* நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் !
* வரி விதிப்பு ஏற்படுத்திய பாதிப்பு !
* இராவணனின் அடிமுடி தேடும் அரசியல்வாதிகள் !
நாட்டின் சுகாதாரத்துறை மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வைத்தியசாலைகளுக்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.
மக்களின் அச்சத்துக்கு அமைய அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. வைத்தியசாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தரமற்ற மருந்துகள், நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் வெளியேற்றம், அனுபவம் மிக்க வைத்தியர்களின் பற்றாக்குறை, ஊழியர்களின் பொறுப்பற்ற போக்கு என்பன பிரதான காரணங்களாகும். ஒரு குறுகிய காலத்தில் அதிக அளவு மரணங்கள் வைத்தியசாலைகளில் சம்பவித்துள்ளன.
குறிப்பாக ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 23 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு அண்டிபயாடிக் மருந்தை ஊசிமூலம் ஏற்றியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பெண் ஜூன் 27 ஆம் திகதி அன்று சந்தேகத்திற்கிடமான தொற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சையின் போது, அவருக்கு வாய்வழி மூலம் மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்த வைத்தியர்கள் அதே மருந்தை அந்த இளம்பெண்ணுக்கு ஊசி மூலம் கொடுத்தனர்.
பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து குறித்த மருந்து தொகுதி சுகாதார அமைச்சில் முற்றாக மீளப்பெறப்பட்டது.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். அவரும் பெற்றுக்கொண்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அஜீரணக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய சாமோதி சந்தீபனி என்ற குறித்த யுவதி அண்மையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவருக்கு ‘செஃப்ட்ரியாக்ஸோன்’ எனப்படும் ஒரு அண்டிபயாடிக் ஏற்றப்பட்டதால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த விதமான போக்குகளுக்கு மத்தியில் அண்மையில் அஸ்பிரின் மாத்திரையும் சுகாதார அமைச்சினால் முற்றாக மீளப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவன் ஒருவனின் சிறுநீரகம் மாயமானதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. இவ்வாறான பின்னணியில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த நோயாளி உயிரிழக்க அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் ஒவ்வாமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிறன்று நடந்த மற்றொரு சோகமான சம்பவத்தில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவரின் பிரசவத்தின் போது சிசு தவறி தரையில் வீழ்ந்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த குழந்தை சீராக முதிர்ச்சி அடைய வில்லை என்று கூறும் வைத்தியர்கள், குறித்த குழந்தை விழுந்ததா? என்பது பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால், பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் குறிப்பிட்ட சில உயிர்காப்பு மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளன.
தட்டுப்பாடு காரணமாக காலாவதியான மருந்துகள் கூட சந்தைக்கு வரும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன.
மேலும், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மருந்து வகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அதை கண்டறிய ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லாமல் உள்ளது. இவையும் சுகாதாரத்துறையின் சீர்கேட்டிற்கு பிரதான காரணம்.
வைத்தியர்கள் பற்றாக்குறை
இதேவேளை, வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 350 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் பராமரிப்பு சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் பணியாற்றுவதற்கு 2,837 விசேட வைத்திய நிபுணர்களும், 23,000 பொது வைத்தியர்களும் தேவைப்படுகின்றனர்.
இந்நிலையில், தற்போது 50 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் 250 வைத்தியர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலைகள் நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, தாதியர்கள் பற்றாக்குறையும் நிலவி வருவதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் தாக்கத்துக்கு பின்னர் மெதுவாக சரிவடைந்த பொருளாதாரம் திடீரென அதலபாதாளத்துக்குச் சென்றது. மக்கள் அதிலிருந்து மீள முடியாதவர்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு, மருந்துகளுக்கு , உணவுப் பொருட்களுக்கு என நீண்ட வரிசை யுகத்தை மக்களால் மறக்க முடியவில்லை. இதனால் பலரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவும் தமக்கு எதிர்காலம் இலங்கையில் இல்லை என்றும் உணர்ந்த நிலையிலேயே இவர்களின் வெளியேற்றம் அமைகிறது.
