தூரப் பயணமொன்று போவதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு வரும்போது சில வேளைகளில் அப்போதுதான் பஸ் புறப்பட்டுப்போன அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
கொஞ்சம் முதல்தான் போனதென்றால் யாருடையதாவது மோட்டார் சைக்கிளில் கலைத்துச் சென்று அதைப் பிடித்த அனுபவங்களும் சிலருக்கு இருக்கும்.
ஆனால், நேற்று போகவேண்டிய பஸ்ஸைப் பிடிக்க இன்றைக்கு பஸ் தரிப்பிடம் போனால் எப்படி இருக்கும்?
நேற்றைக்கு என்றாலும் பரவாயில்லை. ஒரு மாதமோ, அல்லது வருடமோ, அல்லது சில வருடங்களுக்கு முன்னரோ போன பஸ்ஸை பிடிக்க இப்போது போனால் எப்படியிருக்கும்?
அதுவும் 36 வருடங்களுக்கு முன்னர் போன பஸ் என்றால்…?
36 வருடங்களுக்கு முன்னர் அமுல்பபடுத்தப்பட்ட 13ஐ, அப்போது கெட்டியாகப் பிடிக்காமல் கோட்டை விட்டுவிட்டு, இப்போது அதைப் பிடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் போட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களைப் பார்க்க இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அந்த பஸ்ஸை மாத்திரமன்றி, அதன் பின்னர், கிட்டத்தட்ட சமஷ்டி என்றே சொல்லக்கூடிய இன்னும் கூடுதல் அதிகாரப் பகிர்வை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகாவின் அதிகாரப் பகிர்வு பஸ்ஸையும் தமிழ்த் தரப்புக்களின் திமிர்த்தனத்தால் தவறவிட்டனர்.
அதன் பின்னர் நோர்வே அனுசரணையுடன், சர்வதேச ஆதரவுடன் கிடைத்த உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு’ குறித்துப் பரிசீலிக்கும் வாய்ப்பைத் தந்த பஸ்ஸையும் தவறவிட்டாயிற்று. இப்படியே எல்லா பஸ்களும் போன பின்னர், இவை எல்லாவற்றுக்கும் முன்னால் போன 13ஐத் துரத்திப்பிடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தமிழ் மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
1987இல் இழந்தது
அப்போது 13ஆம் திருத்தச் சட்டத்தின்படி இலங்கையில் உருவாக்கப்பட்ட 9 மாகாண சபைகளில், தமிழர்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்கள் என்று கூறி, தமிழீழம் என்று எல்லை வரையறுத்துக் கனவு கண்ட வடக்கு-, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாண சபையாக வழங்கியபோது அதை ஒரு சாரார் வேண்டாம் என்றனர். சவாலாக பொறுப்பேற்றவர்களும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இடை வழியில் போட்டுவிட்டுச் சென்றனர்.
இணைந்த மாகாணசபை மட்டுமன்றி, 13ஆம் திருத்தச் சட்டத்தை உருவாக்கக் காரணமாக அமைந்த இந்திய–-இலங்கை உடன்படிக்கையின்படி, வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களைவிட்டு இலங்கை இராணுவத்தினர் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு வேறு அப்போது விதிக்கப்பட்டிருந்தது.
இதைவிட வேறென்ன வேண்டுமென்று அப்போது அதை தூக்கி எறிந்தார்கள்?
பின்னர், ஜே.வி.பி. தாக்கல் செய்த ஒரு வழக்கின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையில், முன்பு தும்புத்தடியால்கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று சொன்ன மாகாண சபைகளைக் கைப்பற்ற தேர்தலில் குதித்தார்கள் தமிழ்த் தேசியத் தரப்பினர்.
நியதிச் சட்டங்கள்
அப்படிக் கைப்பற்றிய வடக்கு மாகாண சபையை 5 வருடங்களாக ஆட்சி செய்தும், மத்தியின் அதிகாரங்களை 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்குப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நியதிச் சட்டங்களை ஆக்குவதில் இந்தத் தமிழ்த் தேசியத் தரப்புக்கள் தேவையானளவு அக்கறையைக் காட்டவில்லை. மாறாக, ஊடகச் செய்திகளுக்குத் தவிர வேறெதற்கும் உதவாத அரசியல் ரீதியான தீர்மானங்களை உணர்ச்சி ததும்ப நிறைவேற்றியதுதான் மிச்சம்.
