1983 ஜூலையில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொ­லைகள் அரங்­கேற்­றப்­பட்டு நாற்­பது ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும், தமிழர் விரோத மன­நிலை தெற்கில் மாற்­ற­ம­டை­ய­வில்லை.

1983 ஜூலை 24ஆம் திகதி மாலையில், தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட இடம் பொர­ளையில் உள்ள கனத்தை மயானம் தான்.

திரு­நெல்­வேலி தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 13 படை­யி­னரின் சட­லங்­களும் அங்கு கொண்டு வரப்­பட்டு அடக்கம் செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்ட நிலையில் – கனத்­தையில் கூடி­யி­ருந்­த­வர்­களால் தான் கறுப்பு ஜூலை கல­வ­ரங்கள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன.

அதே இடத்தில் கடந்த வாரம் நினைவு கூரலை முன்­னெ­டுக்க முயன்ற போது, சிங்­களப் பேரி­ன­வா­திகள் அதனைத் தடுத்­தனர்.

அவர்­க­ளுடன் சேர்ந்த சில பொலிஸ் அதி­கா­ரி­களும் தீபத்தை காலால் உடைத்து, 40 ஆண்­டு­களைக் கடந்தும், அவர்­களின் மன­நிலை மாற­வில்லை என்­பதை உணர்த்­தினர்.

கறுப்பு ஜூலையில் கொல்­லப்­பட்­ட­வர்கள் தமிழ் மக்கள் அல்ல, விடு­தலைப் புலிகள் தான் என்று இப்­போது சிலர் புது நியாயம் கற்­பிக்­கின்­றனர்.

கொழும்­பிலும், தென்­னி­லங்­கை­யிலும் அப்­பாவித் தமி­ழர்­களைக் கொன்று குவித்து விட்டு, அவர்­களை புலிகள் என்று கூறு­கின்­ற­வர்கள், முள்­ளி­வாய்க்­காலில் இனப்­ப­டு­கொலை நடக்­க­வில்லை. கொல்­லப்­பட்­ட­வர்கள் எல்லாம் புலிகள் தான் என்று கூறி­யதை ஆச்­ச­ரி­யத்­துடன் பார்க்க முடி­யாது.

உண்­மையை மறைப்­பதும், குற்­ற­வா­ளி­களை பாது­காப்­பதும் இலங்­கையில் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட  கொள்­கை­யாக பின்­பற்­றப்­ப­டு­கி­றது.

அதனால் தான் தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்து, பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கப் போவ­தாக அர­சாங்கம் கூறு­கின்­றதை தமிழ் மக்­களால் நம்ப முடி­ய­வில்லை.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு நம்­ப­க­மா­ன­தாக இருக்க வேண்டும் என்­ப­துடன், அது குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிக்கும் அதி­காரம் கொண்­ட­தா­கவும் இருக்க வேண்டும்.

அது பொறுப்­புக்­கூ­றலை உறுதி செய்யும் பொறி­மு­றை­யாக இருக்க வேண்­டுமே தவிர, இணக்­க­சபை போல அமைந்து விடக் கூடாது என்றே பாதிக்­கப்­பட்ட சமூ­கங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன.

கறுப்பு ஜூலையில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களை புலிகள் என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்­கை­யினால், எவ்­வாறு பொறுப்­புக்­கூ­றலை உறுதி செய்ய முடியும் என்ற கேள்வி நீடிக்­கி­றது.

கறுப்பு ஜூலையை நினைவு கூரவே  அனு­ம­திக்­காத நாட்டில் எவ்­வாறு கறுப்பு ஜூலையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்?

கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்கள் பல்­வேறு அர­சியல் பொரு­ளா­தார, வாழ்­வியல் மாற்­றங்­களை தமி­ழர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது.

தனி­நாடு தான் தீர்வு என்று நம்­பிய தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்திப் போரா­டி­னார்கள். இந்த நாட்டில் வாழவும் முடி­யாது, வாழவும் விட­மாட்­டார்கள் என்ற நிலைக்கு உள்­ளான தமி­ழர்கள், வெளி­நா­டு­க­ளுக்குப் புலம்­பெ­யர்ந்­தார்கள்.

அவர்கள் இன்று வலு­வான புலம்­பெயர் சமூ­கங்­க­ளாக- பொரு­ளா­தார பலம் படைத்­த­வர்­க­ளாக மாறி­யுள்­ளனர்.

அந்த மாற்­றத்­துக்கு அடிப்­படைக் கார­ணமே, கறுப்பு ஜூலை கல­வரம் தான்.

கனே­டியப் பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டு தோறும் இலங்கை அர­சுக்கு எரிச்­ச­லூட்­டு­கின்ற அறிக்­கை­களை வெளி­யி­டவும் அதுதான் காரணம்.

அண்­மையில் கூட கறுப்பு ஜூலையை முன்­னிட்டு கனே­டியப் பிர­தமர் வெளி­யிட்ட அறிக்­கையும், கொழும்பில் உள்ள கனே­டிய தூதுவர் எரிக் வோல்ஷ் சமூக ஊட­கங்­களில் இட்­டி­ருந்த பதிவும், சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியும் அதனை கண்­டித்­தி­ருக்­கிறார். வெளி­நா­டுகள் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் தலை­யிட முனை­வ­தாக அவர் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார்.

