சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று (28) காலை புறப்படத் தயாராக இருந்தது.

விமானத்தில் பயணிக்க வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவகஜன் லிட்டி (43) என்ற பெண், பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதேபோல், கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர் தனது மனைவியுடன் பிசினஸ் விசாவில் சென்னைக்கு சென்றார்.

அவர் குடியுரிமை சோதனை முடித்து விட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். விமான நிலைய மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்ததில் அவரும் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி விமான நிலைய பொலிசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இலங்கை பயணிகள் உயிரிழந்தது பற்றி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Share.
Leave A Reply