5 வருடங்களில் வெறும் 13 நியதிச் சட்டங்களையே (17 என்று சொன்னாலும், அவற்றில் இரண்டு திருத்தங்கள், ஏனைய இரண்டு ஒரே விடயத்தின் மீதானவை என்று சொல்லப்படுகிறது) உருப்படியாக இவர்கள் ஆக்கியுள்ளனர். அதிலும் பலவற்றைச் செயற்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்கு விதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக இந்திய ,- இலங்கை உடன்படிக்கையின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளில் தமிழர்கள் கேட்ட மாகாணங்களான வடக்கு, கிழக்கை விட, மேல் மாகாணம், வடமேல் மாகாணம் என்பன அதிகளவான நியதிச் சட்டங்களை நிறைவேற்றி, மத்தியின் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பெற்று அவற்றைச் சிறப்பாக நிர்வகித்தும் வருகின்றன.
நிர்வாகிகள் பற்றாக்குறை
13ஆவது திருத்தச் சட்டம் பற்றி இப்போதும் நாம் அதிகம் பேசிக்கொண்டிருந்தாலும், அது 36 வருடங்களுக்கு முன்னரே இலங்கையின் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டது. அதன் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதிலிருந்து மாகாண நிர்வாக அலகுகள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள் இப்போது இல்லாவிட்டாலும், மாகாண மட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் பெரும்பாலானவை இப்போது ஆளுநர், பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அவர்களின்கீழ் பணியாற்றும் அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
உதாரணத்துக்கு வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால், கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி, மகளிர் விவகாரம் என்கின்ற 5 மாகாண அமைச்சுக்களின் ஊடாக பெரும்பகுதி மாகாண நிர்வாகம் இப்போதும் செயற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
ஆனால், இப்போதிருக்கும் பிரச்சினை என்னவொன்றால், இந்த மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிப்பதற்குத் தேவையான நிர்வாகத் தரமுள்ள தமிழ் அதிகாரிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த விசேட தரநிலையிலுள்ள (Special Grade) தமிழ் அதிகாரிகளையே மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கு நியமிக்க முடியும். ஆனால், அவ்வாறான அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையிலேயே மாகாண நிர்வாகம் இன்று காணப்படுகிறது. மாகாண நிர்வாகம் மாத்திரமன்றி, மத்தியின் நிர்வாகத்துக்குள் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி நிலைகளுக்கும் உரிய தகுதியுள்ள தமிழ் அதிகாரிகள் இல்லாத நிலையே காணப்படுகிறது.
ஆக, 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மத்தியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தெடுப்பதற்கு அவசியமான நியதிச் சட்டங்களையும் நிறைவேற்றாமல், இருக்கின்ற அதிகாரங்களையேனும் முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான தரநிலையில் அதிகாரிகளும் இல்லாத நிலையிலேயே குறிப்பாக இன்றைய வடக்கு மாகாணம் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், கூடுதல் அதிகாரங்கள் கிடைத்தாலும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நிலையிலேயே இன்று தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், 13க்கும் மேலே சென்று சமஷ்டியைக் கேட்டுப் பெற்றாலும் அதை எவ்வாறு நாம் நடைமுறைப்படுத்தப் போகிறோம்?
மாறிவிட்ட பூகோள அரசியல்
1987 ஆம் ஆண்டு இந்திய, – இலங்கை உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட காலத்தில் இருந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தை மையப்படுத்திய பூகோள அரசியல் சூழ்நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது.
1977இல் ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தன கடைப்பிடித்த திறந்த பொருளாதாரக் கொள்கையும், மேலைத்தேய நாடுகளுக்கு இலங்கையில் அதிக முக்கியத்துவம் கொடுத்த வெளியுறவுக் கொள்கையும் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஏற்படுத்திய சவால்களே அப்போது உரிமை கேட்டுப் போராடப் புறப்பட்ட தமிழர் தரப்பின்மீது இந்தியாவின் கரிசனை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது. தனிநாடு – தமிழீழம் என்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி உசுப்பேற்றிய அரசியலுக்குள் உணர்ச்சிவசப்பட்டு எடுபட்ட தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட நாட்டத்தை தனது பிராந்திய அரசியல் நலனுக்கேற்ப இந்தியா கையாண்டது.
இதன் விளைவாக தீவிரம் பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில், தமிழர் பிரதேசங்களில் ஏற்பட்ட இலங்கை இராணுவ நகர்வுகளின் நெருக்கடிகளைப் பயன்படுத்தி இலங்கை விவகாரத்தில் தலையிட்ட இந்தியா, ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மாகாணங்களை மையப்படுத்திய அதிகாரப்பகிர்வு திட்டத்தை இந்திய, – இலங்கை உடன்படிக்கையின் மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் தான் எடுத்த பொறுப்பை நிறைவேற்றவும் முயன்றது.
ஆனால், இன்றைய பூகோள அரசியல் சூழல் அன்றிருந்ததுபோல் இல்லை. அப்போது இந்தியா அச்சத்துடன் நோக்கிய மேலைத்தேசத்துடன் இப்போது அது கைகோர்த்து நிற்கிறது. மாறாக, மேலைத்தேசத்துக்கும் சவாலாக இருக்கும் சீனாவே இந்தியாவின் பிரதான அக்கறைக்குரிய விடயமாக இப்போது மாறியிருக்கிறது. இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கைத் தணிப்பதற்கு இலங்கைத் தமிழர்களைவிட தென்னிலங்கையே இப்போது இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படுகிறது.
அதனால்தான் அண்மையில் இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழர் பிரச்சினை, 13ஆவது திருத்தம் என்பவற்றைவிட, இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை (Connectivity) இறுக்கமாக்கும் வகையில் திருகோணமலை எண்ணைக் குதங்கள், காங்கேசன் துறைமுகம், பலாலி விமான நிலையம், தலைமன்னாருக்கான கப்பல் சேவை உள்ளிட்ட விடயங்களிலேயே இந்தியாவின் கவனம் அதிகம் குவிந்திருந்தது. தமிழர் பிரச்சினை மற்றும்13 பற்றியே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியுடன் பேசினார் என்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பின்னர் அவர்களை கொழும்பில் சந்தித்து ‘தாஜா’ பண்ணினார்.
ஆக, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கூடுதல் அக்கறை காட்டவேண்டிய பூகோள அரசியல் தேவைகள் இந்தியாவுக்கு இல்லாமல்போய், கிடைத்த மாகாணசபைக்கும் மத்தியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தேவையானளவு நியதிச்சட்டங்களையும் உருவாக்காமல், சரி இருக்கின்ற அதிகாரங்களையேனும் பயன்படுத்திக்கொள்வோமே என்றால், அவற்றைச் சரியாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான தரநிலையிலுள்ள அதிகாரிகளும் இல்லாத நிலையில் இன்று தமிழர் தரப்பு என்ன செய்யப்போகிறது?
இந்த நிலையில் 36 வருடங்களுக்கு முன்னர் தவறவிட்ட 13ஆவது திருத்தச்சட்ட மாகாணசபை பஸ்ஸை ஒருவாறு முழுவதுமாகக் கலைத்துப் பிடித்து உள்ளே ஏறினாலும், அந்த பஸ்ஸை சரியான திசையில் ஓட்டுவதற்குத் தேவையான தராதரமுள்ள சாரதியாகச் செயற்படக்கூடிய அரசியல் தலைமையோ, நடத்துநராகச் செயற்படக்கூடிய போதிய தராதரமுள்ள நிர்வாக அதிகாரிகளோ இல்லாத நிலையில் பயணம் எப்படித் திருப்தியாக அமையும்?
எனவே, பஸ்ஸைப் பிடிக்க முன்னர், பஸ்ஸை கவனமாகவும், பொறுப்புணர்வுடனும், பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்புடனும் செலுத்தக்கூடிய ஆளுமையுள்ள, பொருத்தமான அரசியல் தலைமை(சாரதி)யையும், பயணிகளின் நலன்களை நிறைவேற்றியபடி சாரதிக்கும் சரியாக வழிகாட்டக்கூடிய தரமுள்ள நிர்வாக அதிகாரி(நடத்துநர்)களையும் இனங்கண்டு உருவாக்குவதே இப்போது அவசியமாகிறது.
(கோடீஸ்வரன் றுஷாங்கன்)