மூளைசாலிகளின் வெளியேற்றம்
இது நம் நாட்டுக்கு புதிதல்ல. பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பொருளாதார அகதிகளாக சிறந்த சம்பளம், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த கல்வி ஆகியவற்றை தேடி இடம்பெயரும் நிலை பல தசாப்தங்களாக இடம் பெற்று வருகிறது. எனினும், அண்மைய பொருளாதார சீர்கேடுகள் மூளைசாலிகளின் வெளியேற்றத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறிய நிபுணர்களின் அளவை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு உள்ளூர் வைத்தியசாலைகளில் பணிபுரியும் 20,000 வைத்தியர்களில் 700க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நாட்டில் உருவாகியுள்ள கடும் உணவு பற்றாக்குறை,போதிய சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பு இன்மையால் விரக்தி அடைந்துள்ள இலங்கையர்கள் சட்ட மற்றும் சட்டவிரோதமான வழிகளில் பாரிய அளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இந்த மாதம், ஜனவரி முதல் ஜூலை முதல் வாரம் வரை 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வேலை தேடி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. “இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரம் 27,937 பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்” என்று பணியகத்தின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
2022 இல் இலங்கையர்களுக்கு சுமார் 900,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் தெரிவித்தது. இலங்கையர்களுக்கு சுமார் 300,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொதுவாக மூளைசாலிகளின் வெளியேற்றம் இந்த நாட்டுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அவர்களின் இடம்பெயர்வுக்கான இதர முக்கிய காரணங்களாக மோசமான சம்பளம், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் சட்ட ஆட்சி இன்மை ஆகியவை அடங்கும்.
ஒரு வைத்தியரை உருவாக்க நாட்டு மக்களின் வரிப்பணமான சுமார் 5 மில்லியன் ரூபாவும் ஒரு பொறியியலாளரை உருவாக்க சுமார் 2.1 மில்லியன் ரூபாவும் மற்றும் ஒரு முகாமைத்துவ பட்டதாரிக்கு 1 மில்லியன் ரூபாவும் செலவிடப்படுகிறது. ஆனால், இறுதியில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் வெளியேறும் போதெல்லாம், அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை மட்டுமல்ல, தங்கள் குடும்பங்களையும் தம்முடன் அழைத்துச் செல்வதால் அவர்கள் மூலமாக வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு வரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
பெரும்பாலோனோர் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் நியூசிலாந்துக்கு செல்ல விரும்புகிறார்கள். தொழில் வல்லுநர்கள் இலங்கையை விட்டு வெளியேறும் விகிதத்தை பார்த்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்கான பற்றாக்குறை கடுமையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசாங்க பல்கலைக்கழகங்களில் தற்போது சுமார் 6,000 வெற்றிடங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கம் புதிய நியமனங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
வரி விதிப்பு ஏற்படுத்திய பாதிப்பு
வங்கியாளர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், பல மென்பொருள் பொறியியலாளர்கள், அரசாங்கத்துறை ஊழியர்கள், வழக்கறிஞர்கள், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வியாளர்கள் என சுமார் 50 வீத மாணவர்கள் தாங்கள் இடம்பெயர விரும்புவதாகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் கூறுகின்றனர்.
புதிய வரிகளை அறிமுகம் செய்யும் முன்னர் மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். வருமானம் எதுவும் இன்றி தவிக்கும் மக்களுக்கு மேலும் வரி விதித்து, அவர்களை கஷ்டத்துக்குள்ளாகாது, சாதாரண, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வரிவிலக்களித்து நிவாரணங்களை வழங்குவது அவசியம்.
அத்துடன், நபர் ஒருவரின், தற்போதுள்ள வரிக்கான வருடாந்த வருமான எல்லையை மேலும் அதிகரிப்பது அவசியம்.பொருட்கள் மீது எழுந்தமானமான திடீர் வரி விதிப்புகளே அவற்றின் விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.
சர்வதேச நாணய நிதிய கடனுதவி
பொருளாதார பின்னடைவால் தத்தளிக்கும் இலங்கைக்கு உதவ கடந்த மார்ச் 2023 இல், இலங்கைக்கான புதிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதிய நிர்வாக சபை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்தது. மேலும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற கடன் வழங்குநர்களிடமிருந்து 3.75 பில்லியன் டொலர் கூடுதலாக எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
இதில், பாரிய வரி அதிகரிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரண்டு விடயங்கள் பரவலாக அரசின் செல்வாக்குக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளன.
“புதிய வரி விதிப்பு விகிதங்கள், பொருளாதார மறுசீரமைப்பு என்பன அரசாங்கத்திற்குத் தேவையான நிதியைக் கொண்டு வரும் என்றும், பொருளாதாரம் மீண்டு வருவதற்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது. இதேவேளை, கடந்த ஆட்சியில் 2019 வரி குறைப்புக்கள், பணம் அச்சடிக்கப்பட்டமை, ஊழல்கள் மற்றும் தவறான அரசியல் நகர்வுகள் என்பன அதன் பொருளாதாரத்தை முடக்கியது என்று ஆய்வாளர் கூறுகிறார்.
இதேவேளை, ஒரு நடுத்தர வர்க்க ஊழியருக்கு புதிய வரிகள் வீட்டு மற்றும் வாகனக் கடனுடன் சேர்த்து அவரது மாதாந்த செலவினங்களை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது அவரை விரக்திக்கு கொண்டுச் சென்றுள்ளது. இதேவேளை, அரசாங்கம் “வரி வருவாய் மற்றும் அரசு விரயங்களை கண்காணிப்பது அவசியம். அத்துடன், பயனற்ற திட்டங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக வீணாகும் வரிப்பணம் போன்ற தேவையற்ற அரசாங்க செலவினங்களைக் குறைப்பது அவசியம். இவற்றுக்கு வெளிப்படையான வழிமுறை இருக்க வேண்டும்” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். “வரிகள் சரியாக பயன்படுத்தப்படுகின்றனவா? என்று சந்தேகமும் எழுந்துள்ளது. அரசு வரிப்பணத்தை வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்” என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு.
வரிப் பணத்தை உறிஞ்சுபவர்களாக அரசியல் வாதிகள்
மக்களின் வரிப் பணத்தை உறிஞ்சுபவர்களாக அரசியல் வாதிகளே இன்று காணப்படுகின்றனர். அரசியல்வாதிகள் பயன்படுத்திய மின்சாரம், தண்ணீர் என்பவற்றின் அதீத பாவனை காரணமாக கோடிக்கணக்கான கட்டணங்கள் நிலுவையில் உள்ள நிலையில், அப்பாவி மக்களின் கட்டணமாக ரூபா 500 நிலுவையில் இருந்தால் கூட, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை வெட்டி விடுகின்றனர். ஆனால் மேலை நாடுகளில் மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணம் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கே செலவாகின்றது.
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு
இதனிடையே, கடந்த மே மாதம் இலங்கை தனது கடனை முதன்முறையாக செலுத்தத் தவறியதாக அறிவித்தது. இதனால், சர்வதேச சந்தைகளில் கடன் வாங்குவது கடினமாக இருந்தது. இதன் விளைவாக டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள், மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையையே காட்டுகின்றது. அத்துடன், அனைத்து பொருட்களும் சாதாரணமாக ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன. எனினும், அரசாங்கம் கூறும் விலைகுறைப்புக்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாகும். அத்துடன், எங்கும் கலப்படங்களும், தரம் குறைந்த உணவுப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு இறாத்தல் பாண் கூட அதன் உண்மையான நிறையில் கிடைப்பதில்லை என மக்கள் கூறுகின்றனர்.
இந்த விதமான பின்னணியில், தனிநபர் வருமான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதிகமான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். உண்மையில் அதிக வரிகள் மோசமானவை அல்ல. ஆனால், இது சரியான நேரம் அல்ல. இலங்கை அரசாங்கத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லை என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
“அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில், அறவிடப்படும் பெரும்பாலான வரிகள் கழிக்கக்கூடிய கூறுகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, வீட்டுக் கடன்களுக்கான வரி அடமானச் செலவைக் கழித்த பின்னர் கணக்கிடப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் மோசமான கொள்கைகள், கொவிட்-19 தொற்றுநோய் என்பன தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகிவிட்டன. மற்றும் உயர் பணவீக்கம் மக்களை மோசமாக பாதித்துள்ளது. அனைத்துக்கும் மேலாக நாட்டில் தாண்டவமாடும் ஊழல் நாடு இந்த நெருக்கடிகளில் இருந்து மீட்சி பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இனிமேல் செல்வந்தர்கள் மாத்திரமே வாழலாம் என்ற நிலைமையையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் ஸ்திரமற்ற தன்மை
நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கை இன்மையும், அவர்கள் மத்தியில் நிறைந்து போயுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களும் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. குழந்தைக்கு பால் இல்லை என்றும், உண்ண உணவில்லை என்றும், நாளைய பொழுதை எவ்வாறு சமாளிப்பது என்றும் ஒவ்வொரு வீட்டிலும் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் வரலாற்றை தூசி தட்டி இராவணன் தமிழ் மன்னனா, சிங்கள மன்னனா என்று அடிமுடி தேடும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளால் மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
குளங்கள் வற்றி விவசாயம் செய்ய முடியாமலும், பயிர்ச்செய்கை நிலங்கள் காய்ந்து பாரிய நஷ்டங்களை விவசாயிகள் எதிர்நோக்கி வரும் நிலையிலும் அது குறித்து ஆராயாமல் அரசியல்வாதிகள் “புளிச்சல் ஏவறை” விட்டவர்களாக எந்த வித அக்கறையும் இல்லாதிருப்பதையே அவர்களின் போக்குகள் காட்டுகின்றன.
கடும் வரட்சியால் 31 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 ஆயிரம் விவசாயிகள் நிர்க்கதியாகியுள்ளனர். சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் குடிநீரின்றி அவதியுறுகின்றன. குறிப்பாக வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி மக்கள் பலரும் வறுமையால் பெரும் கஷ்டங்களுக்குள்ளாகியுள்ளனர். அதே நிலைமையே கிழக்கிலும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துமே நாட்டு மக்கள் வெறுப்படைந்து சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் நாட்டைவிட்டு வெளியேற காரணமாக அமைகின்றது.
விலை உயர்வு, வறுமை
இன்று பணவீக்கம் என்பது உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ஒரு முக்கிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
இது விலைவாசி உயர்வு மற்றும் பணத்தின் பெறுமதி குறைவதற்கு வழிவகுக்கிறது. பணவீக்கத்தின் நிலையான அளவுகள் இயற்கையாகவும் படிப்படியாகவும் நீண்ட காலத்திற்கு நிகழும் அதே வேளையில், அண்மைய காலங்களில் பணவீக்கம் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை போன்று உலகின் பல நாடுகள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இலங்கையின் தற்போதைய பணவீக்க விகிதம் 2023 ஜூலையில் 6.3% ஆக சற்று குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் வறுமை விகிதம் 2021 இல் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது 2021 மற்றும் 2022 க்கு இடையில் 13.1 இலிருந்து 25 சதவீதமாக இரட்டிப்பானது என உலக வங்கி தனது இரு வருட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டில் கூடுதலாக 2.5 மில்லியன் மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளியுள்ளது” என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உணவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கான தங்கள் செலவைக் குறைக்கின்றன. அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு என்பன பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சவாலாக அமைவதுடன், அடுத்த சில ஆண்டுகளில் வறுமை 25 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
உலக வங்கியின் தகவலின் படி, 2023 மற்றும் 2024க்கான எதிர்மறையான பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் வருவாய் திரட்டும் சீர்த்திருத்தங்களின் பாதகமான விளைவுகள் வறுமைக் கணிப்புகளை மேலும் மோசமாக்கலாம் என்று கூறப்படுகிறது.
