இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
மருத்துவமனைகளில் பதிவாகிய திடீர் மரணங்கள்
கண்டி – பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் அண்மையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் தனது மகளுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்தே, தனது மகள் உயிரிழப்பதற்கான காரணம் என அவர் தாய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.
உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட திடீர் சுகயீனத்தினால் 21 வயதான சமோதி சங்தீபனி பேராதனை மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சமோதி சங்தீபனி கடந்த 11ம் தேதி உயிரிழந்துள்ளார்.
”எனது மகளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். 3.30 அளவில் எனது மகளின் கையில் சேலேன் ஏற்றப்பட்டது (க்ளூகோஸ்). அதேநேரம், இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்டன.
கட்டிலில் இருந்தவாறே எனது மகளுக்கு ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள். எனக்கு ஏதோ ஏற்படுகின்றது என எனது மகள் கூறினார். அப்படியே குளியலறைக்கு ஓடினாள். சிங்கில் தலையை வைத்துப்படியே கீழே வீழ்ந்தாள். கை, கால், உடம்பு எல்லாம் நீல நிறமாகியது. அப்படியே வீழ்ந்தாள். நான் கத்தி கூச்சலிட்டேன். தாதியர்கள் ஓடி வந்து, எனது மகளை அழைத்து சென்றார்கள்.
அவர்களினால் ஏற்றப்பட்ட மருந்தினாலேயே எனது மகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது, இன்று எனது மகளை இழந்து விட்டோம். வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் மாத்திரமே காணப்பட்டன. சேலேன் ஏற்றியவுடன் அது சரியானது. அதற்கு பின்னர் வழங்கிய மருந்தினாலேயே எனது மகளை நான் இழந்தேன்.” என சமோதி சங்தீபனியின் தாய் மயா இந்திரானி தெரிவிக்கின்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து அகிய இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பீ.மாதிவத்த விடயங்களை தெளிவூட்டினார்.
”10 மில்லிலிட்டர் மருந்தை கரைத்து நோயாளருக்கு வழங்க வேண்டும் என்றே மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் தற்போது 10 மில்லிலிட்டர் சிரஞ்சுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. எனினும், நோயாளிக்கு மருந்தை வழங்குவதற்காக 5 மில்லிலிட்டர் அளவை கொண்ட இரண்டு சிரஞ்சுகளைப் பயன்படுத்தி தாதியர்கள் மருந்தை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் ஏற்பட்ட பின்விளைவுகளினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.” என அவர் கூறினார்.
‘மருந்து காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டது என கூறுவது கடினம். ஒவ்வாமை காரணமாகவே இது ஏற்பட்டிருக்கலாம்” என பேராதனை மருத்துவமனையின் மருத்துவ பணிப்பாளர் மருத்துவர் அர்ஜுன திலகரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
விசாரணை குழு விசாரணையை ஆரம்பித்தது
பேராதனை மருத்துவமனையில் மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் யுவதியொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, குறித்த மருந்து வகைகளின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உடன் அமலுக்குவரும் வகையில் இந்த மருந்து பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கடந்த 16ம் தேதி கண்டி தேசிய மருத்துவமனை மற்றும் பேராதனை மருத்துவமனை ஆகியவற்றிற்கு சென்று விடயங்களை ஆராய்ந்திருந்தது.
இதையடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கூறுகின்றார்.
நான்கு மாத குழந்தை உயிரிழப்பு
தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாத குழந்தை ஒன்றும் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளது.
குளியாபிட்டி பகுதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
குளியாபிட்டி பகுதியில் வசித்த வந்த 4 மாத குழந்தைக்கு ஹெட்டிபொல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இரவு வேளையில் காய்ச்சல் காணப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து குழந்தையை தனது கணவர் அருகில் வைத்து உறங்க வைத்ததாகவும் அவரது தாய் தெரிவிக்கின்றார்.
எனினும், அதிகாலை வேளையில் குழந்தை உயிரிழந்திருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த குழந்தையின் சடலம் மீதான மரண பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், சடலத்தின் எடுக்கப்பட்ட மாதிரிகள் இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஏனைய குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டதாகவும், ஏனைய குழந்தைகள் நலமுடன் உள்ளதாகவும் அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவிக்கின்றார்.
அதனால், குறித்த தடுப்பூசியில் பாதிப்புக்கள் இருக்காது என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, அநுராதபுரம் மருத்துவமனையிலும் ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை சங்கங்கள் குற்றஞ்சுமத்துகின்றன.
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வர பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து தட்டுப்பாடு, சுகாதார சேவை தொடர்ச்சியாக எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை அடுத்தே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சரின் பதில்
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமையினால், விசாரணைகளின் பின்னரே தெளிவான தகவல்களை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பேராதனை போதனா மருத்துவமனையில் யுவதியொருவருக்கு ஏற்றப்பட்ட மருந்தானது, இலங்கைக்கு முதல் தடவையாக 2013ம் ஆண்டு முதல் முதலாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த மருந்தானது, சுமார் 20 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
”அத்தியாவசிய மருந்துகள் கிடைத்து வருகின்றன. 273 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. இன்று 39 மருந்து வகைகள் கிடைக்கின்றன. ஓளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு (மருந்துகளுக்கு அனுமதி கொடுக்கும் குழு) அனுமதிக்காக ஐந்து மருந்துகள் கொடுத்தால், அதில் ஒன்றிற்கு மட்டுமே அவர்கள் அனுமதி வழங்குகின்றனர். அதுவே மருந்து தட்டுப்பாடு ஏற்பட முதலாவது காரணம். நாடாளுமன்ற விவாதத்திற்கு நான் தயார்,” என சுகாதார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: