திருகோணமலை உட்துறைமுகவீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வேனில் பயணித்த நோயாளி உட்பட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் அவரது மகளான கவிசாலினி (வயது 9) படுகாயமடைந்துள்ளதுடன் மருமகளான எட்றிக் செரலினா (வயது 10) என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு குறித்த வேனில் அழைத்துவரப்பட்ட நோயாளியான தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு தாய், மகள் மற்றும் மருமகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் உட்துறைமுக வீதியூடாக வீடுநோக்கி பயணித்தபோது சீனக்குடாவில் இருந்து வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்கும் இரு மாணவிகளும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி எட்றிக் செரலினா (வயது 10) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன் கவிசாலினி என்ற மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வேனில் பயணித்த நோயாளியான தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேனின் சாரதி பொலிசாரால் கைது செய்யட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply