இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

பொருளாதாரம், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கூறும்போது, இந்தியா-இலங்கை இடையேயான தூதரக உறவுகளில் 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரி சீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை வழங்குவதற்கும் இரு தலைவர்கள் சந்திப்பு மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது. மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நாகை-இலங்கையிடையே பயணிகள் கப்பல் இயக்கவும், இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள்கட்டித்தரவும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் இந்தியாவில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை இலங்கை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு பயணம் மேற் கொள்வதற்கு முன்பு அவரை இலங்கை தமிழ் கட்சிகள் சந்தித்து 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக விவாதித்தனர்.

மேலும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தில், இந்தியா வரும் இலங்கை அதிபர் விக்ரமசிங்கேவிடம் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்த கோரி இருந்தனர்.

அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், விக்ரமசிங்கேவிடம் இலங்கை தமிழர் விவகாரம், மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம் என்று இலங்கை தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share.
Leave A Reply