சட்ட விரோதப் படகு பயணம் !
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வகையில் அயல் நாடான இந்தியாவுக்கு படகுகளில் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக பிற நாடுகளுக்கு நுழைய முயற்சிக்கின்றனர். கடந்த காலங்களில் வகை தொகை இன்றி பெருந்தொகையானோர் இவ்வாறு பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக இதுவரை 269 பேர் தமிழகத்திற்கு படகு மூலம் சென்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு கனடாவுக்கு செல்லும் நோக்கில் சுமார் 300 இற்கும் அதிகமான இலங்கையர்கள் சட்டவிரோதமாக கப்பலில் சென்ற போது குறித்த கப்பல், கடல் பரபரப்பில் விபத்துக்கு உள்ளாகி வியட்நாம் கடலோர காவல் படையினரால் காப்பாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. பல இலட்சக்கணக்கான ரூபாய்களை கப்பலோட்டிகளுக்கு வழங்கி இந்த அபாயகரமான பயணங்களை மேற்கொள்கின்றனர். எனினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கப்பலோட்டிகள் என்று கூறப்படும் இந்த மனித கடத்தல்கார்கள் அவர்களை எந்த விதமான ஈவிரக்கமின்றி நடுக்கடலில் இறக்கி விடப்பட்ட சம்பவங்கள் பல உள்ளன. இருந்தும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் கடப்பது தொடரவே செய்கிறது. இதனை தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடுகள் புலம்பெயர்வோர் தொடர்பில் இறுக்கமான சட்ட திட்டங்களை பின்பற்றி வருகின்றன.
தமது எதிர்காலம், பொருளாதாரத்தை கருதி வறிய நாடுகளில் இருந்தே செல்வந்த நாடுகளை நோக்கி மக்கள் புலம் பெயர்கின்றனர். நாட்டில் வேலைவாய்ப்பு, சிறந்த எதிர்காலம், ஊழலற்ற ஆட்சி, பாதுகாப்பு, மனித உரிமைகளை மதித்து நடத்தல் மற்றும் கருத்து சுதந்திரம் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமிடத்து மக்களின் புலம் பெயர்வை கட்டுப்படுத்த முடியும்.
அரசின் கொள்கை
அரசாங்கத்தை பொறுத்தமட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை (மத்தியகிழக்கு நாடுகளுக்கு) ஊக்குவித்து வருகிறது. அரசின் முக்கிய நோக்கம் எந்த வகையிலும் நாட்டுக்கு டொலர் வந்தால் போதும் என்பதேயாகும். மக்களை பொறுத்த வரையில் வேறு வழி இல்லாமலும் பொருட்களின் விலை வாசிகளை சமாளிக்க முடியாத நிலையிலும் எந்த தொழில் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நிலையிலும் பெரும் அளவில் வெளியேறி வருகின்றனர். இது பொருளாதார அகதிகள் புலம் பெயர்வுக்கும் சாதகமாகி விட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறு இருப்பினும் நாடு எதிர் நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு உடனடியாக சாத்தியமாகமாட்டாது என்பதும், தொடர்ந்தும் பணவீக்கம் மற்றும் விலையேற்றங்களுக்கு மத்தியிலேயே வாழவேண்டி இருக்கும் என்பதும் மக்களின் கணிப்பு.
எவ்வளவு காலத்துக்கு இந்த விதமான பொருளாதார நிலை நீடிக்கும் என்ற கேள்விக்கு எவரிடமிருந்தும் உரிய பதில் இல்லாத நிலையில், மக்களின் இடம்பெயர்வுகளை தடுக்க முடியாது என்பதே யதார்த்தம்.
சுகாதாரத் துறையை மேம்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுப்பது அவசியம். மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான மருந்து வகைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் அரச வைத்திய சாலைகளையே நம்பியுள்ளனர். எனவே, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத்திருப்பது அவசியம். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.