மீண்டும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பான சர்ச்சைகள் உச்ச நிலைக்கு வந்துள்ளன.

36 வருடங்களுக்கு முன்னர் ஜனனித்த இந்த அரசியலமைப்பு திருத்தம் இலங்கை தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட போதும் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களாலும் அதிகார தரப்பாலும் பல்வேறு வழிகளில் பின்நிலைக்கு தள்ளப்பட்டதன் விளைவாகவே இந்த நாடு இன்றைய வங்குரோத்து நிலைக்கு சென்றமைக்கான பிரதான காரணியாக காணப்படுகிறது.

13 வது திருத்தத்தை தமிழர் தரப்பிலும் எதிர்ப்பவர்கள் காணப்படுகின்றனர். தென்னிலங்கையில் இனவாத தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த போகின்றேன் என சூளுரைத்திருந்தமையும் பின்னர் இலங்கையின் பிரதான பௌத்த மத பீடங்களின் எதிர்ப்பினால் கைவிட்டிருந்தமையும் அண்மைக்கால வரலாறாகும்.

ஆனாலும் ரணில் விக்ரமசிங்க தனது இந்தியா பயணத்துக்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த பொழுது மீண்டும் 13 வது திருத்தம் தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டி பொலிஸ் அதிகாரமற்ற முழுமையான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் என குறிப்பிட்டிருந்தார்.

எனவே தமிழர் தரப்பில் இது தொடர்பான சர்ச்சைகள் மேல் வந்திருந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் மீண்டும் சர்வகட்சிகளை கூட்டி 13 வது திருத்தம் தொடர்பான கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

மேற்படி கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ரணில் விக்ரமசிங்குக்கும் இடையேயான முரண்பாடுகள் காரணமாக மேற்படி கூட்டமே முடிவுக்கு வந்திருந்த நிலை காணப்பட்டது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சுமந்திரன் கோரி நின்ற போது ரணில் விக்ரமசிங்க மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நிறைவேற்றுவதில் முதலில் கவனத்தைச் செலுத்துவோம், தேர்தல் தொடர்பான விடயம் வேறானது என்பதுடன் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியாதென விளக்கியிருந்தார்.

மேற்படி முரண்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் ரணில் விக்ரமசிங்கவின் நியாயத்தை ஏற்பவராக காணப்பட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் உருவாகியிருந்தபோது அன்றைய காலப்பகுதியில் முதலமைச்சராக இருந்த சி.வி விக்னேஸ்வரன் ரணில் விக்ரமசிங்கவுடன் அதிக முரண்பட்ட இலங்கையின் முதலமைச்சராக காணப்பட்டார். அன்றைய காலப்பகுதியில் எம்.ஏ.சுமந்திரன் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவராக காணப்பட்டிருந்தார். தற்போது நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளது.

தமிழர் தேசிய அரசியல் தலைவர்களின் ராஜதந்திர நகர்வுகள் கோணல் மாணலாக மாறியிருப்பது துர்ப்பாக்கிய நிலையாகும். தற்போது தமிழர் தரப்பில் ரணில் விக்கிரமசிங்கவை அதிகம் திட்டி தீர்க்கும் செயற்பாடுகளை தமிழ் தலைமைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கை அரசியல் சக்திகளை விட தமிழர் தரப்பின் தலைவர்களே இன்று அதிகம் ரணில் விக்ரமசிங்க மீது வசைபாடும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் தமக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் ரணில் விக்ரமசிங்கவை எதிர்நோக்கும் நிலைமைகளைவிட தென்னிலங்கை இனவாத நிகழ்ச்சிகளுடன் நிற்பவர்களுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கும் நிலைமைகளும் வலிமை பெற்று வருகிறது.

மீண்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் 13 வது திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்தியா உலகின் பலமான ஜனநாயக நாடு என்ற நிலையில் இருப்பதால் என்னதான் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடுகள் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவை தவிர்த்து இலங்கை தொடர்பாக எத்தகைய தீர்மானத்திற்கும் மேற்குலகம் செல்ல மாட்டாது.

எனவே இலங்கை தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் இந்தியாவை பகைத்து ஒரு நிலைப்பாட்டுக்கு செல்வது சாதகமான நிலையை ஒருபோதும் தோற்றுவிக்காது.

இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் வரவில் தென்னிலங்கையின் உழைக்கும் மக்களின் பங்கும் கணிசமான அளவில் உள்ளது.

1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இன வன்முறை தாக்குதல் கறுப்பு ஜுலையாக 40 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த அநியாயம் நிறைந்த கறைபடைந்த செயற்பாடுகளுக்கு எதிராக தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை பின்னைய காலப் பகுதியில் பதிவு செய்ய தொடங்கியிருந்தன.

