‘அரகலய’ (போராட்டம்) மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வழிவகுத்தது என்று ஏறக்குறைய 60 வீதமான மக்கள் நம்பவில்லை என்றே வெரிட்டே ரிசேர்ச் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாளை வியாழக்கிழமை ஆகஸ்ட் 10ஆம் திகதி ‘அரகலய’ போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் இருந்து வெளியேறி ஒரு வருடத்துக்குப் பிறகு, இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ஊழல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை தீர்ப்பது அவசியம் என்று 51% மக்கள் கருதுகின்றனர்.

2022 ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை ‘அரகலய’ காலி முகத்திடலில் குறிப்பிடத்தக்க இருப்பை தக்கவைத்துக்கொண்டது.

விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டதா?

‘அரகலய’ மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வழிவகுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு, 60% பேர் ‘பெரும்பாலும் இல்லை’ என்றும், 11% பேர் ‘பெரும்பாலும் ஆம்’ என்றும், 29% பேர் ‘அபிப்பிராயம் இல்லை’ என்றும் பதிலளித்துள்ளனர்.

புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் என்பன இக்காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளாகும்.

ஆட்சியா, ஸ்திரத்தன்மையா அல்லது பொருளாதார அமைப்பா?

பதிலளித்தவர்களிடம் ‘பின்வரும் கூற்றுக்களில் நீங்கள் எதை அதிகம் ஆதரிப்பீர்கள்?’ என்றும் கேட்கப்பட்டது.

1. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, ஜனநாயக அவகாசத்தை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

2. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்தை சரிசெய்ய தீர்வு காண வேண்டும்.

3. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார அமைப்பை மாற்றுவது அவசியம்.

பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 51% ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்று நம்புகிறார்கள். 34% பேர் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் 15% பேர் ஜனநாயக அவகாசத்தை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

கணக்கெடுப்பு நடத்தப்பட்ட முறை

வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட் வாக்குப்பதிவு பங்காளியாக செயல்படும் வெரிட்டே ரிசேர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Survey) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

வெரிட்டே ரிசேர்ச்சின் சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

2023 ஜூன் மாதத்தில் தேசிய மட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த 1,008 வளர்ந்தவர்களின் சீரற்ற மாதிரியை இக்கருத்துக்கணிப்பு கொண்டிருந்தது.

Share.
Leave A Reply