நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.
இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை முன்னோக்கிகொண்டு செல்வதானால் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் அவசியம் என ஜனாதிபதி பாராளுமன்றி ஆற்றிய உரையில் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.
முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமத்துவமானதும், ஒத்துழைப்புடனான அரசியல் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நம்பகத்தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் புதிய பயணத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களின் தனிப்பட்ட வாத,விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் நீண்ட கால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுகளை கூட்டாக எடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையான ஒற்றுமை தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நாட்டில் சட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மதிப்பளித்து, கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை நிலைநிறுத்தி, செயல்படுத்தும் பொறுப்பு நிறைவேற்று மற்றும் சட்டவாக்க சபை ஆகிய இரண்டுக்கும் உள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனாதிபதி, இவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மாகாண சபைகளின் வகிபாகம் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது என்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனாதிபதி, இவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மாகாண சபைகளின் வகிபாகம் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது என்றும் குறிப்பிட்டார்.
உலகின் ஆதரவுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதன் மூலம், நாட்டின் அடையாளத்தைப் பாதுகாக்கவும், ஒற்றுமையை மேம்படுத்தவும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரத்தை அதிகமாக பரவலாக்கவும் முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மாகாண சபை முறைமை, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை நிறுவப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாகவும், விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபைகளுக்கு போட்டியிடும் உரிமையை வழங்குவது, 25% அல்லது அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஆகிய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேசிய காணி ஆணைக்குழு மற்றும் தேசிய காணிக் கொள்கை என்பன விரைவில் நிறுவப்படவுள்ளதோடு, காணி ஆணைக்குழு சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் காணி பயன்பாடு தொடர்பான கொள்கைகளை தயாரிப்பதற்காக அதனை பயன்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேசிய காணி ஆணைக்குழுவின் பணிகளுக்கு வழிகாட்டுவதற்காக காணி ஆணைக்குழு கொள்கைச் சட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காணமல் போனோரை தேடும் பணிகளை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஆரம்பித்துள்ளதாகவும் காணாமல்போனவர்களைக் கண்டறியும் செயல்முறையை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யும் நோக்கில் தரவுகளை உட்படுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காணாமல் போனோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.