இந்த பூமியின் இயக்கத்துக்கு முக்கியமே அன்புதான். அன்பு இல்லாத உலகம் என்பது நரகத்தை விட கொடுமையான விடயமாதான் இருக்கும். ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே தூய்மையான அன்புதான்.
அந்த அன்பின் இருப்பிடம் தாய் தந்தையாகத்தான் இருக்கும். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி வளர்ப்பர். மிகுந்த பாதுகாப்புடனும் அக்கறையுடன் பாதுகாத்து வளர்க்க வேண்டிய காவலர்களே அவர்கள்தான். ஆனால் இன்றைய காலத்தில் வேலியே பயிரை மேய்வது போலதான் சிறுவர்களுக்கு எதிரான பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் பெற்றோர்களினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
பெற்றோரின் முறையான கண்காணிப்பு சிறுவர்கள் மீது இல்லாத காரணத்தாலும், அக்கறையின்மையினாலுமே 80 வீதமான சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
இன்று அன்பு என்பது அனேகமான குடும்பங்களில் இல்லாது தொலைந்து போய்விட்டது என்பதே உண்மை. நாம் குடும்பம் உறவு என்று அன்பு மிகுந்த ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கை வாழும் சமூக கட்டமைப்பை கொண்டவர்கள்.
சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி வளர்ப்பவர்களாகவே பெற்றோர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளை மனிதநேயமிக்க சிறந்த மனிதர்களாகவும் சமூகத்திற்கு சிறந்த பிரஜைகளாகவும் உருவாக்கி கொடுக்க முடியும். அப்படிதான் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர். ஆனால் இன்று அன்பு கிடைப்பதற்கு அரிய பொருள் போல ஆகிவிட்டது.
அன்பை ஊட்டி வளர்க்க வேண்டிய பெற்றோர்களே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை செய்கின்றனர். இவை அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் இன்று பல இடங்களில் சர்வசாதாரணமாக நடக்கின்ற விடயம் போலாகிவிட்டது.
எங்கோ ஒரு நாட்டில் இப்படி நடக்கின்றதாம் என முன்பு செய்திகளில் மட்டுமே பார்த்ததை சாதாரணமாக இன்று நம் நாட்டில் பார்க்கின்றோம். உறவினர்களாலோ யாரோ தெரியாத நபர்களினாலோ பிள்ளைகள் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதனைதான் நாம் இதுவரை பார்த்திருப்போம். ஆனால், பெற்றவர்களினால் பிள்ளைகள் வன்கொடுமைக்கு உள்ளாவதனை தற்போதுதான் அதிகளவில் பார்க்கின்றோம்.
உதாரணமாக அண்மையில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வீட்டில் ஏற்பட்ட சண்டையின்போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதேபோல, லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு தோட்டத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்.
குறித்த நபரின் மனைவி கொழும்பில் வேலைச் செய்து வருகின்றார். அவருடைய ஆறு குழந்தைகளையும், அவரது அம்மாவே கவனித்து வருகின்றார். எனினும், மதுபோதையில் வந்த 6 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் தனது 6 ஆவது பிள்ளையின் மீது கொதி நீரை ஊற்றியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை, லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தெரியவந்தது. இவ்வாறு அனுதினமும். ஏதோ ஒரு சம்பவம் பிள்ளைகளுக்கு எதிரான பெற்றோரின் வன்முறையாக பதிவாகி வருகின்றது.
பிள்ளையை பெற்றவர் தாக்குவதே மிக பெரிய வன்முறை எனும் போது அவர்களை பாலியர் ரீதியாக அவர்கள் துன்புறுத்துவதனை நாம் எப்படி பார்ப்பது. ஆம் பாலியல் ரீதியாக பெற்ற பிள்ளைகளை தகப்பன் துன்புறுத்தும் செயல்கள் அதிகரித்து வருவதனை அனுதினம் செய்திகளில் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களே. அவர்கள் தங்களுக்கான உரிமையுடன் வாழ வேண்டும் என்ற சட்ட வரைபு உள்ள போதிலும் அது நடைமுறையில் வாய்பற்றதாகவே அதிகமாக இன்று உள்ளது.
சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துல், பாலியல் தொல்லை கொடுத்தல், சிறுவர்களை வேலைவாங்குதல், சிறுவர்களை துன்புறுத்துதல், சிறுவர்களுக்கு அடித்தல், சிறுவர்களின் மனத்தை பாதிக்கும் வகையில் செயற்படல், மன உளைச்சலை ஏற்படுத்தல் என பல வடிவங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் நடைபெறுகின்றது.
இவை அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்கவும் முடிகிறது. அடிப்பது சித்திரவதைகள் செய்வது என்பதனை தாண்டி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். உலகில் மிக பெரிய விஞ்ஞானிகளும் ஞானிகளும் மனித நேயம்மிக்க தலைசிறந்த மக்கள் தலைமைகளும் உருவாக்கம் பெற்றமைக்கு பல பெற்றோர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் இந்த கலிகாலத்தில் பெற்ற பிள்ளைகளை பெற்றோர்களே காசுக்கு விற்கின்றனர். இதனை கூட பொருத்துக்கொள்ளலாம்.
ஆனால், தனது குழந்தைகளை தானே பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்ற கொடூர மனநிலையை உடைய ஜென்மங்களை எப்படி பொருத்து கொள்வது. இது மிக பெரிய கொடுமை. இவர்களை மிருகம் என்று கூற முடியாது ஏன் எனில் எந்த மிருகமும் இது போன்ற கொடூரத்தில் ஈடுபட்டதாக அறியவில்லை. பெரிதற்கரிய மனித பிறவியை பெற்ற சில துஷ்டர்களே இதுபோன்ற விடயங்களில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் பல ஆயிரம் இடம்பெற்றுள்ளன. சிலர் வருடக்கணக்கில் கூட பெற்ற பிள்ளையை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பத்தையும் உண்டாக்குகின்றனர். அவர்களது வாழ்க்கையையே அழித்து விடுகின்றனர். மேலும் சிலர் பெண் பிள்ளைகளை மட்டும் இன்றி ஆண் பிள்ளைகளையும் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றனர். தந்தை தான் பெற்ற பிள்ளையை துஸ்பிரயோகம் செய்யும் சந்தர்ப்பத்தில் பெற்ற தாய் அதற்கு துணை போகிற சில சம்பவங்கள் கூட உள்ளன. இது எத்தனை கொடூரமான உரிமை மீறல். மனிதம் அற்ற செயல்.
ஒரு நபர் வெற்றிகரமாக வாழ்வதற்கு தேவையான ஆற்றல், மனப்பாங்கு மற்றும் நடத்தை சார்ந்த அபிவிருத்தியின் அடித்தளம் சிறுபராயத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. அந்த சிறுபராயத்தில் அவர்களது வாழ்வை சில பெற்றோர்களே கசக்கி எரிகின்றனர். சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என்பது உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் சிறுவர்களின் சுகாதாரம், கௌரவம், மற்றும் தனனம்பிக்கையின் வளர்ச்சி பாதிப்படைகின்றன. அத்தோடு அவர்களை ஆபத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்குகிறது.
சிறுவர்கள் உடல், உள துஷ்பிரயோகம் காரணமாக மது, போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுதல், கடத்தப்படுதல், இளவயதுக் கர்ப்பம், தற்கொலை போன்றவற்றிற்கு உள்ளாக்கப்படலாம். இத்தகைய பயங்கரமான நிலைமைகள் சிறுவரின் நல் வாழ்விற்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கும் நீண்டகால அச்சுறுத்தலாகத் தொடரும்.
பிள்ளைகள் நாட்டுக்கு மட்டும் அல்ல வீட்டுக்கும் பெற்றோருக்குமே நாளைய எதிர்காலம் ஆகும். அதனை பாதுகாத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்கள் அவர்களினது வாழ்வில் அமிலத்தை வீசுகின்றனர். மிக சிறுவயதில் திருமணம் முடிக்கும் பெற்றோர்களே இது போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க வேண்டும். இல்லை என்றால் இது மிக பெரிய அச்சுறுத்தலை எமக்கு ஏற்படுத்தி விடும். ஒழுக்க கோட்பாடோடும் சமூக அக்கரையுடனும் அனைவரும் செயற்பட வேண்டும். நமது பிள்ளைகளே நமது கண்கள் அதனை நாமே குத்தி குருடாக்கிவிட கூடாது. கண்ணாக பாதுகாப்போம்.
குமார் சுகுணா