சரத் வீர­சே­க­ரவும் அதே­கு­ர­லில் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தற்கு கனே­டிய தூது­வ­ருக்கு உரி­மை­யில்லை என்றும், அவரை வேண்­டாத நப­ராக அறி­வித்து நாட்டை விட்டு வெளி­யேற்ற வேண்டும் என்றும் அவர் கோரி­யி­ருக்­கிறார்.

அண்­மைக்­கா­ல­மாக அர­சாங்கம் கன­டாவின் நிலைப்­பாட்­டுக்கு எதி­ரா­கவே கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

இதனை கன­டாவும் அறிந்­தி­ருக்­கி­றது என்­பதை கனே­டியப் பிர­த­மரின் கறுப்பு ஜூலை அறிக்கை உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

“இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைகள் மீறல்­க­ளுக்கும், அத்­து­மீ­றல்­க­ளுக்கும், பொறுப்பு கூறப்­பட வேண்டும் என நாம் இன்றும் தொடர்ந்து கோரு­கின்றோம். மனித உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­பதை கனடா ஒரு­போதும் நிறுத்­த­ மாட்­டாது.” என்று கனே­டியப் பிர­த­மரின் அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இது இலங்கை அரசின் அண்­மைய அறிக்­கைகள், பிர­தி­ப­லிப்­பு­களின் விளைவுதான்.

தென்­னி­லங்­கையில் வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள், எதிர்ப்­புகள், மத்­தியில் கனடா தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யா­கவே இருக்­கி­றது.

கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கடந்த வாரம் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார் பிர­தமர் ட்ரூடோ.

இதற்குப் பின்னர் தான், கன­டாவின் அறிக்­கை­களும், செயற்­பா­டு­களும் நல்­லி­ணக்­கத்­தையும் அமை­தி­யையும் ஏற்­ப­டுத்த உத­வாது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கை அர­சாங்­கத்­துக்கும் கன­டா­வுக்கும் இடையில் ஒரு இரா­ஜ­தந்­திர மோதல் உரு­வாகி வரு­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்தும் இன்­னொரு விட­யமும் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை தனது அ­மைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைத்த கனே­டியப் பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்­சியின் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கெரி ஆனந்­த­சங்­க­ரியை சுதேச உற­வுகள் அமைச்­ச­ராக நிய­மித்­துள்ளார்.

இந்த அமைச்சர் நிய­மனம் இடம்­பெற்ற சூழல் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒன்று. ஏனென்றால், கறுப்பு ஜூலை கல­வ­ரங்கள் நிகழ்ந்த 40 ஆண்­டுகள் நிறை­வ­டையும் சூழலில், அந்தக் கல­வ­ரத்­தினால் கன­டாவில் குடி­யேறி சக்­தி­வாய்ந்த புலம்­பெயர் சமூ­கங்­களில் ஒன்­றாக மாறிய தமி­ழர்­களின் சார்பில் தெரி­வான உறுப்­பி­னரை அமைச்­ச­ராக்­கி­யி­ருக்­கிறார் ட்ரூடோ.

கனே­டிய அர­சியல் வர­லாற்றில் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டது இதுவே முதல்­முறை.

அதுவும், கெரி  ஆனந்­த­சங்­க­ரிக்கு இலங்கை அர­சாங்கம் வீசா வழங்க மறுத்த பின்னர் தான் இந்த நிய­மனம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

க‍னே­டிய நாடா­ளு­மன்­றத்தில் இனப்­ப­டு­கொலை நாள் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தற்கு காரணம் என்று கெரி ஆனந்­த­சங்­கரி மீது இலங்கை அர­சாங்கம் வெறுப்­புடன் உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளாக மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் கோட்­டா­பய ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ராக பயணத் தடையை கனடா அறி­வித்த பின்னர், இந்த வெறுப்பு இன்னும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

பொறுப்­புக்­கூ­ற­லையும், நீதி­யையும் கனடா வலி­யு­றுத்­து­வதும் கொழும்­புக்கு கடும் எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இதனால் தான், கன­டாவின் செயற்­பா­டு­க­ளுக்கு கார­ண­மா­னவர் என்று கெரி ஆனந்­த­ சங்­க­ரியை இலங்­கைக்கு வரு­வ­தற்கு அர­சாங்கம் தடை­வி­தித்­தது. இலங்­கைக்கு வரு­வ­தற்­கான தடை தொடர்­பான தக­வலை கெரி ஆனந்தசங்கரி, வெளியிட்ட நிலையில் தான் அவரை அமைச்சராக நியமித்திருக்கிறார் பிரதமர் ட்ரூடோ.

கனேடிய அமைச்சர் ஒருவர் இலங்கை வருவதற்கு அரசாங்கத்தினால் தடை போட முடியாது. அவ்வாறு தடை போட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக நியமிக்கப் பட்டது, இலங்கைக்கு அழுத்தங்களை இன்னும் அதிகரிக்கும். இது கனடாவின் ஒரு இராஜதந்திர நடவடிக்கை மாத்திரம் அல்ல.

அவர் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப் பட்ட  தடைக்கு எதிரான ஒரு எதிர்வினையும் கூட.

பொறுப்புக்கூறலையும் நீதியையும் கனடா வலியுறுத்துகின்ற நிலையில், கனடாவுடன் இலங்கை முரண்படுவதும் முட்டிக் கொள்வதும், கொழும்புக்கு சிக்கலையே ஏற்படுத்தும்.

கெரி ஆனந்தசங்கரியின் அமைச்சர் நியமனமும் அதற்கான அறிகுறிகளையே வெளிப்படுத்துகிறது.

-ஹரி­கரன்

Share.
Leave A Reply