முல்லைத்தீவு மனித புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
ஹர்த்தாலை முன்னிட்டு, பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் பேருந்துகள் சில மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
சில இடங்களின் நெடுந்தூர பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் ஆதரவினை தெரிவித்துள்ளன.
மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் மனித புதைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்துடன் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய ஹர்த்தாலுக்கு முழுமையாக ஆதரவினை வழங்கியுள்ளனர்.
ஹர்த்தால் காரணமாக வடக்கு – கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.