கோவையில் திருமணம் மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்னையில் சூப் கடைக்காரர் பெண்ணைக் கொலைசெய்திருக்கிறார்.

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 12-ம் வகுப்புப் படிக்கும் அந்த மாணவியை, எப்போதும் ஜெகதீஸ்வரிதான் பள்ளிக்குச் சென்று அழைத்து வருவார். கடந்த வாரம் மாலை ஜெகதீஸ்வரி பள்ளிக்கு வராததால், மகளே வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது வீட்டில் ஜெகதீஸ்வரி ரத்தவெள்ளத்தில் சடலமாக இருந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவரின் நான்கரை சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு தனிப்படை போலீஸார் குற்றவாளியைத் தேடிவந்தனர். இந்த நிலையில் ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சூப் வியாபாரி மோகன்ராஜ் என்பவரை போலீஸ் கைதுசெய்திருக்கின்றனர். மோகன்ராஜ், ஜெதீஸ்வரிக்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது.

சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில், காவல்துறைக்குப் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. ஜெகதீஸ்வரி இவருடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, வேறு சிலருடன் பேசியதாகச் சந்தேகப்பட்டிருக்கிறார் மோகன்ராஜ்.

சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக ஜெகதீஸ்வரிக்கு வேறு எண்ணிலிருந்து அழைத்துப் பேசுவது, நகையைக் கொள்ளையடிப்பது என்று காவல்துறையை திசைதிருப்பியிருக்கிறார். அவர்மீது சேலத்தில் ஏற்கெனவே கொலை வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply