இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து, உடலை இரகசியமாக புதைத்துவிட்டு, அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்தகுற்றச்சாட்டில் கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரிதிமாலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சுமார் இரண்டு வருடங்களாக காணாமல் போயுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது, அவர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலத்தால், காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து, தகராறொன்றின்போது, தமது மனைவியை தாக்கி தாம் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன், தானும் தமது மகனும், இணைந்து சடலத்தை கழிவறை குழியில் இட்டு மூடியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் 72 வயதுடைய அவரது கணவரும், 26 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பெண்ணின் சடலத்தை எதிர்வரும் ஒகஸ்ட் 10 ஆம் திகதி மீளத் தோண்டி எடுக்குமாறும் நீதிவான் உத்தரவிடுள்ளார்.