கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். இதனால் மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.
அதன்பின் அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. அதன்பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.8 சதவீதமாக உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பண வீக்கம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 சதவீதமாக இருந்த பண வீக்கம், ஜூலை மாதம் 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.
இது இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கூறும்போது, பண வீக்கம் மேலும் மிதமானதாகவும், நடுத்தர காலத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை சுற்றி ஸ்திரமாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.