மனித குல வரலாற்றில் அறிவியல் ரீதியாக பெறப்பட்ட வரலாற்று வெற்றியாக மனிதன் நிலவில் கால் பதித்த சம்பவம் பேசப்படுகின்றது.
1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி உலகமே வியந்து பார்த்த நிகழ்வாகவும் பலரும் ஆச்சரியமாக புருவம் உயர்த்தி அதிகம் பரிமாறப்பட்ட செய்தியாகவும் விளங்கிய சம்பவமே நிலவில் மனிதன் இறங்கி நடந்து சென்றமையாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் பனிப்போர் நிகழ்த்திக்கொண்டிருந்த காலமே 1955–1962 காலப்பகுதியாகும்.
விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்கலங்களை அனுப்புவதில் ரஷ்யாவே முன்னணியில் இருந்தது.
1957ஆம் ஆண்டு ரஷ்யாவானது ஸ்புட்னிக் – 1 என்ற விண்கலத்தை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பி வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துகொண்டது.
அதே வருடம் ஸ்புட்னிக் – 02 என்ற விண்கலத்தில் லைக்கா என்ற நாயை அனுப்பி முதன் முதலாக உயிரினம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பிய நாடு என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டது.
ஆனால், அமெரிக்காவோ 1958ஆம் ஆண்டே எக்ஸ்புளோரர் என்ற செயற்கைக்கோளை முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.
இதை அமெரிக்கா அவசர அவசரமாக செய்ததற்குக் காரணம் இத்துறையில் ரஷ்யா பலமாக காலூன்றி வருவதை சமாளிப்பதற்காகும்.
அந்நேரம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐசனோவர் நாசா என்ற அமைப்பை உருவாக்கி, அதே ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி ஸ்கோர் என்ற செயற்கைக்கோளை தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்.
அதற்கு பதிலடியாக, அடுத்த ஆண்டே ரஷ்யா லூனா – 2 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி அங்கு வெற்றிகரமாக தரையிறக்கியது.
இதுவே சந்திரனில் முதலாவதாக தரையிறக்கப்பட்ட செயற்கைக்கோளாகும். அமெரிக்கா அதிர்ந்தது. ரஷ்யாவின் அடுத்த இலக்கு நிச்சயமாக மனிதனை சந்திரனுக்கு அனுப்புவதுதான் என்பதை ஊகித்தது.
அப்படி ஒரு சம்பவம் நடந்தால் உலக மக்கள் ரஷ்யாவை உச்சியில் வைத்து கொண்டாடும். அதே நேரம் அமெரிக்க சார்பு நாடுகள் அந்த பக்கம் திரும்பும் அபாயம் இருப்பதை அமெரிக்கா உணர்ந்தது.
ஆனால், அமெரிக்கா சிந்தித்துக்கொண்டிருக்கும் தறுவாயில் ரஷ்யா அதை செயற்படுத்தியது.
இரவு பகலாக ஆராய்ச்சிகள் தொடர்ந்த நிலையில் இரகசியமாக ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இரவு பகலாக ரஷ்யா தயாரித்தது.
1962ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி ரஷ்யாவானது வொஸ்டோக் – 1 என்ற விண்கலத்தில் யூரி ககாரின் என்ற விமானப்படை வீரரை விண்வெளிக்கு அனுப்பியது.
இந்த விண்கலமானது விண்வெளியில் 1 மணிநேரம் 48 நிமிடங்கள் இருந்துவிட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
இதன் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையையும் ரஷ்யா பெற்றது. அடுத்தடுத்து அமெரிக்காவுக்கு அடி கொடுத்தது ரஷ்யா.
1966ஆம் ஆண்டு ரஷ்யா மற்றுமொரு விண்கலத்தை சந்திரனில் தரையிறக்கி அங்கு மாதிரிகளை சேகரித்தது.
இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்கலங்களில் உயிரினங்களை வெற்றிகரமாக அனுப்பியமை போன்ற விடயங்களில் உலகை தன்பக்கம் ஈர்த்து அமெரிக்காவுக்கு கெளரவ பிரச்சினையை ரஷ்யா ஏற்படுத்தியது.
அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை. அப்போது ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சனுக்கு பல விதத்திலும் அழுத்தங்கள். வேறு வழியின்றி நிக்சன் ‘நாம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பப்போகிறோம்.
அங்கு அவர்களை தரையிறக்குவோம்’ என அதிரடியாக அறிவித்தார். இதை ரஷ்யா எதிர்பார்க்கவில்லை. எனினும், முதலில் மனிதர்களை சந்திரனில் தரையிறக்குவதற்கான ஆராய்ச்சிகளை அது தொடர்ந்தது.
இதற்கிடையில் அமெரிக்கா 1968ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி அப்பலோ – 8 என்ற விண்கலத்தில் தனது விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பியது.
அந்த விண்கலம் சந்திரனை வெற்றிகரமாக சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பியது. இந்த சம்பவம் அமெரிக்காவுக்கு நம்பிக்கையை உருவாக்கியது.
அடுத்த கட்டமாக சந்திரனில் மனிதர்களை தரையிறக்குவதை அமெரிக்கா நம்பிக்கையோடு எதிர்கொண்டது.
1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி, நீல் ஆம்ஸ்ட்ரோங், அட்வின் ஆல்ரின், மைக்கல் கூலின்ஸ் ஆகிய மூன்று வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளி நோக்கி பயணித்தது அப்பலோ – 11 என்ற விண்கலம்.
இந்த விண்கலமானது வீரர்கள் தங்கும் பகுதி, சந்திரனில் கமராக்களுடன் தரையிறங்கும் ஈகிள் என்ற பகுதி மற்றும் ஒட்சிசன், தண்ணீர் ஆகியவற்றை கொண்ட பிரிவு என மூன்று பகுதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஜூலை 16ஆம் திகதி பூமியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த அப்பலோ – 11 விண்கலம் நான்கு நாட்களின் பின்னர் சந்திரனின் சுற்று வட்டப்பாதையை சென்றடைந்தது. அதிலிருந்து மூன்று வீரர்களும் மற்றும் கமராக்களை கொண்டிருந்த ஈகிள் இறங்கு வாகனம் கொண்ட பகுதியும் தனியே பிரிந்து சென்று சந்திரனுக்கு சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்தில் நின்றது.
பிரிந்து சென்ற வாகனத்தில் ஆம்ஸ்ட்ரோங்கும், அல்ரினும் இருந்தனர். மைக்கல் கூலின்ஸ் விண்கலத்திலேயே தங்கி இவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார்.
பிரிந்து சென்ற ஈகிள் பிரிவு சந்திரனில் அன்றைய தினம் இரவு 8.17 மணிக்கு தரையிறங்கியது.
ஆனால், இரு விண்வெளி வீரர்களும் உடனடியாக ஈகிளில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் ஓய்வு எடுப்பதற்காகவும் சந்திரனில் என்ன நடக்கின்றது என்பதை கண்காணிப்பதற்காகவும் உள்ளேயே சுமார் 4 மணித்தியாலயங்கள் தங்கியிருந்தனர்.
உலகம் இந்த நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தது.
சரியாக இரவு 11.43 மணிக்கு ஈகிளின் கதவை திறந்துகொண்டு ஆம்ஸ்ட்ரோங் மெதுவாக படியிறங்கினார். அவர் முதலில் எந்த காலை சந்திரனில் வைப்பார் என உலகமே பார்த்துக்கொண்டிருந்தபோது படியிலிருந்து குதித்து தனது இரண்டு கால்களையும் சந்திரனின் தரையில் பதித்தார்.
அப்போது அவர் ‘மனிதனின் இந்த சிறிய காலடி மனித குலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’ என பேசினார். அதை உலகம் கேட்டது. அவர் கால் பதித்த 19 நிமிடங்களில் எட்வின் ஆல்ட்ரின் சந்திரனில் கால் பதித்தார்.
