1823ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மலையகத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தொகுதி மக்கள் பயணித்த பாதையை மீட்டெடுக்கும் மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் மலைய எழுச்சி பேரணி இன்று சனிக்கிழமை (12) மாத்தளையில் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாளான இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவிலான பேரணி மாத்தளையை அடைந்தது.
மலையகம் 200ஐ முன்னிட்டு கடந்த 16 நாட்களாக இடம்பெற்றுவந்த மலையக எழுச்சி நடைபவனி இன்று மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைந்ததோடு நிறைவுபெற்றது.
அதனை தொடர்ந்து, பயணத்தின் இலக்கு, மலையக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான நடைபவனி நிறைவு நிகழ்வு மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும், மலையக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மாத்தளை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்கிற தொனிப்பொருளில் இந்த நடைபவனி நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமானது.
தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்தில் கலை நிகழ்வுகள் மற்றும் நினைவுத்தூபி அஞ்சலி இடம்பெற்றதோடு, மறுநாள் 29ஆம் திகதி சனிக்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தொடங்கியது.
இந்த 16 நாள் நடைபவனி நிகழ்வில் பல பிரதேசங்களின் வழியாக மலையக மக்கள் பேரணியினர் பயணித்தனர். அவர்கள் செல்கிற இடங்களில் அந்தந்த பகுதிகளி வசிக்கும் மக்கள் மலையக மக்களின் நடைபவனிக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் முழு ஆதரவினை வழங்கியிருந்தனர்.
சர்வ மத தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் பல அமைப்புகளும் பொது மக்களும் மலையக பேரணியினரை வரவேற்று உபசரித்து ஒத்துழைத்திருந்தனர். பலர் இந்த நடைபவனியில் இணைந்து நடந்தனர். பல இடங்களில் வெவ்வேறு அணியினர் போராட்டங்களையும் தனித்தனியான ஊர்வலங்களையும் நடத்தியிருந்தனர்.
இவ்வாறு தொடர்ந்த ‘மலையகம் 200’ நடைபவனியின் 16ஆம் நாளான இன்றைய தினம்மாத்தளையில் இப்பேரணி தமது பயணத்தை நிறைவு செய்துகொண்டது.