மேற்கு வங்கத்தில், வாரச் சந்தையொன்றில் பெண்கள் கும்பல் ஒன்று, இரண்டு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிப்பூர் இனக்கலவரத்தில் குக்கி பழங்குடி சமூகத்தின் பெண்கள் இரண்டு பேரை, பழங்குடியல்லாத மைதேயி சமூகத்தின் ஆண்கள் குழுவொன்று, நிர்வாணமாகச் சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பின்னர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.

கடந்து மூன்று நாள்களுக்கு முன்பு வீடியோவாக வெளியான இந்தச் சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் ஒரு மணிப்பூராக, வாரச் சந்தையொன்றில் பெண்கள் கும்பல் ஒன்று இரண்டு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து இந்தச் சம்பவம் வெளிவந்திருக்கிறது. அந்த வீடியோவில், பழங்குடிப் பெண்கள் இருவரை, பெண்கள் கூட்டமொன்று சரமாரியாகத் தாக்கி, ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியது.

இந்தச் சம்பவத்தின்போது சுற்றியிருந்த மக்கள் யாரும், அந்தப் பழங்குடியினப் பெண்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதன் அடிப்படையில், மாணிக்கசாக் பகுதியைச் சேர்ந்த ஐந்து பழங்குடியினப் பெண்கள், உள்ளூர் பொருள்களை விற்பனை செய்ய சந்தைக்கு வந்தபோது, சில பெண்கள், அவர்களைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் பிடிக்க முயன்றிருக்கின்றனர்.

அப்போது மூன்று பேர் பயந்து ஓடிவிட்டதையடுத்து, இரண்டு பேரை பெண்கள் குழுவொன்று சுற்றிவளைத்து நிர்வாணமாக்கித் தாக்கியிருக்கின்றனர்.

பின்னர் வீடியோ குறித்த விசாரணையில், இந்தச் சம்பவம் மால்டா மாவட்டத்தின் பமாங்கோலாவிலுள்ள வாரச் சந்தையில் ஜூலை 19-ம் தேதியன்று நடந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது.

Share.
Leave A Reply