தெருவில் செல்லும் போது, நாய்கள் குரைக்கும். சில நாய்கள் துரத்தும். ஆனால் யாருமே, அந்த நாய்­க­ளுக்குப் பதில் சொல்லிக் கொண்­டி­ருப்­ப­தில்லை. அவற்­றுக்குப் போட்­டி­யாக குரைத்துக் கொண்­டி­ருப்­ப­து­மில்லை.

அது கடிக்­குமா இல்­லையா என்று யோசித்துக் கொண்­டி­ருப்­ப­தில்லை, பய­ணத்தை தொடர்­வ­தி­லேயே அனை­வரின் கவ­னமும் இருக்கும்.

இப்­போது, தெற்கில் இருந்து எழு­கின்ற கூச்­சல்கள் எல்­லாமே, வழி­நெ­டுக குரைக்கும் நாய்­களின் குரைப்­பு­களைப் போலத் தான் இருக்­கி­றது.

வடக்கில் விகா­ரை­களின் மீது கைவைப்­ப­வர்­களின் தலையை எடுத்து வருவேன் என்­கிறார் மேர்வின் சில்வா.

இது சிங்­கள பௌத்த நாடு, எந்த இடத்­திலும் புத்தர் சிலை­களை வைத்து வழி­பாடு செய்வோம் என்­கிறார் சரத் வீர­சே­கர.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்த விட­மாட்டோம் என்­கிறார் உதய கம்­மன்­பில.

இரா­வணன் தமிழ் மன்னன் அல்ல, அவன் இயக்கர் குல சிங்­கள மன்னர் என்று கூறு­கிறார் சரத் வீர­சே­கர.

இப்­படி தெற்கின் இன­வாத அர­சி­யல்­வா­திகள் எல்­லோ­ருமே, தமி­ழ­ருக்கு விரோ­த­மான கருத்­துக்­களை வெளி­யிடத் தொடங்கி விட்­டனர்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் பலன்கள் தமி­ழ­ருக்கு மட்­டு­மா­ன­தல்ல. அது சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் கூட பொது­வா­னது.

ஆனாலும், 13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­தினால் வடக்கு, கிழக்கு பிரிந்து விடும், தனி­நாடு உரு­வாகி விடும் என்­கிறார் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்.

13 ஆவது திருத்­த­த்துக்குள் தனி­நாடு, தமி­ழீழம் இருக்­கி­றது என்றால், புலிகள் மட்­டு­மல்ல, மித­வாத தமிழ்த் தலை­மை­களும் ஏன் அதனை ஏற்றுக் கொள்­ளாமல் நிரா­க­ரித்­தார்கள்?

எதற்­காக தொடர்ந்தும் வீணாகப் போராடி, ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் உயிர் துறந்­தார்கள்?

13ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக தனி­நாட்டை, தமி­ழீ­ழத்தை அடைய முடியும் என்றால், அவர்கள் போரா­டி­யி­ருக்­க­மாட்­டார்கள்.

இந்த உண்­மையைக் கூட புரிந்து கொள்ள முடி­யா­த­படி, சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம், சிங்­கள மக்­களை தவ­றான வழிக்குத் திருப்பிக் கொண்­டி­ருக்­கி­றது.

வடக்கில் உள்ள ஆல­யங்­களை அழித்து விட்டு அவற்­றுக்கு மேல் விகா­ரை­களை அமைத்­த­வர்கள், விகா­ரை­களில் மீது கைவைப்­ப­வர்­களின் தலையைக் கொண்டு வருவேன் என்று சூளு­ரைக்­கி­றார்கள்.

இப்­படி தமி­ழ­ருக்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்கள் இப்­போது மோச­ம­டைந்­தி­ருக்­கி­றது. 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தப் போவ­தாக, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் கூறத் தொடங்­கி­யதை அடுத்து இந்த இன­வாதக் கூச்சல் தொடங்­கி­யது.

