உரிமையாளர்களால் மாத்தறையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தவறவிடப்பட்ட 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் அடங்கிய பை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வசித்து வந்த குடும்பத்தினர் மாத்தறை பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த போது இவ்வாறு பையை தவறவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலை மாளிகாவத்தை தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு முன்னர் அதனை சோதனையிட்ட போது அங்கு தவறவிடப்பட்ட பை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்ட போது 3 பவுன் தங்க மாலை, தங்க நகைகள், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத்தொலைபேசி, 35 இலட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.

அதனையடுத்து பையை சோதனையிட்ட மாத்தறை ரயில்வே பாதுகாப்பு அலுவலக உத்தியோகத்தர்களான ஏ.கே. லங்கனந்தா மற்றும் எல்.டி பிரியங்கர ஆகியோர் குறித்த பையை ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் பணிப்புரையின் பேரில் இந்த பையின் உரிமையாளரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதற்கமைவாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையில் பையில் இருந்த வங்கிப் புத்தகத்தின் முகவரி மூலம் மாத்தறை, பலடுவ பிரதேசத்தில் உள்ள உரிமையாளர்களின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply