மேற்கத்திய உலகில் இந்நூல் வெறும் சிற்றின்ப இலக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இன்று இந்தியாவில் உள்ள பலர் ‘காமசூத்ரா’வை உடல் உறவுகளை விவரிக்கும் ஒரு நூலாக மட்டுமே பார்க்கிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபை ‘உடல் ஒரு தீய விஷயம். சரீர இன்பங்கள் பயனற்றவை, அவற்றை விரும்புவது பாவம்.

இனப்பெருக்கம் ஒன்றே உடலுறவின் குறிக்கோளாக இருக்க வேண்டும்’ என்று கூறும் நிலையில், வாத்ஸ்யாயன முனிவர் கங்கைக் கரையில் அமர்ந்து காமசூத்ராவை இயற்றினார்.

அந்த நூல், உடல் இன்பம் என்பது மிகவும் அருமையான விஷயம் என்றும் அதை எப்படி நல்ல முறையில் அடைவது என்றும் சொல்லிக்கொடுக்கிறது.

அப்படியானால் வாத்ஸ்யாயனர் போன்ற பிரம்மச்சரிய முனிவர் எழுதிய இந்தப் புத்தகம் சிற்றின்பத்தைப் பற்றி மட்டும் பேசுகிறதா? இந்தப் புத்தகத்தை ஒரு ‘செக்ஸ்’ வழிகாட்டியாகக் கையாள்வது எவ்வளவு பொருத்தமானது?

‘காமசூத்ரா’ உண்மையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு நூல்.

இந்நூலின் அமைப்பு, அதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆகியவற்றை ஆழமாகப் புரிந்து கொண்டால், காமசூத்ரா வெறும் உடலுறவைப் பற்றி மட்டும் பேசுகிறது என்ற தவறான எண்ணங்கள் விலகிவிடும்.

மேலும், பண்டைய இந்தியாவின் பாலுறவு பற்றிய பார்வைகளும், தற்போது நாம் அவற்றிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம் என்பதும் தெரியவரும்.

காமசூத்ரா என்பது வாத்ஸ்யாயன முனிவர் எழுதிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலின் சரியான காலம் தெரியவில்லை.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் எனத்தெரியவருகிறது. சில ஆராய்ச்சியாளர்கள் காமசூத்ரா கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள்.

வேறு சிலரோ, இந்நூல் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக, காமசூத்ராவில் குப்தர்களின் ஆட்சி பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் இது ஒரே ஒரு நூல் அல்ல. இந்நூல் ஏழு நூல்களின் தொகுப்பாக உள்ளது. இந்த தொகுப்பில் 36 அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 1,250 செய்யுள்கள் எழுதப்பட்டுள்ளன.

கலை வரலாற்று அறிஞரும், ஆய்வாளருமான டாக்டர் அல்கா பாண்டே, இந்நூல் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது பற்றிக் கூறும் போது, காமசூத்ராவின் ஏழு நூல்களில் முதல் நூல் ‘நல்ல வாழ்க்கையை’ எப்படி வாழ்வது என்பது பற்றிக் கூறுகிறது என்றும், தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களில், தர்மம் (தார்மீக மதிப்பு), அர்த்தம் (பொருளாதார மதிப்பு), காமம் (உடல் மதிப்பு) ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது என்றும் கூறுகிறார்.

நாம் அறிந்தபடி, பாலியல் இன்பத்திற்கும், ‘நல்ல வாழ்க்கை’க்கும் ‘கடமையுணர்வு’ மிகவும் முக்கியமானது.

இந்தத் தொடரின் இரண்டாவது புத்தகம் பாலியல் தோரணைகள் பற்றியது.

‘காமசூத்ரா’வில் உள்ள இந்த புத்தகங்களின் தொகுப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கொடுக்கும் எழுத்தாளரும், பேராசிரியருமான மாதவி மேனன், இந்த புத்தகங்களில் ஒன்று கணவனும், மனைவியும் இணைந்து செயல்படுவதன் மூலம் எப்படி ஒரு குடும்பத்தை அலங்கரிக்கலாம் என்பது பற்றியது என்கிறார்.

கடமை உணர்வையும், இன்பத்தையும் அதிகரிக்கும் வாய்ப்புகளை எப்படி உருவாக்கி குடும்பத்தை அலங்கரிக்கலாம் என்பதை இந்தப் புத்தகம் சொல்கிறது என்கிறார் மாதவி மேனன்.

“ஆறாவது புத்தகம் முழுவதும் விலைமாதுக்களைப் பற்றியது. இப்பிரிவில் விலைமாதுக்களைப் பற்றி நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், காமசூத்ராவைப் படிப்பவர்கள், இப்பகுதி விலைமாதுக்களைப் பற்றியது என்ற காரணத்தின் அடிப்படையில் நிராகரிக்கின்றனர்.

ஆனால் விலைமாதுக்கள் உண்மையிலுமே பாலியல் தொழிலாளர்களாக இருக்கவில்லை. அவர்கள் அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்த உயரடுக்கு வாழ்க்கைக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்தனர்,” என்கிறார் மாதவி மேனன்.

பெண்களுக்கு ஏற்படும் ஆசைகளும், அவற்றிற்கான முக்கியத்துவமும்

உடலுறவு பற்றிய பொதுவான தவறான கருத்து என்னவென்றால், அந்த நேரத்தில் ஒரு ஆணின் இன்பம் முக்கியமானது என்றும், அதே சமயம் பெண்ணின் இன்பம் முக்கியமல்ல என்றும் பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். இந்த தவறான கருத்தை முதலில் காமசூத்ரா உடைத்து நொறுக்குகிறது.

உடலுறவின் போது, பெண்கள் உச்ச இன்பத்தை அடைய ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்று முன்பு நம்பப்பட்டது.

ஆனால் முதன்முறையாக ‘காமசூத்ரா’வில் இருந்து இந்த மகிழ்ச்சியைப் பெற பெண்களுக்கு ஆண்கள் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

உடலுறவு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் தேவையாக இருந்தாலும், அதைப் பற்றிய அவர்களின் உணர்வுகள், அவர்களின் பாலுணர்வின் ஆதாரம் போன்றவை இருவருக்கும் இடையே பெரிதும் வேறுபடுகின்றன.

இது குறித்து கூறும் வாத்ஸ்யாயனர், “ஆண்களின் உடல் ஆசை, நெருப்பு போன்றது. இது பிறப்புறுப்பில் தொடங்கி தலை வரை செல்கிறது.

நெருப்பு போல, அது எளிதில் எரிகிறது என்பதோடு, விரைவாக அணைக்கப்படுகிறது. மறுபுறம், உடலுறவின் போது ஒரு பெண்ணின் ஆசை என்பது தண்ணீர் போன்றது. அது வீறுகொண்டு விழித்தெழுவதற்கும் பின்னர் அணைவதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது,” என்கிறார்.

எழுத்தாளர் மாதவி மேனன் கூறும்போது, ​​“காமசூத்ராவில் ஆண், பெண் உடல் உறவு பற்றிக் கூறும் போதெல்லாம் பெண்களின் உடல் நிலை எப்படி இருக்க வேண்டும், எப்படி முத்தம் கொடுக்க வேண்டும், பெண்ணின் உடலை எப்படிக் கையாளவேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை வாத்ஸ்யாயனர் எழுதியுள்ளார்.

ஆனால் மிக முக்கியமாக, ஒரு பெண் விரும்பினால் மட்டுமே எந்த ஒரு செயலையும் செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது,” என்கிறார்.

 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உடல் உறவு, அவர்களின் காதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான உறவு குறித்து வாத்ஸ்யாயனர் பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார். காதலில் ஏற்ற இறக்கங்கள், சண்டைகள் கூட இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

அந்த நேரத்தில், உறவின் புத்துணர்ச்சியைப் பேணுவது பற்றிக் கூறும் வாத்ஸ்யாயனர், உறவில் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டுமானால், இருவருக்குள்ளும் சண்டை சச்சரவுகள் அவசியம் என்கிறார்.

