ஏ – 9 வீதி, வவுனியா ஓமந்தை பகுதியில் உள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30) அதிகாலை 1மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றைய ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
இன்று(30) இரவு 1மணியளவில் குறித்த சோதனை சாவடிக்கு அருகில் வாகனம் ஒன்று பழுதடைந்து நின்றுள்ளது . அதனை வவுனியா நகர்நோக்கி உள்ள வாகனம் திருத்தும் இடத்திற்கு கொண்டு செல்வதற்காக உழவு இயந்திரத்தினூடாக கட்டி இழுப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது அதே திசையில் பயணித்த பாரஊர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரம் மற்றும் ஏனைய வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஏனைய நபர் ஒருவர் படுகாயமடைந்து 1990 நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது