ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரான கூட்டணி குறித்து அரசியல் களத்தில் பல்வேறு இரகசிய சந்திப்புகள் மற்றும் நகர்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொழும்பு 5, மஹாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ண, அநுர பிரியதர்தன யாபா, சுசில் பிரேமஜயந்த, நிமல் லன்சா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண, பிரயங்கர ஜயரத்ண மற்றும் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய அரசியல் முன்னெடுப்புகள் குறித்து பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது முயற்சிக்கும் அரசியல் ரீதியிலான பல தீர்மானங்கள் தோல்விகளை சந்தித்து வருவதாக இதன்போது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ண, புதிய கூட்டணிக்கான முயற்சிகளை நிறுத்துமாறு பஷில் ராஜபக்ஷ கடுமையாக முயற்சித்தும், பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் வருவதாக கூறினார்.

இவற்றை நாம் பொருட்படுத்தக்கூடாது. எது நடந்தாலும் முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமாகும். எமக்கு ஆதரவளிக்க எதிர்பாராத பலரும் தற்போது முன்வந்துள்ளமை உத்வேகமளிப்பதாக அநுர பிரியதர்தன யாபா கலந்துரையாடலை தொடரும் வகையில் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ண, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் புதுமையான பல விடயங்கள் குறித்து பேசுகின்றனர்.

ஆரம்ப நிலையை உணராத வகையிலேயே அவர்கள் கருத்து கூறுகின்றனர் என்று தெரிவிக்கையில், அதற்கு மறுமொழி அளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வீதியில் நடந்து செல்ல கூட முடியாத அளவில் அரசியல் ரீதியில் தோல்வியை சந்தித்த பின்னரும் இவ்வாறான வீராப்பு பேச்சுக்கள் இவர்களுக்கு தேவை தானா என்ற கேள்வியுடன் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளை தனிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயல்பாடுகளையும் தீர்மானங்களையும் மறந்துவிட இயலாது. நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அரசியல்வாதிகளுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு, நன்றி மறந்தவர்களாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படுகின்றமை வெட்கிக்கப்பட வேண்டிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கூறினார்.

மீண்டும் ‘அப்பம்’

மாலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையாடல் 8 மணி வரை எட்டிய நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீர வந்திருந்தவர்களுக்கு இரவு போஷணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் உணவு உண்ணுவதற்கு தயாரான நிலையில், மஹிந்த அமரவீரவின் வீட்டில் ‘அப்பம்’ இல்லாமல் இருக்காது; உண்ணுவதற்கும் அச்சமாகவே உள்ளது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புன்னகையுடன் அரசியல் சாடைமொழியில் பேசினார்.

இவ்வாறு நடப்பு அரசியல் குறித்து பல தகவல்களை பரிமாறிக்கொண்டு இராப்போஷணத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசியல் கூட்டணியின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாட தொடங்கினர்.

புதிய அரசியல் கூட்டணி குறித்து பெயர் குறிப்பிடாவிடினும், அது குறித்த பிரசார நடவடிக்கைகள் பல தரப்பினர் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொகுதி அளவிலும் மாவட்ட ரீதியாகவும் விசேட கூட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜா-எல ரன்ரீச் ஹோட்டலிலும் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக கூட்டம் ஒன்று இடம்பெற்றதாக நிமல் லன்சா இதன்போது கூறினார்.

கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற இந்த கூட்டத்துக்கு 13 தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துப்படுத்தி 50க்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தொகுதி அமைப்பாளர்களை நியமித்து புதிய அரசியல் கூட்டணி குறித்து தெளிவுபடுத்தல்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் லன்சா குறிப்பிட்டார்.

ராஜகிரிய, இல. 118 அலுவலகம்

ராஜகிரிய, லேக் டிரைவ் வீதி, 118 என்ற இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு அலுவலகம் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த அலுவலகம் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு திட்டங்களையும் சந்திப்புகளையும் முன்னெடுத்திருந்தது. புதிய அரசியல் கூட்டணியில் இணையும் உறுப்பினர்களுக்கு அங்கத்துவ அட்டை அலுவலகத்தின் ஊடாகவே வழங்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்திருந்த முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் புதிய அரசியல் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர்.

அது மாத்திரமன்றி மற்றுமொரு முக்கியமான விடயம் யாதெனில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராக செயற்பட்ட சுபீஷ்வர பண்டார, பஷில் ராஜபக்ஷவின் தீவிர செயல்பாட்டாளரான எஸ். அமரசிங்க ஆகியோரும் ராஜகிரிய, இல 118 அலுவலகத்துடன் இணைந்துள்ளமை பொதுஜன பெரமுனவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இணை அமைப்புகளை புதிய அரசியல் கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் வகையில் சுபீஷ்வர பண்டார மற்றும் எஸ். அமரசிங்க ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

ரணில் – பஷில் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக அரசியல் கொந்தளிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைவதற்கு பிரதான காரணமாக புதிய அரசியல் கூட்டணியே காணப்படுகின்றது. ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் புதிய கூட்டணிக்கான திட்டபணிகளை முன்னெடுக்கின்றமையினால் பொதுஜன பெரமுவின் அரசியல் எதிர்காலம் என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக இந்த நிலைமையானது ராஜபக்ஷர்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் சவால்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

பஷில் வியூகம்

பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவை ஏற்கனவே உங்களுக்கு வழங்கியுள்ளோம். எனவே ஆளும் கட்சிக்குள் இருந்துகொண்டு புதிய கூட்டணியமைக்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று இதன் போது பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இவற்றை செவிமடுத்த ஜனாதிபதி ரணில், ‘பொதுஜன பெரமுவின் உள்ளக அரசியல் விடயங்களில் தலையிடுவது எந்தளவில் பொருத்தமானதாக இருக்கும் என்று புரியவில்லை’ என கூறி சிறு புன்னகையுடன் கருத்து கூறுவதை நிறுத்திக்கொண்டார். புதிய கூட்டணி குறித்து தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்காவிடின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அநாவசியமான சிக்கல்கள் அதிகரித்து உள்ளக நெருக்கடிகள் தீவிரமடையும். எனவே நிமல் லன்சா போன்றவர்களை அழைத்து உடன் பேசுமாறு பஷில் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

எதிர்கால தேர்தல்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் கூட்டணியை எவ்வாறேனும் தடுத்துவிட வேண்டும் என்ற வகையில் பஷில் ராஜபக்ஷ தற்போது செயல்பட தொடங்கியுள்ளார். பொதுஜன பெரமுனவில் உள்ள தனது விசுவாசிகளை கொண்டு புதிய அரசியல் கூட்டணிக்கு எதிரான வியூகங்களை பஷில் வகுத்துள்ள நிலையில், இதன் எதிரொலி ஓரிரு வாரங்களில் வெளிப்படும்.

அதிருப்தியில் லன்சா குழு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான பஷில் ராஜபக்ஷவின் சந்திப்பு குறித்தும், புதிய அரசியல் கூட்டணிக்கு எதிரான பஷில் ராஜபக்ஷவின் செயல்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா குழுவினருக்கு தகவல் கசிந்துள்ளது.

பஷில் ராஜபக்ஷவின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாகவே கடும் அதிருப்தியை தெரிவித்துள்ள நிமல் லன்சா குழுவினர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் புதிய அரசியல் கூட்டணியில் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் தரப்பினர்களாலேயே இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதற்கு குமார வெல்கம தலைமையிலான தரப்பினருக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிமல் லன்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply