அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம். நஜீம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரான ஆசிரியர் தலைமைறைவாகி இருந்தார்.

குறித்த சந்தேக நபரான ஆசிரியர் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளதுடன், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவனை துஷ்பிரயோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இச் சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ள தரம் 9 வகுப்பில் கல்வி கற்கின்ற குறித்த மாணவனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்று சென்றிருந்ததுடன் மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் மாணவன் கடந்த ஆகஸ்ட் புதன்கிழமை (2) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலங்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply