அண்மைக்காலமாக நாடு விட்டு நாடு சென்றும் தமது நாட்டின் எல்லைப்பகுதியை கடந்து சென்றும் காதல் திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருகின்றது. இதற்குப் பிரதான காரணமாக சமூக ஊடக நட்பே காரணமாகவுள்ளது.

இவ்வாறு நட்பில் இணையும் பலர் இறுதியில் வாழ்க்கையிலும் இணைந்து விடுகின்றனர். ஆனால் இப்படி இணைபவர்களில் ஒன்றில் ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் முடித்து பிள்ளைகளுடன் இருப்பது தான் இந்த எல்லைத்தாண்டிய இணைவில் பேசப்படும் முக்கிய விடயமாக இருக்கின்றது.

அண்மையில் இப்படி இடம்பெற்ற ஒரு சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளையும் அதிர வைத்தது. மத்திய பிரதேசம் குவாலியுர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

இவர் பேஸ்புக் மூலம் பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த நஸ்ருல்லாவை என்பவருடன் நட்பு கொண்டுள்ளார். பின்பு இது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தனது காதலரை சந்திக்க அஞ்சு தனது குடும்பத்தை விட்டு பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது அஞ்சுவின் குடும்பத்தினரை மாத்திரமின்ற முழு இந்தியாவையும் அதிரவைத்துள்ளது. பாகிஸ்தான் இந்தியாவின் பரம எதிரி நாடாக உள்ளது. இங்கு திருமணம் முடித்து குடும்பமாக வாழ்ந்து வரும் பெண் ஒருவர் இவ்வாறு சட்டரீதியற்ற முறையில் நாட்டின் எல்லைப்பகுதியைத் தாண்டிச்சென்று அங்கு ஒருவரை திருமணம் முடிப்பெதென்றால்…?

இப்படியான எல்லைத் தாண்டிச்சென்று திருமணம் செய்து கொள்ளும் கலாசாரத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவரும் இப்போது வெளிப்பட்டுள்ளார். இவர் பெயர் விக்னேஸ்வரி. 25 வயதாகும் இவர் பேஸ்புக் மூலம் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் லஷ்மண் 28 வயது இளைஞர் ஒருவரை நட்பு கொண்டு அவரை திருமணம் முடிக்கவும் முடிவு செய்தார். இருவரும் சுமார் 7 வருடங்கள் பேஸ்புக் மூலமாகவே காதலித்து வந்துள்ளனர் என்பது முக்கிய விடயம்.

அதன்படி, அவர் கடந்த ஜுலை மாதம் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று லஷ்மணனை சந்தித்து திருமணமும் செய்து கொண்டார். இப்போது இவரது சுற்றுலா வீசாவானது ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் படி அவர் அந்த திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும். அவர் தனது வீசா காலத்தை நீடிக்கும்படி எந்த கோரிக்கைகளையும் முன்வைக்காத பட்சத்தில் அவரது வீசா காலம் நீடிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நடந்தால் வீசா விதிமுறைகளை மீறியதற்காக அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படலாம். அதன் பின்பு அவர் செல்வதில் சட்டசிக்கல்கள் எழலாம். இந்த தகவல்களை உள்ளடக்கி அவருக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடனடியாக செயற்பட்ட விக்னேஸ்வரி தனது வீசா காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பு செய்வதற்கான விண்ணப்பத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்திய குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தையும் அவர் அனுப்பியுள்ளதாக அவர் வசிக்கும் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்ட பொலிஸ் பிரதான டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக்கு தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜுலை 8 ஆம் திகதி விக்னேஸ்வரி ஆந்திரா வந்தடைந்துள்ளார். பின்பு 20 ஆம் திகதி லஷ்மணனும் விக்னேஸ்வரியும் ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரையும் மணமகனின் பெற்றோர் ஆசிர்வதித்து திருமணத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விக்னேஸ்வரி வேறு நாட்டவர் என்பதால் லஷ்மணனின் பெற்றோர் இது குறித்து மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பிற்காக தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸாரும் இந்த திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்யும்படி அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

ஆனால் விக்னேஸ்வரி மற்றும் லஷ்மண் இருவருக்கும் இது முதலாவது திருமணம் என்றபடியால் சட்டசிக்கல்கள் இருக்காது எனக் கூறப்படுகின்றது. லஷ்மண் அங்கு சொந்தமாக தச்சுத் தொழில் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் சில நேரங்களில் அவர் இலங்கைக்கே அனுப்பப்படலாம். அவரது திருமண வாழ்க்கை என்னாவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறு பேஸ்புக் நட்பு மூலம் குடும்பத்தினரை விட்டுச் செல்வது அங்கு போய் திருமணம் செய்து கொண்டு அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு சட்ட விதிகள் தெரியாமல் மாட்டிக்கொள்வது என நாளுக்கு நாள் இவ்வாறான பிரச்சினைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

ஒரு ஆணும் பெண்ணும் பேஸ் புக் மூலமாக நட்பு கொண்டு காதல் கொண்டு சட்டரீதியாக இணைவதில் தவறேதும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஏற்கனவே திருமணம் முடித்து பிள்ளைகள் கணவருடன் இருக்கும் இல்லதரசிகளும் அவ்வாறே குடும்பத்துடன் இருக்கும் குடும்பஸ்தர்களும் இவ்வாறு செய்யத்தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை கூற முடியாதுள்ளது. பேஸ்புக் நல்லதும் செய்கின்றது. இவ்வாறு குடும்பங்களை பிரித்து வைக்கும் சம்பவங்களுக்கும் காரணமாகி போய் விட்டது.

Share.
Leave A Reply