32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.

பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்முறையாக நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதியது.

32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியை எட்டியிராத இரு அணிகள் இறுதியுத்தத்தில் சந்திப்பது இது முதல் தடவையாகும்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் போட முடியாமல் திணறினர். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் தலைவிக்கு தந்தை இறந்த செய்தி பின்னரே தெரிவிக்கப்பட்டது

உலககிண்ண இறுதிப்போட்டியில் தனது அணிக்காக கோல் அடித்த ஸ்பெயின் அணியின் தலைவியிடம் அவரது தந்தை உயிரிழந்த தகவல் போட்டி முடிவடைந்த பின்னரே தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நோய்காரணமாக நீண்டகாலமாக போராடிக்கொண்டிருந்த அவரின் தந்தை உயிரிழந்துள்ளார்.

நீங்கள் அந்த இரவு என்னை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் நீங்கள் என்னை பற்றி பெருமைப்பட்டிருப்பீர்கள் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியுடன் தனது வெற்றிபதக்கத்தை முத்தமிடும் படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ஒல்கா கார்மொனாவின் தந்தையின் இறப்பு குறித்து அறிவித்துள்ள ஸ்பானிஸ் கால்பந்தாட்ட சங்கம் இறுதிப்போட்டிக்கு பின்னரே அவருக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கடும் துயரமான தருணத்தில் நாங்கள் எங்களது அனுதாபத்தை அவரது குடும்பத்தினருக்கும் அவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ள ஸ்பானிஸ் கால்பந்தாட்ட அமைப்பு நாங்கள் ஒல்காவை நேசிக்கின்றோம் நீங்கள் எங்கள் வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply