இன்று 13வது திருத்தச்சட்டத்திலும் வெட்டிக் குறைப்புக்கள் செய்வது தொடர்பில் உரையாடப்படுகின்றது.

13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்னவாகவும் இருக்கலாம் ஆனால் 13வது திருத்தச்சட்டத்தையாவது பாதுகாக்க முடியுமா அல்லது அதனையும் வெட்டிக் குறைப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா – என்னும் நிலையிலேயே தமிழ் தேசிய அரசியல், அதன் இயலாமைய பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

விடுலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் நகர்வானது, நமது தமிழ் தேசிய தரப்புக்களின் இயலாமைக்கான சான்றாகும்.

இதில் கொள்கைரீதியான உத்தமர்கள் தொடர்பில் விவாதிக்க ஒன்றுமில்லை. அனைவருமே தோல்வியின் அடையாளங்கள்தான்.

சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ் மக்களுடன் அதிகாரங்களை பகிர்வதற்கு தயாராற்ற சூழலில்தான், தமிழர்களுக்கான அரசியல் இயக்கம் உருவானது.

1949இல், இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கித் தருவேன் என்றார்.

தமிழரசு கட்சியை ஆங்கிலத்தில் சமஸ்டிக் கட்சியென்று அழைத்தார். இதன் மூலம், தமிழ் மக்களுக்கான தனித்துவமான அடையாளமென்பது, சமஸ்டியடிப்படையிலான இணைப்பாட்சி ஒன்றின் மூலம்தான் சாத்தியப்படுமென்பதே செல்நாயகத்தின் நிலைப்பாடாக இருந்தது.

அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலிருந்து, ஜி.ஜி.பொன்னம்பலம் விலகிச் சென்றதன் காரணமாகவே, செல்வநாயகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறி, தமிழரசு கட்சியை உருவாக்கினார்.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால், பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எப்போதோ, சமஸ்டிக் கோரிக்கையை தூக்கியெறிந்துவிட்டது.

இதனை புரிந்து கொண்டிருப்பதால்தான், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்னும் பெயரை பயன்படுத்தாமல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்னும் பெயரில் மக்களிடம் செல்கின்றார்.

செல்வநாயகம் இவ்வாறு சமஸ்டிபற்றி பேசினாலும் கூட சமஸ்டியை அடைவதற்கான போராட்டங்களில் ஈடுபடவில்லை.

சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கி நகரமுடியுமென்று அவர் நம்பியிருக்கலாம் ஆனால் அதனை ஒரு பாய்ச்சலில் அடைந்துவிட முடியுமென்று அவர் ஒருபோதும் நம்பியதாக தெரியவில்லை.

1957இல் இடம்பெற்ற பண்டா – செல்வா உடன்பாடு பின்னர், 1965இல், இடம்பெற்ற டட்லி-செல்வா உடன்பாடுகளின் மூலம் இது தெளிவாகத் தெரிகின்றது.

ஏனெனில் இந்த உடன்பாடுகளில் சமஸ்டி பற்றி பிரஸ்தாபிக்கப்படவில்லை. மிகவும் குறைவான அதிகாரங்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

சமஸ்டியை கட்சியின் பெயரில் வைத்திருந்த செல்வநாயகம் சமஸ்டிக்கான இணக்கப்பாடு தொடர்பில்தானே பேசியிருக்க வேண்டும்.

அதற்காகத்தானே அவர் சிங்களத் தலைவர்களுடன் உடன்பாடுகளை எட்ட முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லையே! ஏன்?

செல்வநாயகம் தொடர்பான சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதவாது, செல்வநாயகம் எவ்வாறான தலைவரென்றால், அவர் கேக் கிடைக்கவில்லை என்பதற்கான பானை நிராகரிக்கின்ற தலைவர் அல்ல.

இந்த பின்புலத்தில் செல்வநாயகம் சமஸ்டியை இலக்காகக் கொண்டிருந்தாலும், சமஸ்டிக்கான உடனடி வாய்ப்புக்கள் தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கின்றது.

செல்வநாயகத்தின் குறைந்த தீர்வை எட்டும் முயற்சிகளும் கைகூடவில்லை. சமஸ்டிக்கான பிரத்தியேக போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத செல்வநாயகம் அணியினர்தான், பின்னர், தனிநாட்டுக்கான கோரிக்கையை நோக்கி சிந்தித்தனர்.

தனிநாட்டுக்கான கோரிக்கையை நவரெட்ணம் முன்வைத்த போது, அதனை நிராகரித்த செல்வநாயகம், பின்னர், தனிநாட்டுக் கோரிக்கைதான் ஒரேயொரு வழியென்னும் முடிவுக்கு வருகின்றார்.

ஆனால் இப்போதும் தனிநாட்டை எவ்வாறு அடைவதென்னும் கேள்விக்கு செல்வநாயகத்திடம் பதிலில்லை.

இது தொடர்பில் ஒரு முறை இரா.சம்பந்தனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் கூறினார், இந்தியாவிற்கு தேவைப்பட்டிருந்தால் அது வந்திருக்கும்.