இருவருக்கும் இடையே நிலவும் உறவு வலுவாகவும், பரஸ்பர நம்பிக்கையுடனும் இருக்கும் போதுதான் இந்தப் போராட்டம் வெற்றியடைகிறது என்றும், ஆனால் இருவருக்கும் இடையே உண்மையான காதல் இல்லையென்றால், இந்தப் போராட்டம் பயங்கர சண்டையாக மாறும் என்பதுடன் அதற்கு தீர்வு கிடைக்காது என்றும் கூறுகிறார்.

இது குறித்து, “சண்டையை எப்போதும் ஒரு ஆண் தொடங்குகிறான். அதையடுத்து அந்தப் பெண் கோபத்துடன் கத்துகிறாள்.

கையில் இருக்கும் பொருட்களை தூக்கி வீசுகிறாள். அவனுடைய பொருட்களை உடைத்து அந்த மனிதனையும் தூக்கி எறிகிறாள்.

ஆனால் இந்த சண்டையின் எல்லை குறித்து ஒரு விதி இருக்கிறது. அந்த விதியை ஒரு பெண் எப்போதும் தாண்டுவதில்லை,” என காமசூத்ராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காமசூத்ராவில் ஒரு சுவாரஸ்யமான தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு நூறு சதவீதம் ஆதரவாக உள்ளது.

“முதலில், அந்த ஆண் அவளைக் கவர்ந்திழுக்க அவள் பின்னால் செல்லவில்லை என்றால், அது அவளுக்கு அவமானம். இரண்டாவது, இருவருக்குள்ளும் சண்டை மூண்டால், அந்த ஆண், அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.

அப்போது தான் அந்த சண்டை முடிவுக்கு வருகிறது. அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆனால் ஒரு ஆண் இதைப் பொதுவெளியில் செய்ய முடியாது.”


தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினம் பற்றிய குறிப்பு

சுஷ்ருத சம்ஹிதா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி, ஐந்து வகையான தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளனர்.

அதாவது கிளிபா எனப்படும் இந்த நபர்களின் பாலியல் நோக்குநிலைக்கு ஏற்ப ஆசிரியர் எழுதுகிறார். இவர்கள் அசேக்யா, சுகந்திகா, கும்பிகா, இர்ஷாகா மற்றும் ஷந்தா ஆகிய ஐந்து வகைகளில் அடங்குவர்.

நாரத ஸ்மிருதியில் மூன்று வகையான தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள், முகேபாகா, சேவ்யகா, இர்ஷாகா என்று குறிப்பிடப்பட்டு, அப்படிப்பட்ட ஆண்கள், பெண்களை மணந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.

தன்பாலின ஈரப்பாளர்களுக்கான ‘பாண்டா’ என்ற வார்த்தையின் கீழ் 14 வகையான ஆண்களை வாத்ஸ்யாயனர் குறிப்பிடுகிறார்.

அதேசமயம் வேத இலக்கியங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களாக உள்ள பெண்களுக்கும் பெண் பாலின அடையாளத்திற்கும் ‘நஸ்த்ரியா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெவ்வேறு நூல்களில் உள்ள குறிப்புகளிலிருந்து, ஆசிரியர் 10 வகையான விலைமாதுக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வைரிணி – மற்ற பெண்களுடன் காதல் கொள்ளும் பெண்

காமினி – ஆண், பெண் இருபாலரிடமும் காதல் கொள்ளும் பெண்

ஸ்டிரிபுன்சா – நடத்தையில் ஆண் போலச் செயல்படும் பெண்

இயூனச் – ஆண் போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண் – அவருக்கு மாதவிடாய் ஏற்படாது என்பதுடன் பெண் போன்ற மார்பகங்களும் இருக்காது.

