யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகம் செய்துவந்த 25 வயதான சந்தேக நபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு அல்லைப்பிட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு உள வள சிகிச்சை வழங்கப்பட்டபோது, அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்ப் பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டார்.
அந்த இளைஞர் தான் உட்பட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து, வைத்தியசாலை மூலம் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணைகள் தொடர்ந்தது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினை சட்ட வைத்திய அதிகாரியின் முன் கடந்த வியாழக்கிழமை (10) பொலிஸார் முற்படுத்தினர்.
அச்சிறுமி வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைவாக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், இன்னொரு சிறுமியும் குறித்த சந்தேக நபரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.