இலங்கை நாடாளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டு கடந்த 35 ஆண்டு காலமாக அரசியில் யாப்பில் இடம்பெற்றுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகக் கொண்ட ஜனாதிபதி குழப்பி சேறாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என கை விரிக்கும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத அரசியல் சமூகமானது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் அடிமைகள் ஆக்கி சிங்கள – பௌத்த அடையாளத்திற்குள் கரைத்து விடும் வேலைத்திட்டங்களை பல முனைகளில் மேற்கொண்டு வருகிறது.

மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கும் சட்டங்களைக் கொண்டு வந்த டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் குடியரசு அரசியல் யாப்பு மூலம் இலங்கைத் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கிய சிறிமாவோ பண்டாரநாயக்க வழியாக இன்று 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதற்கு அத்திபாரமிடும் ரணில் வரை தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றுபவர்களாகவும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க எந்தவோர் முகாந்தரமும் இல்லாதவர்களாகவுமே ஆட்சி புரிந்துள்ளனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இன மோதல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் போதியதாக இல்லை. அது மேம்படுத்தப்பட வேண்டும் என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டார்.

எனவே, 13ஐ மேம்படுத்த அல்லது 13 இற்கு மேலான ஓர் தீர்வைக் கொண்டுவரும் முயற்சியாகவே மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் அறிக்கை எந்த நடவடிக்கைகளும் இன்றி புதைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான ஆட்சி 8 ஆண்டுகளாக நாடு தழுவிய வகையில் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்ற ஓர் தீர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பல தரப்பு மக்களின் குறிப்பாக சிங்களத்தரப்புகள் அனைவரினதும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அல்லது பல தரப்பினரின் கருத்துக்களை உள்ளடக்குவதற்காக 8 ஆண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு தனது 2 ஆவது ஆட்சிக் காலம் முடியும் தருவாயில் அத்திட்டத்தை நாடாளுமன்றில் கையளித்தார். 8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை நம்ப வைத்தார். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் முழுமையாக அவருக்கு இருந்த போதும் அதனைச் செய்யாமல் அந்த ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பதவி விலகினார்.

அன்றைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அந்த தீர்வுத் திட்டத்தை எரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆக 13 இற்கு மேலாக தீர்வுக்காக செயற்படுவதாக உலகை நம்ப வைத்து 8 ஆண்டுகளுக்கு மேலாக யுத்த தளபாடங்களையும் பொருளாதார உதவிகளையும் தங்கு தடையின்றி பெற்று தனது ஆட்சியை முடித்தார்.

தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் பெரிய நாமம் இடப்பட்டது. 13 இற்கு மேலான தீர்வு மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவேன் எனத் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்ற சந்திரிக்காவும் தமிழருக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை நிரூபித்தார்.

இத்தீர்வுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துகளை அல்லது பரிந்துரைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். ஆனால் இதனை நடைமுறைப்படுத்தினால் சந்திரிக்காவிற்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் ஓரளவு நல்ல பெயர் கிடைத்துவிடும். அவ்வாறு நடந்து விடக்கூடாது என்பதற்காக அன்று நாடாளுமன்றத்தில் பலமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் புலிகள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என தந்திரமான காரணத்தைக் கூறி அதனை எரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளோ, அரசியல் அதிகாரமோ வழங்குவதில் தனக்கு ஈடுபாடில்லை என்பதை நிரூபித்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் தலைவர்களும் சிங்கள ஆட்சியாளர்களும் இனமோதல் தீர்வு நோக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதன் மூலம் அவ்வொப்பந்தங்களை நடைமுறைப்படுத்தாமலே கிழித்தெறியச் செய்யும் அரசியலே தொடர்ந்து வந்தது.

எனவே ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் பரிந்துரைகளை உள்ளடக்கிய இத்தீர்வுத் திட்டத்தை குறுகிய கட்சி அரசியல் லாபத்திற்காக நாடாளுமன்றத்தில் பலமாக இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்து செயற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் அன்றைய பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கும் ரணிலிற்கும் இடையிலான ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் இருவரும் கையெழுத்திட்ட இவ்வொப்பந்தம் bzpartusan agreement என அழைக்கப்பட்டது.