நரசந்தா – பெண்மை முற்றாக அழிந்த ஆனால் பெண்ணாக இருப்பவர்

வர்தா- பெண்ணின் சினை முட்டை கருப்பையில் பதியும் தன்மையற்ற பெண்

சுசிவக்த்ரா அல்லது சுசிமுகி- பாலுறுப்பு போதுமான வளர்ச்சியடையாத பெண்

மலட்டுத்தன்மை – மாதவிடாய் எப்பொழுதும் ஏற்படாத பெண்

மோகபுஷ்பா – எப்போதும் கருத்தரிக்க முடியாத பெண்

புத்ராக்னி – அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்

காமசூத்ராவில் ஸ்வைரிணி என்ற பெண்ணைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் பார்கவ புராணத்தில் காமினியும், மகாபாரதத்தில் ஸ்த்ரிபுன்சாவும் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று வகையான பெண்களும் அவர்களின் பாலியல் நடத்தையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

சந்தா என்ற சமஸ்கிருத வார்த்தை, பிறவியிலேயே ஆண்மையை இழந்து பெண்ணைப் போல் நடந்து கொள்ளும் ஆணைக் குறிக்கப் பயன்படுகிறது. இதற்கு நேர் மாறாக, ஆணாக வாழ விரும்பும் பெண்ணுக்கு இயூனச் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இயூனச் என்றால் இருபாலருக்கும் இடைப்பட்ட ஒரு மூன்றாம் பாலினமாகும். இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பிறக்கும் போது, அவர்கள் ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்க முடியாது.

பண்டைய வேத இந்தியாவில், திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்தை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டிய அவசியம் எப்போதும் இருந்ததில்லை.

தற்காலத்தைப் போல் விதைப்பைகளை அகற்றுவதற்குப் பதிலாக பிறப்புறுப்புகளை துணியால் மூடிவைத்துக்கொண்டார்கள் என்று கல்வா-108 (Gay and Lesbian Vaishnav Association) என்ற சர்வதேச அமைப்பின் நிறுவனர் அமரா தாஸ் வில்ஹெல்ம் எழுதுகிறார்.

 

‘திரிதிய பிரகிருதி (மூன்றாம் பாலின மக்கள்)’ என்ற புத்தகத்தை கல்வா அமைப்பை நிறுவிய அமரா தாஸ் வில்ஹெல்ம் எழுதியுள்ளார்.

தன்பாலின ஈர்ப்பை ஏற்றுக்கொள்வது பற்றி நம் சமூகத்தில் இன்னும் அதிக வெளிப்படைத்தன்மையைக் காண முடிவதில்லை.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். சில நாடுகளில் இதற்கான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இன்று LGBTQ என்று அழைக்கப்படும் சமூகம் தங்கள் பாலின அடையாளத்தை மரியாதையுடன் அடைய வெவ்வேறு நிலைகளில் போராட வேண்டியுள்ளது.

ஆனால், பண்டைய இந்தியாவில், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகமாக இருந்தது. அவர்களின் வெவ்வேறு அடையாளங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

வேத இலக்கியங்களில் பாலின வேறுபாடு எப்படி இருந்தது என்பது குறித்து கல்வா அமைப்பு ஆராய்ந்து எழுதியுள்ளது.

‘திரிதிய பிரகிருதி- மூன்றாம் பாலின மக்கள்’ என்ற புத்தகத்தை கல்வா அமைப்பை நிறுவிய அமரா தாஸ் வில்ஹெல்ம் எழுதியுள்ளார்.

நாரத ஸ்மிருதி, சுஸ்ருத சம்ஹிதை மற்றும் வாத்ஸ்யாயனர் ஆகியோரால் எழுதப்பட்ட பண்டைய நூல்களில் இது போன்ற நபர்கள் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காமசூத்ரா, ‘மூன்றாவது இயல்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகள்

பாலினம் மற்றும் தனிப்பட்ட பாலின வேறுபாடுகள் இந்தியாவின் பண்டைய நூல்களில் இடம் பெற்றிருந்ததால், இந்தியர்கள் அவற்றை நன்கு புரிந்துவைத்திருந்தனர்.

மாறிவரும் காலங்களில் இந்த சமூகக் கூறுகள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டன? அவர்களை சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள எப்போதிருந்து தயக்கம் ஏற்பட்டது?

ஆங்கிலேய காலனித்துவ மனநிலையின் தாக்கத்தால் நாம் இன்னும் அவதிப்பட்டு வருகிறோம் என்கிறார் எழுத்தாளரும் பேராசிரியருமான மாதவி மேனன்.

