அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத்திட்டங்களையும் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பட்டியல், மாகாணசபையின் அதிகாரப்பட்டியல், ஒருங்கிணைந்த பட்டியல் ஆகியவற்றை மீளாய்வு செய்து தேவையான திருத்தங்களை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சிகளின் ஆதரவு பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து இணக்கப்பாட்டுக்கு வருவது கடினமாக அமையலாம்.
இதனால் முதலில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரம் தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்து நாட்டின் எதிர்காலத்துக்காக 13ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேபோன்றே மாகாணசபைக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்ட பின்னர் வேண்டுமானால் மாகாணசபைத் தேர்தலுக்கான முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்து தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் தனது உரையின்போது தெரிவித்திருக்கின்றார்.
மொத்தத்தில் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நேரடியாக நிறைவேற்றதிகாரத்தினால் நடைமுறைப்படுத்த முயலாத ஜனாதிபதி அதனை பாராளுமன்றத்தில் ஒப்புவித்திருக்கின்றார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி உருவாக்கியிருக்கின்றார்.
1987ஆம் ஆண்டு இந்திய– இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் 13ஆவது திருத்தச் சட்டம் அரசியல்யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பில் உள்ள விடயத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திடமோ அல்லது நீதிமன்றத்திடமோ அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள விடயத்தை அவர் உடனடியாகவே அமுல்படுத்த முடியும். அதற்கான அதிகாரம் அவரிடமிருக்கின்றது.
ஆனால் அவ்வாறு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விவகாரத்தை பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்ற தோரணையில் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
இதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடியும். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி வழங்கியிருந்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த ஜனாதிபதி அது குறித்து ஆராய்வதற்காக சர்வகட்சி குழுக்கூட்டங்களை நடத்தியிருந்தார்.
கடந்த ஜனவரிமாதம் 2ஆவது சர்வகட்சி குழுக்கூட்டம் இடம்பெற்றபோது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியலமைப்பில் உள்ள விடயத்தை நடைமுறைப்படுத்தாது இருந்தால் அது குறித்து சர்வதேசம் கேள்வி எழுப்பும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
13ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் தொடர்பில் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது தெற்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
நான்கு பெளத்த பீடாதிபதிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்று கடிதம் எழுதியிருந்தனர்.
அத்துடன் பாராளுமன்றத்துக்கு முன்பாக பெளத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இனவாத கட்சியினர் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக போர் முரசுகொட்டியிருந்தனர். இவ்வாறான எதிர்ப்புக்களை அடுத்து 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கல் தொடர்பான நடவடிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்திருந்தார்.
பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதிலும் 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எத்தகைய கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை.
அதன் பின்னரே பொலிஸ் அதிகாரமற்ற 13ஆவது திருத்தத்தின் அதிகாரங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் கடந்த மாதம் 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சியினரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் அதிகாரமற்ற 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் திட்டவரைபொன்றை சமர்ப்பித்திருந்தார்.
அதன் பின்னர் கடந்த மாதம் 26ஆம் திகதி சர்வகட்சி குழுக்கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களையும் கோரியிருந்தார்.
இந்த நிலையில்தான் தற்போது பாராளுமன்றத்தில் 13ஆவது திருத்தம் தொடர்பில் தனது யோசனைகளை முன்வைத்துள்ள ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பை கோரியிருக்கின்றார்.
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை தெற்கின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை.
அடுத்த வருடம் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டு வருகின்றார்.
இந்த தேர்தலில் தெற்கு சிங்கள மக்களை பகைக்காத வகையில் போட்டியிடவே அவர் விரும்புகின்றார்.
இதனால்தான் 13ஆவது திருத்தத்தை எடுத்த எடுப்பில் நடைமுறைப்படுத்தாது அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சகலரது ஒத்துழைப்புடன் அமுல்படுத்துவதற்கு அவர் முனைகின்றார்.
அதிலும் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கே அவர் திட்டமிட்டிருக்கின்றார்.
ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற முயல்வது அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயமாக அமையுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியுமான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் , அரசியலமைப்பின் 13ஆவது திருத்த அமுலாக்கல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது.
பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக கூறிக்கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முரண்பாட்டுக்குரிவை என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
13ஆவது திருத்தம் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிலுள்ள முக்கியமானதொரு திருத்தமாகும்.
இந்த திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறைக்கு பொறுப்பாக்குவது ஏற்றுக்கொள்ளதக்க செயற்பாடல்ல என்றும் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
உண்மையிலேயே அரசியலமைப்பிலுள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் பாராளுமன்றத்தை நாடவேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் தெற்கின் எதிர்ப்பையும் அடுத்த தேர்தல்களையும் கருத்தில் கொண்டு 13ஆவது திருத்தம் குறித்த விடயத்தை பாராளுமன்றத்தின் முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருக்கின்றார்.
தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தையாவது நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும். ஏற்கனவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொலிஸ் அதிகாரமற்ற வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
ஆளும் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜ பக் ஷவும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுகாண தயார் என்று ஏற்கனவே உறுதி வழங்கியிருந்தார்.
தற்போது அந்தக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் தென்படுகின்றபோதிலும் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டுக்கு அந்த கட்சியும் வரவேண்டும்.
இவ்வாறு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து ஓர் நிலைப்பாட்டுக்கு வந்தால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது ஒன்றும் சிரமமான செயற்பாடாக இருக்கப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.