இலங்கையில் மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ‘மாண்புமிகு மலையக மக்கள்’ என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் கூட்டிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுச்சிப் பேரணி சனிக்கிழமை (12) மாத்தளையை வந்தடைந்து விசேட நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்திருந்த நடைபயணம் நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரை இடம்பெற்று முடிந்திருக்கின்றது. எதிரும் புதிருமான இந்த இரு நிகழ்வுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்து வருகின்றன.
இவ்விரு சாராரும் இரு துருவங்களாக வேறுபட்டு செயற்படாமல் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால் அது மலையக மக்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள மேலும் உந்துசக்தியாக இருந்திருப்பதோடு, சிறுபான்மையினரின் ஒன்றிணைவு இனவாதிகளுக்கு ஒரு சாட்டையடியாக இருந்திருக்குமென்றும் புத்திஜீவிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மலையக மக்கள் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து கூலித்தொழிலாளர்களாக இங்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களின் வரலாறு மிகவும் கசப்பானதாகும். இம்மக்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்வதற்கு செல்வாக்கு செலுத்திய பல்வேறு காரணிகளுள் உணவுப் பஞ்சம் முக்கிய காரணியாக அமைந்தது.
சென்னை மாகாணத்தில் 1880 – 1890 ஆண்டு காலப்பகுதியைவிட ஏனைய எல்லா தசாப்தங்களிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் எல்லா மாவட்டங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. இப்பஞ்சத்தின் காரணமாக சுமார் 40 இலட்சம் பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவலொன்று வலியுறுத்துகின்றது. இத்தகைய நிலைமைகள் தொழிலாளர்களின் இடம்பெயர்விற்கு வலுச்சேர்த்தன.
தமிழகத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய மலையக மக்கள் இங்குள்ள ஏனைய இனத்தவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாக விளங்கியதோடு அவர்களின் அலட்சியத்திற்கும் உள்ளாகியிருந்தனர். கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தையார், தோட்டக்காட்டான், இந்தியாக்காரன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு இம்மக்கள் இம்சிக்கப்பட்ட வரலாறு மிகவும் கொடுமையானதென்று கலாநிதி க.அருணாசலம் போன்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உழைப்பு என்ற ஒன்றைத்தவிர அவர்கள் வேறெதையும் சிந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைக்கவில்லை. உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையில் செல்லாக்காசாகவும், நடைப்பிணமாகவும் அம்மக்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது.
தொழிற்சங்கங்களை ஆரம்பிக்க முடியாத நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டனர். தொழிற்சங்க இயக்கத்தினர் தோட்டங்களுக்கு சென்று பணியாற்ற முடியாதவாறு 1917ஆம் ஆண்டின் 38ஆம் இலக்கச் சட்டம் தடைவிதித்தது. அதனையும் மீறி தோட்டங்களுக்கு சென்று பணியாற்ற முயன்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தோட்டத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரேஸ்கேடில் என்பவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் தெரிந்த விடயமாகும். நகர்ப்புறங்களில் இடம்பெறும் தொழிற்சங்க கூட்டங்களுக்கு செல்வதற்குக்கூட தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தொழிற்சங்க கலாசாரம் தோட்டங்களில் ஊடுருவினால் அது நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்றே கருதப்பட்டது.
மலையக மக்கள் இந்நாட்டில் காலடி எடுத்து வைத்த காலம் முதல் சொல்லொணா துயரங்களை அனுபவித்து விட்டனர். இந்நிலை இன்னும் ஓய்ந்ததாக இல்லை. இருப்பிடம், தொழில்வாய்ப்பு, பொருளாதாரம், சமூக நிலை, அரசியல், கல்வி போன்ற பல துறைகளிலும் திருப்தியற்ற வெளிப்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் இழுபறி நிலைகள் இருந்து வருகின்றன.
மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் அவ்வப்போது சில நன்மைகளை இம்மக்களின் மேம்பாடு கருதி பெற்றுக்கொடுத்து வருகின்ற போதும் இன்னும் பல பிரச்சினைகள் தொக்கி நிற்கின்றன. இம்மக்கள் இன்னும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை. தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்வதற்கான காய்நகர்த்தல்கள் இடம்பெறுகின்றபோதும் நிலைமை இன்னும் பூரணமாகவில்லை.
விசேட ஏற்பாடுகள்
மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ள நிலையில் அப்பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வினை ஏற்படுத்தி அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயற்பட வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். அம்மக்களின் பின்தங்கிய நிலைமைகளை கருத்தில்கொண்டு விசேட உதவிகளை அரசியல் யாப்பின் ஊடாக உறுதிப்படுத்தி வழங்குதல் வேண்டும். பல்கலைக்கழக அனுமதி, தொழில்வாய்ப்பு போன்றவற்றில் விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும், இம்மக்கள் தனித்தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க சர்வதேச தலையீடு அவசியமாகும் என்பதையும் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். அதிலும் இம்மக்களை தமிழகத்திலிருந்து அழைத்து வந்தவர்கள் என்ற ரீதியில் பிரித்தானியாவினதும், இலங்கைக்கு இம்மக்களை அனுப்பி வைத்தவர்கள் என்ற ரீதியில் இந்தியாவினதும் வகிபாகம் மலையக மக்களின் அபிவிருத்திக்கு மிகவும் அவசியமானது என்ற கருத்துக்களும் ஓங்கி ஒலித்தன.
இந்நிலையில் இந்தியா இம்மக்களின் வீடமைப்பு, சுகாதாரம் உட்பட பல துறைகளின் மேம்பாட்டிற்கு உதவிகளை வழங்கி வருகின்றமையும் நீங்கள் அறிந்ததாகும். இந்நிலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான நலத்திட்டங்கள் எனப் பெயரிட்டு ரூபாய் 300 கோடியினை விரைவில் இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளது.
அத்தோடு இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக, இந்தியா வழங்கவுள்ள நிதி உதவியில் முதற்கட்டமாக 450 மில்லியன் இந்திய ரூபாய் அண்மையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது.
200 வருடங்களாகியுள்ளபோதும் அம்மக்களின் பின்னடைவான நிலை இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தடையாகவுள்ளது. 200 வருட வரலாற்றை நினைவுகூறும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன.
இம்மக்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் விழாக்கள், எழுத்துப் போட்டிகள், கண்காட்சிகள், ஊர்வலங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப்பலவும் இதில் உள்ளடங்கும். மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் நோக்கில் ‘மாண்புமிகு மலையக மக்கள்’ என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் கூட்டிணைவினால் 12 நாட்கள் தொடர்ச்சியாக மலையக எழுச்சி நடைப்பயணம் இடம்பெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலத்தின் முன்பாக ஆரம்பமானது.
முருங்கன், மடு, செட்டிக்குளம், மதவாச்சி, மிஹிந்தலை, திரப்பனை, கெக்கிராவை, தம்புள்ளை, நாலந்த ஆகிய இடங்களின் ஊடாக சனிக்கிழமை (12) மாத்தளையை நடைபயணம் வந்தடைந்தது. வழிநெடுகிலும் மக்கள் இந்நடைபயணத்திற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். மாண்புமிகு மலையக மக்கள் ஒன்றியம், தேசிய கிறிஸ்தவ மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நடத்தும் இந்த பாத யாத்திரை நிறைவு விழா மாத்தளையில் இடம்பெற்றது. மலையக கலை கலாசார ஊர்வலம், சர்வமத வழிபாடுகள், நினைவுத்தூபி திறப்பு விழா,கருத்துப் பகிர்வுகள் எனப்பலவும் விழாவை அலங்கரித்த நிலையில் இது மிகவும் முக்கியத்துவமிக்க நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் முகமாக சனிக்கிழமை (12) நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரையில் ஊர்திகளுடன் கூடிய நடைப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.
சமூக உணர்வுடன் இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். அத்தோடு ‘மலையகம் 200’ நினைவுகூரும் நிகழ்வு அனைவருக்கும் பொதுவானது. நடைபயணத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல் எமது மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்போம் என்றும் திகாம்பரம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும் தலைமன்னார் பாதயாத்திரையின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளையில் இடம்பெற்ற அதேதினத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி நடைப்பயணத்தை நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரை மேற்கொள்ள அழைப்பு விடுத்தமை தொடர்பில் விமர்சனங்கள் பலவும் மேலெழுந்து வருகின்றன.
தலைமன்னார் பாதயாத்திரைக்கு ஒத்துழைப்பு வழங்கி மாத்தளையில் மலையக மக்களின் ஒன்றுகூடலுக்கு கூட்டணி வழியேற்படுத்திக் கொடுத்திருக்குமானால் அது விரும்பத்தக்கதாக இருந்திருக்கும். அதைவிடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணி எதிரும் புதிருமாக நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் என்றும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன. சிறுபான்மை அரசியல்வாதிகள் ஏற்கனவே பிரிந்து செயற்படுவதால் இம்மக்களின் உரிமைகள் மழுங்கடிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
எம்மிடையே ஐக்கியமற்ற தன்மையினை இனவாதிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மையினரை ‘கிள்ளுக் கீரையாக’ கருதி வருகின்றனர்.இந்நிலையில் நடைபயண விடயத்தில் இணைந்த செயற்பாடு இல்லாமை இனவாதிகளைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியாகவே உள்ளது. அவர்கள் எம்மவர்களை கசக்கிப் பிழிவதற்கு இத்தகைய போக்குகள் வாய்ப்பளிப்பதாக அமையும். இத்தகைய கசப்பான விடயங்கள் இனியும் இடம்பெறலாகாது என்றும் கருத்து வெளிப்பாடுகளுள்ளன.
இதேவேளை ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். மலையக மக்கள் விடயத்தில் இவ்வாறு பிரிந்து நிற்பது அவர்களின் தேசிய நீரோட்டக்கனவை மழுங்கடிப்பதாகவே அமையும் என்று மாத்தளை நிகழ்வுகளின் ஏற்பாட்டாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.சிவஞானம் தெரிவித்தார்.
துரைசாமி நடராஜா