அதாவது சந்திரிக்கா கொண்டுவரும் இத்தீர்வுத் திட்டத்தை எதிர்க்காமல் ஆதரித்து செயற்படுவேன் என்பதற்கான ‘இரு தரப்பு ஒப்பந்தம்”. ஆனால் இதில் கையெழுத்திட்ட ரணிலே இத்தீர்வுத் திட்டத்தை தீயிட்டுக் கொழுத்தியதில் இருந்து அரசியல் தீர்வு தொடர்பில் அவரது நம்பகத் தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

தொடர்ந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச ஒருபுறம் போரை உக்கிரப்படுத்திக் கொண்டே மறுபுறம் 13 பிளஸ் மூலம் இனமோதலுக்கு தீர்வு காண தயாராய் இருப்பதாக அறிவித்தார். புலிகள் பிரிவினைக்காக போராடுகின்றனர். அதனை ஏற்க முடியாது. அவர்களை அழிக்க வேண்டும். அதற்கு சர்வதேச ஆதரவு வேண்டும். ஆனால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வை வழங்குவேன்.

அதற்கு 13 இற்கு மேலாக செல்ல தயாராக இருக்கிறேன் என்ற அறிவித்தல் மூலம் தீர்வு விடயத்தில் நேர்மையாக இருப்பது போன்ற தோற்றப்பாட்டை உலகுக்கு குறிப்பாக இந்தியாவிற்குக் காட்டினார்.

இதனை நிரூபிக்கும் நாடகமாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் வட்ட மேசை மாநாட்டையும் கூட்டினார். வட்ட மேசை மாநாடு மாதக் கணக்கில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே உலகம் முழுவதும் இருந்து ஆயுத தளபாட உதவிகள் பெறப்பட்டன. யுத்தம் உக்கிரமடைந்தது. ஆனால் திஸ்ஸ விதாரண தலைமையிலான வட்ட மேசை மாநாட்டு அறிக்கை குப்பைத் தொட்டிக்குப் போனது. பாரிய யுத்தக் குற்றங்களுடன் போர் முடிவுக்குக் வந்தது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் யுத்த அழிவுகளை மேற்பார்வையிட இலங்கைக்கு வந்தார். அப்போதும் 13 பிளஸ் மூலம் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் அனைத்தும் கைவிடப்பட்டு வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு இரு மாகாணங்களிலும் மிக வேகமாக இராணுவப் பாதுகாப்புடன் சிங்கள – பௌத்த மயமாக்கல் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. யுத்த காலத்தில் பிரிவினைக்குத்தான் நாம் எதிர்ப்பு. ஆனால் தமிழ் மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுக்கு விருப்பமாகவே உள்ளோம் என்ற விம்பம் வெற்றிகரமாக உலகிற்கு காட்டப்பட்டது.

யுத்தம் முடிந்த பின் இலங்கை யுத்தம் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் தலைமையிலான விசாரணைக்குழு இலங்கை ஆட்சியாளர் மீது யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவை விசாரிக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்ததுடன் இனமோதலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தொடர்ச்சியாக இலங்கையின் யுத்தக் குற்றங்கள் அவை தொடர்பான ஏனைய குற்றங்கள் தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே யுத்தம் முடிந்தாலும் இத்தகைய அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான தொடர்ந்தும் உலகை நம்ப வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள ஆட்சியாளருக்கு இருந்து வருகிறது. எனவே தான் நல்லாட்சிக் காலம் என தவறாக கருதப்படும் ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு அல்லது முக்கிய திருத்தங்கள் கொண்டு வரும் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில்

1. ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை அதிகரித்தல்.

2. அரசியல் அழுத்தத்திற்குட்படாத சுயாதீன குழுக்களை ஸ்தாபித்தல்.

