“இந்த மேடையில் இரண்டு முறை பாடினாலே போதும் என்பதில் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், இறுதிச் சுற்று வரை செல்வேன் என உறுதியாக நம்புகிறேன்….. நம் மக்களுக்காக!” என்று தமிழகத்தின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சரிகமபா’ இசை மேடையில் புதிதாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘மலையகத்தின் குயில்’ என இலங்கை மக்கள் கொண்டாடும் கே. அசானி அசராத மன உறுதியோடு கூறுகிறார்.
தமிழகத்தின் ஒரு பிரம்மாண்ட இசை மேடையில் தன் குரலையும் தான் வாழும் மலையக சமூகத்தின் அடையாளத்தையும் ஆழப் பதித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, ‘சரிகமபா’ குழுவினர் அளிக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, இரவு பகலாக பாடி தன் இசைஞானத்தை மெருகேற்றி வருகிறார், அசானி.
விறுவிறுப்பான போட்டிக் களத்தை சந்திப்பதற்கு முன்னர் அசானியிடம் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தது.
அவரது குரலில் ஒரு தெளிவு, உற்சாகம்… சாதிப்பதற்கான பிடிமானம் கிடைத்துவிட்டதன் சமிக்ஞையை அவரது பேச்சிலும் உணர முடிந்தது.
ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அசானிக்கான அங்கீகாரமாக எதிர்பார்த்து காத்திருப்பது அவர் ‘சரிகமபா’ போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.
அதைப் பற்றி அசானியிடம் கேட்டபோது,
“என்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். என் மக்களுக்காக, நான் நிச்சயம் வெற்றியோடு இலங்கைக்கு திரும்புவேன்” என தெரிவித்தார்.
கண்டி, புசல்லாவை, நயபன்ன தோட்டத்தை சேர்ந்த அசானி நயபன்ன தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9இல் கற்று வருகிறார்.
வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையிலான நடைபயண சுகத்தோடு, பாடல்களையோ, மெட்டுக்களையோ ஓயாமல் பாடிக்கொண்டும் இசையெழுப்பிக்கொண்டும் மலையக காற்றை சுவாசித்து வந்த இந்த 14 வயது சிறுமி, “நான் முதல் முறையாக கொழும்புக்கு வந்ததே, இந்த இந்திய பயணத்தின்போதுதான். அதேபோல முதல் முறையாக இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்…” என்று சிரித்தார்.
‘சரிகமபா’வில் பாடுவதை பற்றி ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
எல்லோரும் நான் நன்றாக பாடுவதாக சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது!
இந்திய தொலைக்காட்சி மேடையில் பாட ஆரம்பித்தது முதல் இதுவரை நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
முதல் நாள் பயிற்சியில் பாடுவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. பிறகு இரண்டாவது நாள் பயற்சியில், எந்த பாடலானாலும், அதற்கான ஸ்வரங்களையும் சேர்த்துப் பாடுவதற்கு பயிற்சி கொடுத்தார்கள். அதை சீக்கிரத்தில் உள்வாங்கிப் பாட என்னால் முடிந்தது. பிறகு அடுத்தடுத்து, அவர்கள் கொடுக்கும் பாடல்களை தெளிவாக பாடுமளவுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
ஸ்ரீராஜ் லக்ஷ்மி மிஸ் எனக்கு மிக நன்றாக பயிற்சியளிக்கிறார். யாரும் என்னை திட்டுவதில்லை. கொஞ்சம் தவறாக பாடினாலும், திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்கிறார்கள். “அடுத்த தடவை இன்னும் நன்றாக பாடலாம்” என்று நம்பிக்கையாக பேசுகிறார்கள்.
உங்கள் பெற்றோர், ஊர் மக்களை பற்றி சொல்லுங்கள்…
என் அப்பா, அம்மா, அண்ணாக்கள், என் ஊர் மக்கள் எல்லோரும் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்.
எங்கள் ஊரில் நடைபெறும் சிவராத்திரி கலை நிகழ்ச்சிகளில் பல முறை பாடியிருக்கிறேன்.
நான் ஒரு பாடலை பாடினால், ஊரில் எல்லோரும் ரசித்துக் கேட்பார்கள். திரும்ப திரும்ப பாடச் சொல்லி கேட்டு சந்தோஷப்படுவார்கள். அவர்கள் என் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார்கள்.
எனது நண்பர்களின் அம்மா, அப்பாக்கள் கூட ‘நீ நல்லா பாடுற’ என்று உற்சாகம் கொடுப்பார்கள். அதற்கு அவர்களிடம், ‘என்னை மாதிரியே உங்க பிள்ளைகளும் நல்லா வருவாங்க’ என்று சொல்வேன்.
சென்னை விமான நிலையத்தில் பாடியதை பற்றி சொல்லுங்கள்…
(சிரித்தபடி) விமான நிலையத்தில் என்னை பற்றி விசாரித்தவர்களிடம் “சரிகமபா நிகழ்ச்சியில் நான் பாடப் போகிறேன்….” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் “ஒரு பாட்டு பாடுங்கள்” என்று கேட்டார்கள்.
