மேற்கு புதுடெல்லியில் உள்ள ரன்ஹோலா பகுதியில் வசித்து வந்தவர் பூஜா குமாரி (24). இவர் ஜிதேந்திரா என்பவருடன் லிவ்-இன் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார்.
ஜிதேந்திரா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு திவ்யான்ஷ் (11) எனும் ஒரு மகன் உண்டு. ஜிதேந்திராவின் முதல் மனைவி, மகன் திவ்யான்ஷுடன் தனியே வசித்து வந்தார். பூஜா குமாரியை ஜிதேந்திரா, ஆர்ய சமாஜ் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் ஜிதேந்திரா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால், பூஜா குமாரி உடனான திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொள்ள முடியவில்லை.
இதனால் பூஜா குமாரிக்கு மனைவி என்கிற அந்தஸ்துடன் வாழ முடியவில்லை எனும் ஏக்கம் இருந்து வந்தது. ஜிதேந்திரா தன் முதல் மனைவியை விவாகரத்து செய்வதில் நீண்ட காலதாமதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக பூஜாவிற்கும், ஜிதேந்திராவிற்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதன் விளைவாக ஜிதேந்திரா, பூஜாவிடமிருந்து விலகி தனது முதல் மனைவி வீட்டிற்கே சென்று விட்டார்.
முதல் மனைவியின் மூலம் பெற்ற மகனின் காரணமாகத்தான் ஜிதேந்திரா விவாகரத்து செய்ய மறுக்கிறார் எனும் முடிவிற்கு பூஜா குமாரி வந்தார். சென்ற வாரம் தெரிந்தவர் ஒருவரிடம் பூஜா, ஜிதேந்திராவின் வீட்டிற்கு வழி கேட்டு அங்கு சென்றார். அவர் சென்ற போது அந்த வீடு திறந்திருந்தது. கட்டிலில் திவ்யான்ஷ் தூங்கி கொண்டிருந்தான். வீட்டில் வேறு யாரும் இல்லை.
திவ்யான்ஷ் மீது பெரும் ஆத்திரத்தில் இருந்த பூஜா, திவ்யான்ஷ் தூங்கி கொண்டிருக்கும் போதே அவன் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பிறகு அவன் உடலை அந்த “பெட் பாக்ஸ்” (bed box) கட்டிலின் அடியில் உள்ள அலமாரியில் இருந்த துணிகளை வெளியே வீசி, அந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு, யாருக்கும் தெரியாமல் தப்பி சென்று விட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றிய புதுடெல்லி காவல்துறையினர், குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளின் உதவியுடன் கடைசியாக பூஜா குமாரிதான் அங்கு வந்து சென்றார் என உறுதி செய்தனர்.
தலைமறைவாக இருந்த பூஜாவை பல இடங்களில் அவர்கள் தேடி வந்தனர். தேடுதலில் சிக்கிய பூஜாவை காவலில் எடுத்து விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.