1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழர் விரோத மனநிலை தெற்கில் மாற்றமடையவில்லை.
1983 ஜூலை 24ஆம் திகதி மாலையில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடம் பொரளையில் உள்ள கனத்தை மயானம் தான்.
திருநெல்வேலி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 படையினரின் சடலங்களும் அங்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் – கனத்தையில் கூடியிருந்தவர்களால் தான் கறுப்பு ஜூலை கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதே இடத்தில் கடந்த வாரம் நினைவு கூரலை முன்னெடுக்க முயன்ற போது, சிங்களப் பேரினவாதிகள் அதனைத் தடுத்தனர்.
அவர்களுடன் சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகளும் தீபத்தை காலால் உடைத்து, 40 ஆண்டுகளைக் கடந்தும், அவர்களின் மனநிலை மாறவில்லை என்பதை உணர்த்தினர்.
கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்கள் அல்ல, விடுதலைப் புலிகள் தான் என்று இப்போது சிலர் புது நியாயம் கற்பிக்கின்றனர்.
கொழும்பிலும், தென்னிலங்கையிலும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து விட்டு, அவர்களை புலிகள் என்று கூறுகின்றவர்கள், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் எல்லாம் புலிகள் தான் என்று கூறியதை ஆச்சரியத்துடன் பார்க்க முடியாது.
உண்மையை மறைப்பதும், குற்றவாளிகளை பாதுகாப்பதும் இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொள்கையாக பின்பற்றப்படுகிறது.
அதனால் தான் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக அரசாங்கம் கூறுகின்றதை தமிழ் மக்களால் நம்ப முடியவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழு நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பதுடன், அது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
அது பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் பொறிமுறையாக இருக்க வேண்டுமே தவிர, இணக்கசபை போல அமைந்து விடக் கூடாது என்றே பாதிக்கப்பட்ட சமூகங்கள் வலியுறுத்துகின்றன.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்டவர்களை புலிகள் என அடையாளப்படுத்தும் இலங்கையினால், எவ்வாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய முடியும் என்ற கேள்வி நீடிக்கிறது.
கறுப்பு ஜூலையை நினைவு கூரவே அனுமதிக்காத நாட்டில் எவ்வாறு கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்?
கறுப்பு ஜூலைக் கலவரங்கள் பல்வேறு அரசியல் பொருளாதார, வாழ்வியல் மாற்றங்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
தனிநாடு தான் தீர்வு என்று நம்பிய தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். இந்த நாட்டில் வாழவும் முடியாது, வாழவும் விடமாட்டார்கள் என்ற நிலைக்கு உள்ளான தமிழர்கள், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள்.
அவர்கள் இன்று வலுவான புலம்பெயர் சமூகங்களாக- பொருளாதார பலம் படைத்தவர்களாக மாறியுள்ளனர்.
அந்த மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமே, கறுப்பு ஜூலை கலவரம் தான்.
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டு தோறும் இலங்கை அரசுக்கு எரிச்சலூட்டுகின்ற அறிக்கைகளை வெளியிடவும் அதுதான் காரணம்.
அண்மையில் கூட கறுப்பு ஜூலையை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கையும், கொழும்பில் உள்ள கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ் சமூக ஊடகங்களில் இட்டிருந்த பதிவும், சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் அதனை கண்டித்திருக்கிறார். வெளிநாடுகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முனைவதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சரத் வீரசேகரவும் அதேகுரலில் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு கனேடிய தூதுவருக்கு உரிமையில்லை என்றும், அவரை வேண்டாத நபராக அறிவித்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
அண்மைக்காலமாக அரசாங்கம் கனடாவின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.
இதனை கனடாவும் அறிந்திருக்கிறது என்பதை கனேடியப் பிரதமரின் கறுப்பு ஜூலை அறிக்கை உணர்த்தியிருக்கிறது.
“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும், பொறுப்பு கூறப்பட வேண்டும் என நாம் இன்றும் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்த மாட்டாது.” என்று கனேடியப் பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இது இலங்கை அரசின் அண்மைய அறிக்கைகள், பிரதிபலிப்புகளின் விளைவுதான்.
தென்னிலங்கையில் வெளியிடப்படும் கருத்துக்கள், எதிர்ப்புகள், மத்தியில் கனடா தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறது.
கறுப்பு ஜூலைக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களை கடந்த வாரம் சந்தித்துப் பேசியிருந்தார் பிரதமர் ட்ரூடோ.
இதற்குப் பின்னர் தான், கனடாவின் அறிக்கைகளும், செயற்பாடுகளும் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த உதவாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கத்துக்கும் கனடாவுக்கும் இடையில் ஒரு இராஜதந்திர மோதல் உருவாகி வருகிறது என்பதை வெளிப்படுத்தும் இன்னொரு விடயமும் அரங்கேறியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை தனது அமைச்சரவையை மாற்றியமைத்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கெரி ஆனந்தசங்கரியை சுதேச உறவுகள் அமைச்சராக நியமித்துள்ளார்.
இந்த அமைச்சர் நியமனம் இடம்பெற்ற சூழல் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், கறுப்பு ஜூலை கலவரங்கள் நிகழ்ந்த 40 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், அந்தக் கலவரத்தினால் கனடாவில் குடியேறி சக்திவாய்ந்த புலம்பெயர் சமூகங்களில் ஒன்றாக மாறிய தமிழர்களின் சார்பில் தெரிவான உறுப்பினரை அமைச்சராக்கியிருக்கிறார் ட்ரூடோ.
கனேடிய அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
அதுவும், கெரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்த பின்னர் தான் இந்த நியமனம் இடம்பெற்றிருக்கிறது.
கனேடிய நாடாளுமன்றத்தில் இனப்படுகொலை நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு காரணம் என்று கெரி ஆனந்தசங்கரி மீது இலங்கை அரசாங்கம் வெறுப்புடன் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளாக மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் கோட்டாபய ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிராக பயணத் தடையை கனடா அறிவித்த பின்னர், இந்த வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.
பொறுப்புக்கூறலையும், நீதியையும் கனடா வலியுறுத்துவதும் கொழும்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் தான், கனடாவின் செயற்பாடுகளுக்கு காரணமானவர் என்று கெரி ஆனந்த சங்கரியை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் தடைவிதித்தது. இலங்கைக்கு வருவதற்கான தடை தொடர்பான தகவலை கெரி ஆனந்தசங்கரி, வெளியிட்ட நிலையில் தான் அவரை அமைச்சராக நியமித்திருக்கிறார் பிரதமர் ட்ரூடோ.
கனேடிய அமைச்சர் ஒருவர் இலங்கை வருவதற்கு அரசாங்கத்தினால் தடை போட முடியாது. அவ்வாறு தடை போட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக நியமிக்கப் பட்டது, இலங்கைக்கு அழுத்தங்களை இன்னும் அதிகரிக்கும். இது கனடாவின் ஒரு இராஜதந்திர நடவடிக்கை மாத்திரம் அல்ல.
அவர் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப் பட்ட தடைக்கு எதிரான ஒரு எதிர்வினையும் கூட.
பொறுப்புக்கூறலையும் நீதியையும் கனடா வலியுறுத்துகின்ற நிலையில், கனடாவுடன் இலங்கை முரண்படுவதும் முட்டிக் கொள்வதும், கொழும்புக்கு சிக்கலையே ஏற்படுத்தும்.
கெரி ஆனந்தசங்கரியின் அமைச்சர் நியமனமும் அதற்கான அறிகுறிகளையே வெளிப்படுத்துகிறது.
-ஹரிகரன்–