நான் ‘கண்கள் நீயே காற்றும் நீயே….’ என்ற பாடலை பாடினேன். அதை கேட்டுவிட்டு, அவர்கள் “நீ ரொம்ப நல்லா பாடுற, நீ நிச்சயமாக ஜெயிப்ப” என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.
நடுவர்களிடம் நீங்கள் பாடிக் காட்டிய முதல் பாடல்?
முதன்முதலாக எங்கள் மலையகத்தில் பாடப்படும் ஒரு சிறிய நாட்டார் பாடலை பாடிக் காட்டினேன். அதை நான் சிறப்பாக பாடியதாக நடுவர்கள் பாராட்டினார்கள். அதன் பிறகே ‘ராசாவே உன்ன நம்பி…’ பாடினேன். அதற்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.
சமீபத்தில் ஒளிபரப்பான தெய்வீகப் பாடல் சுற்றில் பாடிய அனுபவம் எப்படியிருந்தது?
‘ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா…’ பாடலை முதல் நாள்தான் கொடுத்தார்கள். விடிய விடிய பயிற்சி செய்தே மறுநாள் பாடினேன்.
நடுவர்களை பற்றி சொல்லுங்கள்…
நடுவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசுகிறார்கள். “தோல்வியோ வெற்றியோ… நீ ஒரு நல்ல நிலைக்கு வருவ” என்று சொல்வார்கள்.
கில்மிஷா (யாழ்ப்பாணத்தை சேர்ந்த போட்டியாளர்), மற்ற போட்டியாளர்கள் உங்களோடு எப்படி?
நான், கில்மிஷா, மற்ற எல்லோரும் இங்கே சந்தோஷமாக இருக்கிறோம்.
கில்மிஷாவோடு போட்டி போட்டு நீங்கள் பாடுவதாக சொல்கிறார்களே?
போட்டியெல்லாம் இல்லை. இங்கே நாங்கள் எல்லோரும் சமம்தான். யார் வெற்றி பெற்றாலும் சந்தோஷம்தானே!
இந்த மேடையில் இரண்டு முறை பாடினாலே போதும்! நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஆனாலும், இறுதிச் சுற்று வரை வருவேன் என்று நம்புகிறேன். நம் மக்களுக்காக!
பாடுவதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
சிறு வயதிலிருந்தே எனக்கு பாடுவதென்றால் ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. அதனால் வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களை கேட்டுத்தான் பாடுவேன். எப்போதும் ஏதேனும் பாடல்களை பாடிக்கொண்டே இருப்பேன்.
பள்ளியில் சங்கீதம், ஓவியம், நடனம் என்கிற மூன்று பாடங்களில் நான் சங்கீதத்தை தெரிவு செய்து படிக்கிறேன். ஆங்கிலம் உட்பட எல்லா பாடங்களையும் படிப்பதில் நான் கவனம் செலுத்தினால் கூட, சங்கீதப் பாடத்தைத்தான் அதிகம் விரும்புகிறேன். அதில்தான் நிறைய மதிப்பெண் எடுக்கிறேன்.
கர்நாடக சங்கீத பாடல்களையா அல்லது சினிமா பாடல்களையா பாட விரும்புகிறீர்கள்?-
கர்நாடக சங்கீதம், சினிமா என்று எல்லா இசைப் பாடல்களையும் பாட ஆசை. இளையராஜாவின் இசை பிடிக்கும். ஜானகி அம்மா, சித்ரா அம்மா பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
சங்கீத பயிற்சியை இனியும் தொடரலாமே?
நடுவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். இலங்கைக்கு வந்த பிறகு கர்நாடக சங்கீதத்தை தொடர்ந்து விரிவாக கற்பேன்.
உங்கள் இலட்சியம் என்ன?
நான் ஒரு சங்கீத ஆசிரியையாக ஒரு பெரிய இடத்தை அடைய ஆசைப்படுகிறேன்.
பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தொடக்கம் இலங்கை பாராளுமன்றம் வரை உங்களை பற்றி பேசுகிறார்களே….?
எல்லோரும் என் நன்மைக்காகத்தானே பேசுகிறார்கள். நான் வெற்றி பெற வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறார்கள். அது நிறைவேற வேண்டும். நான் நிச்சயம் வெற்றியோடு திரும்பி வருவேன்.
உங்கள் தாய்நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சண்டை போட்டுக்கொள்ளக்கூடாது. எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும். யாரும் யாரையும் புண்படுத்தக்கூடாது!
மலையக மண்ணின் அடையாளமாக இன்று உலகத் தமிழ் மக்களை ஈர்த்துள்ள இந்த சிறுமி விரும்புவதெல்லாம், திறமையானவர்கள் யாராயினும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஒருமைப்பாடு என்பதாகத்தான் இருக்கிறது.
“சரி, அடுத்து என்ன பாடலை பாடப்போகிறீர்கள், அசானி” என கேட்க, “அது இரகசியம் அக்கா… கோபித்துக்கொள்ள வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ’கண்கள் நீயே காற்றும் நீயே…’ பாடலின் பல்லவியை மட்டும் பாடி விடைபெற்றார்.
(மா. உஷாநந்தினி)