“காமசூத்ராவில் இருந்தே, இப்போது திரிதியபந்தி என்று அழைக்கும் ‘மூன்றாம் பாலினம்’ பற்றிய உணர்வுப்பூர்வமான புரிதல் நமக்கு இருந்தது,” என்கிறார் அவர்.

“‘ஹிஜ்தாஸ்’ என்று அழைக்கப்பட்டவர்களுக்கு முகலாய அரசவையில் கௌரவமான இடம் இருந்தது. பல்வேறு சடங்குகள் மற்றும் சமய நிகழ்வுகளில் அவர்களின் இருப்பு மங்கலகரமானதாகக் கருதப்பட்டது.”

“ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தனர், இதற்கெல்லாம் அவர்களின் முதல் எதிர்வினையாக எழுந்த கேள்விகள் – இது என்ன? ஒரு ஆண் எப்படி பெண் வேஷம் போட முடியும்?”

இது போல் சிந்தித்த ஆங்கிலேயர்கள், ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து, ஒரு நபர் பாலினத்திற்கு ஏற்ப பொது இடங்களில் ஆடை அணியவில்லை என்றால், அந்த நபர் கைது செய்யப்படலாம் என்று சட்டம் இயற்றினார்கள் என்றும், இனப்பெருக்கம் செய்யும் பாலுணர்வின் கட்டமைப்பிற்குள் பொருந்தாத அனைத்தையும் அவர்கள் குற்றமாக்கினர் என்றும் அவர் கூறுகிறார்.

 

தன்பாலின ஈர்ப்பாளர்களைக் குறிக்கும் கோவில் சிற்பங்கள்

பழங்கால இந்தியாவின் தாராளமயக் கண்ணோட்டம் பாலியல் குறித்த விஷயங்களை வெறும் புத்தகங்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் பழங்கால சிற்பங்களிலும் காணப்படுகின்றன.

புகழ்பெற்ற எழுத்தாளரும் புராண அறிஞருமான தேவதத்த பட்நாயக் இந்த சிற்பங்களைப் பற்றி கூறும் போது, “காஞ்சிபுரம், கோனார்க், கஜுராஹோ போன்ற கோயில்களின் சுவர்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் செயல்களைப் பற்றிய சித்தரிப்புகள் உள்ளன. அவை பொதுவாக பெண்களை உணர்ச்சிவசப்பட்ட அரவணைப்பில் காட்டுகின்றன.

அந்த சிற்பங்கள் காதல் உணர்ச்சியில் மூழ்கியிருக்கும் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஆண்களை மகிழ்விப்பதற்காக கோவிலில் நடனம் ஆடுபவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன,” என்கிறார்.

காரபுரியில் உள்ள இந்த குகை 8 அல்லது 9-ம் நூற்றாண்டைச் சேர்தந்தது எனக்கருதப்படுகிறது

“அந்த வகையில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்ளும் படங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

ஒருவேளை சுவர்களில் மூன்றாம் பாலினத்தவர்களின் படங்கள் இருக்கலாம் அல்லது நாம் அவர்களை ஆண்கள் என்பதற்குப் பதிலாக பெண்கள் என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். அது பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்தது.”

வேதகால இந்தியா மற்றும் புராணங்களில் பாலுறவு பற்றிய இந்தக் கருத்துகள் காலப்போக்கில் எவ்வாறு பின்வாங்கின என்பதை தேவதத் விளக்குகிறார்.

“இந்தக் கருத்துகள் மறையவில்லை. இன்றும் மதுராவின் விருந்தாவனத்தில் சிவன் பெண்ணாகப் போற்றப்படுகிறார்.

ஆந்திராவில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படும் போது, திருப்பதி பாலாஜிக்கு புடவை உடுத்தி வழிபடுகின்றனர்.

கர்நாடகாவில் புலிகம்மா தேவிக்கு மீசை வைக்கப்பட்டுள்ளது. ஆண் தெய்வங்கள் பெண் வேடமிடும்போது, ​​பெண் தெய்வங்கள் ஆண்களின் ஆபரணங்கள் அணிந்து காட்சியளிக்கின்றனர். நமது சிந்தனை மிகவும் வித்தியாசமானது.”

