நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் இந்த விடயங்களை தெரிவித்த ஜனாதிபதி, அரச கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். மேலும் குறித்த சதி திட்டம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்து ஜனாதிபதி கூறுகையில்,

நாட்டில் காணப்படும் வறட்சியை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியும் பிரபல ஊடகம் ஒன்றும் வன்முறைகள் ஊடாக ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்து வருகின்றன. கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை போராட்டங்களின் இறுதி இலக்கு ஆட்சி கவிழ்ப்பு சதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழுவே முன்னெடுக்கின்றது. சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை அவதானியுங்கள். ஆதாரங்களை உள்ளடக்கிய அறிக்கையையும் பாருங்கள். மீண்டும் நாட்டை வன்முறைக்குள் கொண்டுச் செல்ல இடமளிக்க முடியாது.

எனவே ஜே.வி.பியின் ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து கவனத்தில் கொள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை எதிர்வரும் நாட்களில் நியமிக்க உள்ளேன். பாதுகாப்பு தரப்புகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு தற்போது ஒரு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் முழுமையான ஒத்துழைப்புகள் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு கிடைத்துள்ளன. பல்வேறு மக்கள் நலசார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அனைத்து வழிகளிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன்.

இவற்றை சீரழித்தும் நாட்டின் அமைதியை சீர்குழைக்கவுமே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வறட்சியை காரணம் காட்டி மக்களை வன்முறைக்குள் தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது. விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகளுக்கு என கூறி சமனல குளத்திலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பதாகவே தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டதொரு செயல்பாடாகும்.

எனவே சமனல குளத்திலிருந்து தண்ணீரை விடுவித்தமை குறித்து முழுமையான அறிக்கையை கோரியுள்ளேன். யார்? எந்த நோக்கத்திற்கு இதனை செய்தார்கள் என்ற முழுமையாக விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அநாவசியமான காலப்பகுதியில் சமனல குளத்தின் நீர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் ஏற்கனவே முறையிட்டுள்ளனர்.

உடவலவ நீர்தேக்கத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாததொரு தருணத்தில் சமனல குளத்திலிருந்து எவ்வாறு நீரை விடுவிக்க முடியும். இது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போன்று உடவலவ நீர்தேக்கத்தினால் பயனடைகின்ற 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில், 13 ஆயிரம் ஏக்கர் நெல் செய்கைக்கும் ஏனைய 12 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர் செய்கைக்குமே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், 25 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிட்டமையானது, யாருடைய ஆலோசனைகளின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சினையும் அங்குள்ளது.

இந்த விடயம் குறித்தும் தனித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply