“பாப் பாடல் உலகின் ராஜா” என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்கவை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன். பாடகர், நடன கலைஞர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த மைக்கேல் ஜாக்சன் பெருமளவில் நன்கொடைகளை வழங்குவதிலும் புகழ் பெற்றிருந்தார்.
இந்தியா உட்பட பல நாடுகளில் அவரது இசைக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில், மேற்கத்திய நடனங்களில் இவர் பாணியை இன்றளவும் பலர் பயன்படுத்தி நடன காட்சிகளை அமைத்து வருகின்ற பிரபலங்கள் உள்ளனர்.
2000 வருடங்களின் தொடக்கத்தில் அப்போது சிறுவர்களாக இருந்த வேட் ராப்சன் மற்றும் ஜேம்ஸ் சேஃப்சக் ஆகிய இருவர், 1980-களின் கடைசியிலும், 1990-களின் தொடக்கத்திலும், தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று ஜாக்சன் பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இச்செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஜாக்சன் முழுவதுமாக மறுத்தார். வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் 2009-ம் வருடம், தனது 50-வது வயதில் மைக்கேல் ஜாக்சன் எதிர்பாராதவிதமாக காலமானார்.
தொடர்ந்து ஜாக்சனின் வியாபார நிறுவனங்களின் மீது சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையில் இருந்து தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2020-ம் வருடம், ஜாக்சன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டிற்காக, ஜாக்சன் தொடங்கி நடத்திய வர்த்தக நிறுவனங்களின் மீது குற்றம்சாட்ட முடியாது என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்டி நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்பில், “ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கேடயமாக அந்நிறுவனத்தின் கட்டமைப்பை காரணமாக கருத முடியாது.
பாலியல் தாக்குதலுக்கு மறைமுகமாக துணை போவதை மன்னிக்க முடியாது.” “தாக்குதல் நடத்தியவர் நிறுவனத்தின் முழு பங்கையும் வைத்திருந்தார் என்பதாலும், தாக்குதலை அவர்தான் செய்தார் என்பதாலும், குழந்தைகளை காக்கும் ஆணித்தரமான கடமை நிறுவனத்திற்கு இல்லையென கூற முடியாது.
ஒப்பிட்டு கூற இது போல ஒரு வழக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நிறுவனத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையென முடிவுக்கு வருவது வக்ரமான முடிவாக இருக்கும்,” என்று கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் புத்துயிர் பெறப்போகிறது.