இந்தக் கூச்­சல்கள் எமக்குப் பழக்­கப்­பட்­டவை தான்.இலங்கை சுதந்­திரம் பெற்ற காலத்தில் இருந்து காலத்­துக்குக் காலம் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­திகள் இப்­படித் தான் நடந்து கொண்­டார்கள், இப்­படித் தான் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தார்கள்.

தங்­களை தூய சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­க­ளாக காட்டிக் கொள்ளும் தலை­வர்கள் காலத்­துக்குக் காலம் தோற்றம் பெற்றுக் கொண்டே இருந்­தார்கள்.

அது இப்­போது, சரத் வீர­சே­கர, ஜகத் டயஸ், மேர்வின் சில்வா, உதய கம்­மன்­பில, விமல் வீர­வன்ச போன்­ற­வர்­களின் உருவில் இருக்­கி­றது. இன்னும் பலர் இந்த வரி­சையில் இருக்­கி­றார்கள்.

நாளை வேறு பலர் வரு­வார்கள். அவர்­களும் இதையே கூறு­வார்கள். இதை விட இன்னும் அதி­க­மா­கவும் கூறு­வார்கள்.

இதுதான் திட்­ட­மிட்டு நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். அது காலத்­துக்குக் காலம் புதுப்­பிக்­கப்­ப­டு­கி­றது. உரு­மாற்றம் செய்­யப்­ப­டு­கி­றது.

ஆட்கள் மாறிக் கொண்­டி­ருப்­பார்கள். ஆனால் அவர்­களின் இலக்கு மாறாது. இன­வாதக் குரல்­களில் மாற்றம் இருக்­காது. அஞ்­ச­லோட்டம் போல அவர்கள் தொடர்ச்­சி­யாக ஓடிக் கொண்­டி­ருப்­பார்கள்.

ஏனென்றால், சிங்­கள பௌத்த பேரி­ன­வா­திகள் மத்­தியில் இன­வெ­றுப்பு ஊறிக் கிடக்­கி­றது. தமி­ழ­ருக்கு எதி­ரான மன­நிலை, தமி­ழர்கள் மீதான அச்சம், வெறுப்பு என்­பன நீக்­க­மற நிறைந்து கிடக்­கி­றது.

அவ்­வப்­போது அதனை அவர்கள் மறைத்துக் கொள்­வார்கள். நெருக்­க­டி­களை சமா­ளிப்­ப­தற்கு தமி­ழர்­களின் உதவி தேவைப்­படும் போது, உரு­மாற்றம் அடைந்­தி­ருப்­பார்கள். அது நீண்­ட­காலம் இருக்­காது.

பின்னர் தமி­ழர்­களை உதறித் தள்ளி விட்டு இன­வாதத் தீ பற்­றி­யெ­ரியும். இதுதான் 75 வருட இலங்­கையின் வர­லாற்றில் நாம் கண்ட உண்மை.

தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு கட்­ட­மைக்­கப்­பட்ட இன­வா­தத்தின் நீட்­சி­யாகத் தான் இது தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்த இடத்தில் தமிழர் தரப்பு ஒன்றை மறந்து விட முடி­யாது, சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் ஒரு­போதும் தன்னை மாற்றிக் கொள்ளப் போவ­தில்லை என்­பதே அந்த உண்மை.

காலத்­துக்குக் காலம் தமிழர் தரப்பு பகை­மையை மறந்து, நல்­லெண்­ணத்­துடன், நல்­லி­ணக்­கத்­துடன் பேச முயன்­றி­ருக்­கி­றது.

அவ்­வா­றான ஒவ்­வொரு அனு­ப­வமும் தமி­ழர்­க­ளுக்கு பின்­ன­டை­வையே கொடுத்து வந்­தி­ருக்­கி­றது.

ஆக, சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் ஒரு­போதும் மாறா முகம் கொண்­டது, அதன் சிந்­தனை எப்­போதும், மாற்றம் அடையப் போவ­தில்லை.

