியில் சொல்ல மாட்டார்கள். போர்ட் சிட்டி திட்டம் வரும்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா சிரித்தது.

ஆனால் இப்போது அது இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்கின்றார்கள். இந்தியா விவகாரத்தில் இலங்கை வெற்றியடைந்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் விவகாரத்தில் இலங்கைக்கு வெற்றி, இந்தியாவுக்கு தோல்வி.

இந்த விவகாரத்தை இந்தியா ஒழுங்காகக் கையாளவில்லை. 13ஐ விட்டு விட்டு வேறொரு தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு பயம். இலங்கையிடமிருந்து இந்தியா பல நலன்களைப் பெற வேண்டும். இலங்கையை சீனாவிடம் முழுமையாக போகவிடக்கூடாது.

தமிழர் விவகாரத்தை உரத்துப் பேசினால், இலங்கை நேரடியாகவே சீனாவிடம் சென்றுவிடும் அல்லது அமெரிக்காவிடம் சென்றுவிடும். இந்த இரண்டு பேரிடம் சென்றாலும், இந்தியாவிற்கு ஆபத்து. இதை ரணில் சரியாக கையாள்கின்றார்.”

Share.
Leave A Reply