இருவரும் சந்திரனில் நடந்து சென்று அமெரிக்க கொடியை நாட்டி மரியாதை செலுத்தினர். பின்பு அவர்கள் அங்கு மாதிரிகளை சேகரித்தனர்.
இதில் கற்களே அதிகமாக சேகரிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் சந்திரனில் நடந்தபோது அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அவர்களுடன் உரையாடினார்.
இதுவும் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாகியது. அதாவது ஒரு கிரகத்தில் இருந்து மற்றுமொரு கிரகத்துக்கு பேசப்பட்ட முதல் சம்பவமாகியது.
இந்த நிகழ்வுகளை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்க மக்கள் வீதிகளில் கூடி கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெற்றிக்களிப்பை இரவிரவாக கொண்டாடினர்.
அதற்கு பிறகு ரஷ்யா என்னதான் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டாலும் அமெரிக்காவின் இந்த சாதனை அதை பின்தள்ளிவிட்டது.
ஆனாலும் ரஷ்யா சும்மா இருக்கவில்லை. தனது நட்பு நாடுகளை தூண்டிவிட்டு, இது ஒரு பொய்யான சம்பவம் என கதைகளை கூற வைத்தது.
பூமியிலேயே சந்திர கிரகம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி அமெரிக்கா ஏமாற்றிவிட்டது என்றும் வீரர்கள் தரையிறங்கும் போது அவர்களை படம் பிடிக்க ஏற்கனவே அங்கு இருந்தவர்கள் யார் என்பது போன்ற கேள்விகளை கேட்க வைத்தது.
அதற்கு சரியான விளக்கங்களை அமெரிக்கா கொடுத்தது. கமராக்களுடன் கூடிய ஈகிள் இறங்கு வாகனத்தை கொண்டு அதை நிரூபித்தது.
பின்னர் ஒரு கட்டத்தில் ரஷ்யா இதை ஏற்றுக்கொண்டது. ஆனால், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது மிகவும் செலவு கூடிய காரியம் என்பதை உணர்ந்த அமெரிக்கா 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மனிதர்களை அனுப்புவதில்லை என்ற முடிவுக்கு வந்தது.
ஏனென்றால், செயற்கைக்கோள்கள் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு அதைக் கொண்டே சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அது நம்பியது.
எனினும், தற்போது அமெரிக்காவானது ஆர்டெமிஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் ஜப்பான், கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் இணைந்து அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு மனிதர்களை சந்திரனுக்கு அனுப்ப தயாராகி வருகின்றது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் மாத்திரமே சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. அதில் மனிதர்களை இறக்கிய பெருமை அமெரிக்காவுக்கு மாத்திரமே உள்ளது.
இதுவரை 6 தடவைகள் அமெரிக்கா தனது விண்கலங்களில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி 12 வீரர்களை தரையிறங்க வைத்துள்ளது. இதன் மூலம் சந்திரனில் 6 அமெரிக்க கொடிகள் இன்றும் இருக்கின்றன. ஆனால், கொடிகள் பறப்பதில்லை.
ஏனென்றால், சந்திரனில் காற்று இல்லை. எனவே ஆம்ஸ்ட்ரோங், அல்ரின் உட்பட ஏனைய பத்து வீரர்களின் காலடித்தடங்கள் அப்படியே அழியாமல் அங்கு உள்ளன.
என்னதான் அமெரிக்கா பூமிக்கு அடுத்து மற்றுமொரு கோளில் மனிதர்களை இறக்கியுள்ளோம் என மார்தட்டிக்கொண்டாலும், இந்த சம்பவத்தை ஏற்காத பல நாடுகள் இன்னும் உள்ளன.
இது ஒரு பொய்யான கதை என்றும் நம்புகிற பலரும் இன்னும் அது குறித்து விமர்சனம் செய்துகொண்டே வருகின்றனர்.
சந்திரனில் மனிதன் இறங்கினானா என்ற கதையை நம்பாத ஒரு மக்கள் கூட்டம் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பது அதிசயம் தான்.
சி.சி.என்