இதில் மறைந்த பிரபல நடிகர் விஜயகுமாரதுங்க பிரதான இடத்தில் திகழ்ந்தார்.அன்றைய காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் தமிழர் மிதவாத தலைவர்கள் பின்னிலைக்குச் சென்றிருந்துடன், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி அமைப்புகளே முன்னிலைக்கு வந்திருந்தன.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியிருந்தனர். இக்காலப்பகுதியில் ஜே. ஆரின் ஐக்கிய தேசியக் கட்சியின் அணுகு முறைகளுக்கு எதிராக உருவாகியிருந்த எதிர்ப்பாளர்களுக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு கணிசமான அளவு மேல்நோக்கி நகரத் தொடங்கியிருந்தது.

விஜயகுமாரதுங்கவின் யாழ் வருகை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இக்காலப்பகுதியில் தென்னிலங்கை தொழிற்சங்கங்களின் தலைமைகளின் செயற்பாடுகளும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான நிலையை நோக்கி நகர தொடங்கியிருந்தன.

அன்றைய காலப்பகுதியில் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5000 பேர் கொண்ட தொழிலாளர் தேசிய மாநாட்டில் ( இம் மாநாட்டில் ஜே.வி.பி. கலந்து கொள்ளவில்லை). வடக்கு கிழக்கிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என மேற்படி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவானபோது அதனுடன் உருவான 13வது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை என்பவற்றுக்கு எதிராக பேரினவாத சக்திகள் தென்னிலங்கையில் மிக மோசமான வன்முறை செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.

இதனை எதிர்கொள்ள ஜே.ஆர்.தென்னிலங்கை உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி இந்த எதிர்ப்பிலிருந்து மீண்டார். இத்தகைய வன்முறைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இடதுசாரிகள் களப்பலி ஆகியிருந்தனர்.

எனவே இன்று பெரிதும் பேசப்படுகின்ற இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் தென்னிலங்கையின் உழைக்கும் மக்களின் பங்களிப்பும் பெரிய அளவில் காணப்படுகிறது. ஆனாலும் இதற்குப் பின்னர் உருவாகியிருந்த தொடர்ச்சியான தேர்தல் அரசியல்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு அரசியல் உறவுகளை கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரதான உடனடி பிரச்சினைகளான காணாமல் போனோருக்கான பதில் , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை , தமிழர் நிலங்களை கையகப்படுத்தலை நிறுத்தல், ராணுவத்தை வாபஸ் பெறுதல் என்பவற்றுடன் அரசியல் கோரிக்கைகளும் மேல் வர வேண்டும்.

இந்த பொதுக் கோரிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு அணியாக ஒரு குரலாக வெளிப்படுத்த முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை அர்ப்பணிப்பு உள்ள தலைமைகள் மூலமே முன்கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலமே மக்கள் எழுச்சி கொள்வதற்கான ஏதுநிலை ஏற்படும். இதனைத் தவிர்த்து இந்திய அரசாங்கத்துக்கு ஐந்து மகஜர்களை அனுப்பியது போன்று பிரிந்து நின்று செயல்பட நினைப்பதும் சிறிய சிறிய குழுக்களாக போராட்டங்களை நடத்துவதுடன் ஊடகங்களில் வீர வசனங்களை பேசிவிட்டு செல்வதும் அடுத்து வரும் தேர்தல்களில் இவர்களுக்கு சில வெற்றிகளை பெறுவதற்கு ஏதுவாகலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மைகளும் விளையப் போவதில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளில் தென் இலங்கை உறவு என்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எந்தளவுக்கு ஏற்கின்றார்களோ அந்தளவுக்கு உறவுகள் மேல்வர வேண்டும். அதனை விடுத்து பேரினவாத சக்திகளின் அணிகள் பக்கம் எதிரணி என்ற அளவில் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தலைமைகள் கைகோர்க்க முயல்வது தமிழர் தேசத்திற்கு எத்தகைய நன்மையும் ஒருபோதும் வழங்காது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர்களின் ஒருவரான லக்ஷ்மன் கிரியல்ல 13 வது திருத்தத்தில் உள்ள காணி ,பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்தையும் வழங்க வேண்டும் என தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருப்பது திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் அதிகாரமற்ற மாகாணசபை முறைமைக்கு ஆதரவென்ற நிலைப்பாட்டிற்கு மேலாக ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கூறியிருப்பது மிகப் பெறுமதியான நிலையாகும்.

ஆனால் வரவிருக்கும் காலப்பகுதியில் அவர்கள் இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருக்க வேண்டும். மேலும் எதிர்வரும் நாட்களில் 13வது திருத்தம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றி வலியுறுத்தி உள்ளார். இதன் மூலம் தமிழர் தேசிய பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுமானால் இலங்கையின் வரலாறு உண்மையான அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கு அதிக வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

நடராஜா ஜனகன்

Share.
Leave A Reply