இவ்­வா­றான நிலையில் தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

ஒன்றில் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­துக்கு அடி­ப­ணியும் வகையில் தமி­ழர்கள் தங்­களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தெருவில் நாய்கள் குரைக்­கின்ற ஒவ்­வொரு முறையும் எங்­களின் பய­ணத்தை நிறுத்தி விட்டு, திரும்பிப் போக வேண்டும்.

திரும்பி ஓட முனையும் போது நாய்கள் துரத்தும். மீண்டும் தெரு­வுக்கு வரத் துணி­யாத அச்சம் மன­துக்குள் ஏற்­படும்.

அல்­லது குரைத்துக் கொண்­டி­ருக்­கின்ற நாய்­களைப் பற்றி கவ­லைப்­ப­டாமல், பதி­லுக்கு நாங்­களும் குரைத்து நேரத்தை வீண­டிக்­காமல், எங்­களின் பய­ணத்தை தொடர வேண்டும்.

அது புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.

தமிழர் தரப்பு இது­வரை எங்­கெங்கு தவ­றி­ழைத்­தி­ருக்­கி­றது என்­பதை கண்­ட­றிந்து அந்த தவ­றுகள் மீண்டும் நிக­ழாத வகையில் திட்­ட­மி­டல்­களைச் செய்து கொண்டு இலக்கை நோக்கி நகர வேண்டும்.

இலங்கைத் தீவு பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருந்த போது, சிங்­களத் தரப்பில் இருந்து இன­வாதம் பேசும் நபர்கள் அடக்கி வாசித்­தனர்.

அப்­போது தமி­ழர்கள் அவர்­க­ளுக்குத் தேவைப்­பட்­டனர்.

நாட்­டுக்குத் தேவை­யான டொலர்­களைக் கொண்டு வர தமி­ழர்கள் தேவைப்­பட்­டார்கள். பொரு­ளா­தா­ரத்தை நிமிர்த்­து­வ­தற்கு தமி­ழர்­களின் நிதி தேவைப்­பட்­டது.

பொரு­ளா­தார ரீதி­யாக வீழ்ந்து கிடந்த நாடு, இன்று எழுந்து நிற்க கூடிய நிலைக்கு வந்து கொண்­டி­ருக்­கி­றது.

இப்­போது தமி­ழர்­களின் தயவும், தேவையும் இன­வா­தி­க­ளுக்குத் தேவைப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு இப்­போது தேவைப்­ப­டு­வ­தெல்லாம் தமி­ழர்கள் தங்­களின் பாரம்­ப­ரிய தாயகம் என உரிமை கோரு­கின்ற வடக்கும் கிழக்கும் தான்.

வடக்கு, கிழக்கும் சிங்­கள பூமி, பௌத்த மர­பு­ரி­மைகள் நிறைந்த இடம் என்று பறை­சாற்­று­வது தான் அவர்­களின் இலக்கு.

இந்த இலக்கில் அவர்கள் தெளி­வாக முன்­னேறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அவ்­வப்­போது சிங்­களத் தலை­வர்கள், 13 என்­பார்கள். 13 பிளஸ் என்பார்கள். அதிகாரப் பகிர்வு என்பார்கள். ஆனால் ஒன்றையும் அமுல்படுத்த மாட்டார்கள்.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழர்களின் சார்பில் பண்டாரநாயக்கவுடனும், டட்லி சேனநாயக்கவுடனும் செய்து கொண்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டது போலத் தான், 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் கிழித்தெறிவதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவர்களின் இந்த இலக்குகளை தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரும், குரைத்துக் கொண்டிருக்கும் நாய்களைப் புறக்கணித்து பயணத்தை தொடரப் போகிறோமா, பயந்து ஓடப் போகிறோமா, அல்லது தெருவில் இருந்து குரைத்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

கபில்

Share.
Leave A Reply