மனித வாழ்க்கையின் ஒரு பகுதியான பாலுறவு குறித்து அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பது பண்டைய இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கமாகவே கருதப்பட்டது.

கோவிலில் உள்ள இந்த படங்களைப் பற்றி பேசுகையில், கஜுராஹோவில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் நரேந்திரன், பாலுறவு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதியாகும் என்பதால் அது தொடர்பான காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன என்று கூறுகிறார். கஜுராஹோ போன்ற கோவில்களில் சிற்பங்கள் மூலம் அவை காட்டப்பட்டுள்ளன.

அவர் மேலும் கூறுகையில், “கஜுராஹோ ஒரு மத ரீதியான தலைநகரம் மட்டுமல்ல. இது ஒரு புகழ்பெற்ற பாடசாலையைக் கொண்ட இடமாகவும் இருந்தது. இது கலையைப் பற்றியது மட்டுமல்ல; தன்பாலின ஈர்ப்பாளர்களின் செயல்களைப் பற்றிக் காட்டப்பட்டாலும், உடல் உறவின் தரம் குறித்தும் இக்காட்சிகள் பல விஷயங்களை உணர்த்துகின்றன. இந்தச்சிற்பங்கள், நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியையும் அதைச் சுற்றியுள்ள மர்மத்தையும் தீர்க்கும் முயற்சியாகத் தெரிகின்றன,” என்கிறார்.

ஆனால் இங்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தச் சிற்பங்களை அவ்வளவு திறந்த மனதுடன் பார்ப்பதில்லை என்பது நரேந்திரனின் அனுபவம்.

“இங்கு வரும் பல சுற்றுலாப் பயணிகள், நாங்கள் இந்தக் கோயில்களைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

ஏனெனில் அதில் சிற்றின்பக் காட்சிகள் உள்ளன. எங்களுடன் குழந்தைகள் உள்ளனர், நாங்கள் குடும்பத்துடன் வந்துள்ளோம் என்கின்றனர்,” என்கிறார் நரேந்திரன்.

இந்த சிற்பங்கள் கலை மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைக் காட்டுகின்றன என்பதை நாம் இன்னும் அறியவில்லை என்று அவர் வருந்துகிறார்.

காமசூத்ரா அல்லது கோவில்களில் உள்ள பழங்கால சிற்பங்களில் மட்டுமல்ல, பல இந்து நூல்கள், இலக்கியங்கள், காம வாழ்க்கை மற்றும் பாலுணர்வு பற்றி நிறைய விஷயங்களைப் பேசுகின்றன.

சிவன்-பார்வதியின் காதல் பற்றிய விஷயங்கள் கூட இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

14ஆம் நூற்றாண்டில் ஜெயதேவா, ‘கித் கோவிந்த்’ என்ற கவிதையை எழுதினார். கிருஷ்ணர் ஒரு பெண்ணைப் போன்று உடையணிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படங்களைப் பார்க்கலாம். ராதாவும், கிருஷ்ணரும் ஒரே மாதிரி ஆடைகளை அணிந்திருப்பது போன்ற சில காட்சிகளும் உள்ளன.

“அர்த்தநாரீஸ்வரரின் உருவம் என்ன? பாதி சிவன் பாதி பார்வதி. இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சியின்படி, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் ஆணும், பெண்ணும் இணைந்து உடலுறவு கொள்வது மட்டுமல்ல, அந்த இருபாலின அடையாளத்துக்கும் அப்பாற்பட்டதாக இந்தப் படம் அமைந்துள்ளது,” என்கிறார் அவர்.

அதனால்தான் ஆன்மீகம் புனிதமானது என்றும், பாலுறவு தூய்மையற்றது என்றும் நீங்கள் நினைத்தால், அதை மாற்றி யோசிக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதை வலியுறுத்தும் அவசியம் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஆன்மீகத்தையும், பாலுணர்வையும் ஒரே சூத்திரத்தில் பிணைக்க முயற்சித்தோம். அது தான் காமசூத்ராவின் காலம்.

Share.
Leave A Reply