ஆனால் இந்தியாவிற்கு அவ்வாறானதொரு தனிநாடு தேவைப்பட்டிருக்கவில்லை என்பதை புரிந்துகொள்வதற்கு காலம் எடுத்தது.

அதனை ஆய்வு செய்து புரிந்துகொள்ளக் கூடிய வல்லமையுடன் செல்வநாயகமும் இருக்கவில்லை.

அன்றிருந்த அனைவரும் சட்டத்துறை சார்ந்தவர்களாக இருந்ததால், பிராந்திய, சர்வதேச அரசியல் சூழலை புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றலுடன் அவர்கள் இருக்கவில்லை.

சமஸ்டியைப் போலவே, செல்வநாயகத்தின் தனிநாட்டுக் கோரிக்கையும் பிசுபிசுத்துப் போனது. வழிமுறை தெரியாது முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் அனைத்துமே வெறும் ஏட்டுச் சுரக்காய்தான். அது கறிக்கு உதவாது.

ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை ஆயுத பலம் கொண்டு அடைய முடியுமென்னும் புதிய சிந்தனையொன்று துளிர்விட்டு, வேகமாக வளர்சியுற்றது. மிதவாதிகளின் இயலாமையே இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு காரணம்.

இந்த பின்புலத்தில்தான், தமிழர்களின் அரசியல் சர்வதேச கவனத்தை பெறுகின்றது. தமிழர்களை பொறுத்தவரையில், சர்வதேசமென்பது, முதலில் இந்தியாதான்.

இ;ந்தியா இல்லாத சர்வதேசம் என்பது எப்போதுமே சாத்தியமற்ற ஒன்று. அன்றைய உலக அரசியல் சூழலும், அந்தச் சூழலில், அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னெடுத்த வெளிவிவகாரக் கொள்கையின் காரணமாகவே, இந்தியா கடுமையாக நடந்துகொண்டது.

ஒரு வேளை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவை சார்ந்திருக்கும் அல்லது அனிசாரா அணுகுமுறைக்கு மாறான கொள்கைரீpயான முடிவுகளை எடுக்காதிருந்திருந்தால், இந்தியா இராணுவ ரீதியான தலையீட்டை மேற்கொண்டிருக்காது.

ராஜதந்திர அணுகுமுறையிலேயே விடயங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் நிலைமைகள் இந்தியாவின் கையை மீறிச் சென்றதன் காரணமாகவே, இந்தியா சில கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டியேற்பட்டது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று 36 வருடங்களாகின்றன. மீண்டும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அன்று நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட 13வது திருத்தத்தையாவது பாதுகாக்க முடியுமா, என்னும் கேள்வியுடன், தமிழ் தேசிய அரசியலின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழரின் யுத்தம் தனிநாட்டுக்கானது. விடுதலைப் புலிகளின் தோல்வி மீளவும் தமிழரின் அரசியல் தலைவிதியை மிதவாதிகளின் கைகளுக்கு மாற்றியது.

மிதவாதிகளின் தோல்வியை தொடர்ந்துதான் இயக்கங்களின் எழுச்சி ஏற்பட்டது. 90களின் பின்னர் விடுதலைப் புலிகளின் எழுச்சியானது.

தனிநாட்டுக்கான பயணத்தின் தோல்வி மீளவும் சமஸ்டியை உயர்த்திப்பிடிக்கும் நிலைமைய ஏற்படுத்தியது. இங்கு பலரும் கவனிக்க மறுக்கின்ற ஒரு விடயம் உண்டு. அதாவது, சமஸ்டியை அடையும் முயற்சியில் ஏற்கனவே மிதவாதிகள் தோல்வியடைந்திருந்தனர்.

கடந்த 74 வருடகால தமிழ் தேசிய அரசியலில், சமஸ்டிக்கான பேரம் பேசலை செய்வதற்கான ஆற்றல் பிரபாகரனிடம் மட்டுமே இருந்தது ஆனால், அவர் அதனை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கவில்லை.

அவரால் தனிநாட்டுக்கு மாற்றான விடயமொன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

ஆனால் 2009இற்கு பின்னர், ஏற்கனவே தோல்வியடைந்த மிதவாதிகள், மீளவும் சமஸ்டி பற்றிப் பேசிய போது, இதனை எவருமே கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஒப்பீட்டடிப்படையில் செல்வநாயகம் காலத்தில் மிதவாதிகள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக இருந்தனர்.

ஆளுமைமிக்க அரசியல்வாதிகள் இருந்தனர் ஆனாலும், அவர்களால் சமஸ்டிக் கோரிக்கையை வெற்றிகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் ஒப்பீட்டடிப்படையில் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கும் தற்போதைய மிதவாதிகளால் எவ்வாறு சமஸ்டியை அடைய முடியும்?

இந்தக் கேள்விக்கான பதிலாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீளவும் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக நோக்கப்படுகின்றது.

ஏனெனில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றுதான், இன்றுவரையில் நிலைத்து நிற்கின்றது.

