சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான் புவி ஈர்ப்பு விசையில் இருந்துவிலக்கப்பட்டு நிலவை நோக்கிசெல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது. 5 நாட்கள் பயணத்துக்குபின் நிலவுக்கு அருகே விண்கலம் நேற்றிரவு சென்றது.
இதையடுத்து விண்கலத்தை நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் முயற்சி 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது.
அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக இன்று (ஆக.6) இரவு 11 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.