3. இனமோதலுக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணுதல்

என மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சித் திட்டம் அரசியல் யாப்பு சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகளை விழுங்கிய ஆளும் இரு பெரும் கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய இக்கூட்டு அரசாங்கமானது அதிகாரப் பகிர்வு செயற்பாட்டை காலம் கடத்தி முடிவு காணாமலே ஏமாற்றியது.

மேற்கண்ட அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு நோக்கிய சிங்கள ஆட்சியாளரின் செயற்பாடுகளின் வரலாறு என்பது ஒருபுறம் கொள்கை அளவில் 13 இற்கு மேலான அதிகாரப் பகிர்வின் அவசியத்தை ஆளும் பெரும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டமையை வெளிப்படுத்தும் அதேவேளை மேலான தீர்வுக்காக செயற்படுவது போல் காட்டி எந்தத் தீர்வும் இல்லாமலே வெற்றிகரமாக தமது ஆட்சியை முடித்தல் என்ற காலம் கடத்தும் தந்திரோபாயமாகவே பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையின் எந்தவோர் ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ அதன் தலைவர்களோ இலங்கைத் தமிழ் மக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதையே மேற்கண்ட வரலாறு நிரூபிக்கிறது.

இவ்வெல்லாச் சந்தர்ப்பங்களிலும் (மகிந்தவின் வட்ட மேசை தவிர்ந்த) தமிழ்த் தலைமைகள் ஆட்சியாளரின் ஏமாற்று நாடகங்களை புரிந்து கொண்டு ஏமாறாமல் இருக்க உரிய அரசியல் நகர்வுகள் எதனையும் மேற்கொண்டதாக இல்லை. மாறாக தெரிந்தும் தெரியாமலும் ஏமாந்து கொண்டே இருந்த வரலாறே காணப்படுகிறது.

இத்தனை ஏமாற்ற அனுபவங்களில் இருந்து இரண்டு விடயங்கள் தெளிவாகிறது. ஒன்று தமிழ் – சிங்கள தலைமைகள் நேரடியாகப் பேசி எந்தத் தீர்வும் சாத்தியமில்லை. இரண்டாவது இலங்கை ஆட்சி மீது உறுதியான வெளிப்புற தலையீட்டினால் மட்டுமே எந்தத் தீர்வும் சாத்தியம்.

குறிப்பாக இந்தியாவின் உறுதியானதும் தொடர்ச்சியானதுமான தலையீடின்றி எந்தத் தீர்வும் சாத்தியமில்லை. எனவே இந்தியாவின் தலையீட்டை மீண்டும் ஏற்படுத்துவதனாலேயே இறுகி நிற்கும் அதிகாரப் பகிர்வு விடயம் புத்துயிர் பெறும் என்ற தமிழ்த் தரப்பில் பெரும் பகுதியினரின் முடிவும் இந்தியாவிற்கு அண்மித்திருக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சீனா உட்பட்ட அன்னிய சக்திகளின் செயற்பாடுகளுக்கு தடைபோட வேண்டும் என்ற இந்தியாவின் முடிவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இரு தரப்பு நலன்களிற்பாற்பட்ட கோரிக்கை எழுச்சி பெற்றது.

குறிப்பாக இந்தியாவால் ஏற்படுத்தப்படும் அழுத்தமானது ஒருபுறம் ரணிலினால் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதில் ஏற்கனவே நாட்டமற்ற ரணிலுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகும் கனவில் இருக்கும் இவ்வேளையில் இந்தியாவையும் சிங்கள வாக்காளரையும் தமிழரையும் திருப்திப்படுத்தி அதிகாரங்களை வழங்காமலே தேர்தலில் வெல்லும் கணிப்பை மேற்கொள்கிறார்.

13 ஆவது திருத்தம் அரசியல் யாப்பின் ஓர் அங்கம். நாடாளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு 35 ஆண்டுகளாகி விட்டன. நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பேசி பெருமளவு விடயங்களை நடைமுறைப்படுத்தலாம். அவசியமான சிலவற்றுக்கு மட்டும் நாடாளுமன்ற அங்கீகாரம் தேவை. அதனையும் கட்சித் தலைவர்களுடன் பேசி இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியம், இந்திய ஒத்துழைப்பின் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆதரவை பெற முடியும்.

ஆனால் நிறைவேற்றுத் துறையிடம் அதாவது ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையிடம் நிறைவேற்றுவதற்காக உள்ள யாப்பினை மீண்டும் நாடாளுமன்றம் கொண்டு சென்று அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோருவதும் நாடாளுமன்ற ஆதரவின்றி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதும் தவறு என சட்டம் படித்த சிரேஷ்ட அரசியல்வாதியான ரணிலுக்குத் தெரியாததல்ல.

13 என்ற துருப்புச் சீட்டை வைத்தே 3 தரப்பையும் நம்ப வைத்து ஜனாதிபதியாகும் நரித்தனமான திட்டத்தின் வெளிப்பாடே 13 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவரது குழப்ப கரமான அணுகுமுறையாகும். இதன்மூலம் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிரியும் என கதறும் ஓர் கூட்டத்தினையும் 13 ஐ நடைமுறைப்படுத்த விடமாட்டோம் எனக் கதறும் பிரிவினரையும் ஒன்றுபடுத்தி 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகளை ஒன்றிணைத்து வலுப்படுத்தியுள்ளமையே சாதித்து இருக்கிறார்.

13 ஆம் திருத்தச் சட்டம் போதாது மேலான ஓர் அதிகாரப்பகிர்வு தேவை எனக்கூறிய அனைத்து சக்திகளும், கட்சிகளும் ரணில் நடைமுறைப்படுத்த விரும்புவதாகக் கூறும் பொலிஸ் அதிகாரமற்ற 13 ஐயே எதிர்க்கின்ற ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே 13 ஐ நடைமுறைப்படுத்துவதிலும் ரணிலை நம்புவதற்கு எந்த உறுதியான காரணமும் இல்லை. அவரது வரலாறும் அப்படி இல்லை.

எனவே தமிழ்த் தரப்பு இராவணனை சிங்களவர் எனும் வரலாறு தெரியாத படையினருக்கும் தமிழரின் தலைகளை களனியில் மிதக்க விடுவேன் எனும் பிதற்றலுக்கும் பதிலளித்து தமது பிரதான நோக்கத்திலிருந்து திசை திரும்பாமல் அதிகாரப் பகிர்வு விடயத்தில் அனைத்துத் தலைவர்களின் ஏமாற்று வரலாற்றையும் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ரணிலின் நேர்மையின்மையையும் தமிழ் மக்கள் ரணிலை நம்ப எந்த முகாந்தரமும் இல்லை என்பதையும் தெளிவாகவும் விளக்கமாகவும் மக்களுக்கும் உலகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இதுவாகும். தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயார் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஊடாக ரணிலை ஜனாதிபதியாக்கும் கால கட்டத்தில் தமிழ் தலைமைகள் சிதறுண்டு பல்வேறு வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்ததும் கீழ்த்தரமான நாடகங்களை ஆடி எமது நோக்கங்களை தொலைக்காமல் இவ்விடயத்தில் அதிகபட்சம் ஒற்றுமைப்படக்கூடிய தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.

ஒன்றுபட்டு ஓர் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதிப் போட்டியில் களம் இறக்க வேண்டும். வெற்றி பெற்று ஜனாதிபதியாவதற்கு அல்ல. அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வு விடயத்தில் இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை வலுவாக ஈர்ப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக கருதி இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

இதன்மூலம் மட்டுமே கொழும்பின் நாணயக் கயிற்றின் நாம் கையில் எடுக்க முடியும். எமது கோரிக்கைகளின் பால் செயற்பட வைக்க முடியும். தவறின் ரணிலின் தேர்தல் வாக்குகள் வீழ்ந்து 13 ஐயும் இழக்க நேரிடும்.

நன்றி : தினக்குரல்

Share.
Leave A Reply