அதில் போதாமைகள் இருக்கின்றது என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதனைத் தாண்டிச் செல்வதற்கான பேரம் பேசும் ஆற்றலுடன் தமிழர் தரப்பு இல்லையென்பதும் உண்மையாகும்.

இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு பிரதான விடயம் உண்டு. அதாவது, தமிழர்களுக்கு எந்தவொரு வெளித்தரப்பினதும் ஆதரவும் இல்லை.

அவ்வாறானதொரு ஆதரவுநிலை இருந்திருந்தால், 13வது திருத்தச்சட்டத்தையாவது காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தமிழர் அரசியல் கீழிறங்கியிருக்காது.

இந்த நிலைமையை புரிந்துகொண்டால், தற்போது இருப்பதை உச்சபட்சமாக பயன்படுத்திக் கொண்டு, முன்னேறும் வழிமுறை ஒன்றே, சாத்தியமான ஒன்றாக இருக்கின்றது.

ஆனால் அதற்குக் கூட வெளித்தரப்புக்களின் அழுத்தம் அவசியப்படுகின்றது. இந்தியா ஒன்றுதான் அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய ஒரேயொரு நாடாக இருக்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் அதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. ஈழத் தமிழர்களும் இந்தியாவிடம்தான் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது ஏனெனில், தமிழ் மக்கள் சார்பில், இந்தியாதான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

இலங்கை விடயங்களை முன்னெடுக்க தவறும் போது, இந்தியாவின் தலையீட்டைக் கோரும் உரித்து தமிழ் மக்களுக்குண்டு.

யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடங்களில், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புக்களும், பல முயற்சிகளை முன்னெடுத்ததாக கூறிக்கொண்டாலும் கூட, கொழும்பின் ராஜதந்திர லொபியை தோற்கடிப்பதில், தமிழர் தரப்பால் சிறிய வெற்றியைக் கூட பெற முடியவில்லை.

அவ்வாறு வெற்றியை பெற்றிருந்தால், 13வது திருத்தச்சட்டத்திலுள்ள விடயங்களைக் கூட அமுல்படுத்துவதற்கு இந்தளவு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்காது.

அதே வேளை, புதுடில்லியை நோக்கிச் செல்வதிலும், ஈழத் தமிழர் தரப்பால், குறிப்பிடத்தகு வெற்றியை பெறமுடியவில்லை. ஈழத் தமிழர் தரப்பின் தொடர் தோல்விகள்தான், தற்போதையை நிலைமைக்கு காரணம்.

எனவே இப்போதுள்ள சூழலில், 13வது திருத்தத்தையாவது பாதுகாப்போம் என்று கூறுபவர்கள் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.

அவர்கள் தற்போதுள்ள சூழலில் சாத்தியமானதை பேசுகின்றனர். தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அவ்வாறுதான் சிந்திக்க முடியும்.

உண்மையில், கடந்த 14 வருடங்களாக, வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருந்த, தமிழ் தேசியவாதிகள் என்போர் மீதுதான், உண்மையிலேயே, கோபப்பட வேண்டும்.

அதிலும் குறிப்பாக தங்களை 24கரட் தேசியவாதிகளாக காண்பிக்க முற்படுவர்கள் மீதுதான், தமிழ் சமூகம், அதன் கோபத்தை காண்பிக்க வேண்டும். ஏனெனில், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் காற்று வரவில்லையே என்று அங்கலாய்ப்பதில் பயனில்லை.

ஈழத் தமிழ் சமூகத்தின் இன்றைய நிலைக்கு சந்தர்ப்பங்களை நிறுத்துப் பார்த்து, பயன்படுத்தத் தெரியாமல் போனமையே அடிப்படையான காரணமாகும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், ஈழத் தமிழ் அரசியல் தொடர்ந்தும் சறுக்கிக்கொண்டே செல்கின்றது.

சந்தர்பங்கள் நழுவவிடப்படுகின்ற போது, மீண்டும் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் முன்னரைப் போல் இருக்க வாய்ப்பில்லை.

13வது திருத்தச்சட்ட விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். அன்றிருந்த சூழலில், 13வது திருத்தச்சட்டத்தின் பெறுமதியும், அதனை பயன்படுத்துவற்கான தமிழருக்கான வாய்ப்பும் வேறுவிதமானது.

அன்று தமிழருக்கான முழுமையான ஆதரவு நிலையில், ஒரு பிராந்திய சக்தியே இருந்தது. இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்தது.

ஆளுனர், முதலமைச்சரை பார்த்து நடுங்கினார். இப்போதுள்ள நிலைமை முற்றிலும் வேறானது.

இன்றைய நிலையில் ஈழத் தமிழர்களுடன், முழுமையான ஆதரவு நிலையில், எவரும் இல்லை. நிரந்தர நண்பர்களை பெறும் வகையிலான புத்திசாலித்தனமான அரசியலை, தமிழர்கள் முன்னெடுக்கவுமில்லை.

-யதீந்திரா-

Share.
Leave A Reply