நாளுக்கு நாள் தேசிய அரசியலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்ற நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வெற்றி இலக்குகள் குறித்து தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் யால வனவிலங்குகள் சரணாலயத்துக்கு சென்றிருந்த ஜனாதிபதியை நோக்கி அமைச்சர் ஹரின் கூறிய விடயத்துடன் திரைக்கு பின்னால் நடைபெற்ற பல்வேறு அரசியல் சம்பவங்களை தொடர்கின்றோம்.
யால வனப்பகுதிக்கு கடந்த வாரத்தில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலீட்டுத் திட்டம் ஒன்றை திறந்து வைத்ததுடன், வறட்சியினால் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகள் திட்டத்தையும் பார்வையிட்டார்.
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோரும் சென்றிருந்தனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டுமாயின் வனங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூற, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் அமெரிக்க தூதுவரும் தலையசைத்து ஏற்றுக்கொண்டதுடன், புதிய திட்டங்கள் குறித்தும் முன்மொழிவுகளை குறிப்பிட்டனர்.
அடுக்கடி யால வனத்துக்கு செல்லும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறித்து இதன்போது குறிப்பிட்ட அமைச்சர் ஹரின், புதிய திட்டங்களுடன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தையும் இங்கு நிர்மானிக்கவுள்ளதாக அரசியல் மொழியில் கூற, அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஜனாதிபதி எச்சரிக்கை
சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய ஜனாதிபதியுடன், காலநிலை தொடர்பான கலந்துரையாடலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்தார்.
நாடு கடும் வறட்சியை தற்போது எதிர்கொள்கிறது. எதிர்வரும் வாரங்களில் பெரும் மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
இவை இரண்டுமே மனிதர்களின் செயற்பாடுகளினால் ஏற்படும் இயற்கை தாக்கங்களாகும். எனவே இதனை எதிர்கொள்ள கூடிய விரைவில் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று கூறி ஜனாதிபதி கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.
‘காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு’ செல்லுகையில், எதற்காக செல்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பி ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் கேலி செய்தனர்.
சிலர் என்னையும் கேலி செய்தனர். ஆனால் இன்று எம் கண் முன்னே அதன் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதியை நோக்கி குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து காநிலை மாற்றம் தொடர்பான கற்கை நிலையம் மற்றும் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது குறித்தும் கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து காலநிலை மாற்றம் தொடர்பான நீதி மையத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜனாதிபதியை சந்தித்த ஆளும் கட்சி உறுப்பினர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆலோசகர் ஆசு மாரசிங்க உட்பட ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது அன்றைய தினம் காலை எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
மக்களுக்கான முக்கியமான தீர்மானங்கள் மற்றும் திருத்த சட்டமூலங்களை கொண்டு வருகையில் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது ஜனாதிபதியிடம் முறையிட்டு கூறினார்.
கேள்விகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மணித்தியாலத்தை இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்துக்கொள்கின்றனர். இதனால் திட்டமிட்ட பாராளுமன்ற நடவடிக்கை அன்றைய சபை அமர்வில் முன்னெடுக்க முடியாதுள்ளதாக ஆசு மாரசிங்க ஜனாதிபதியை நோக்கி கூறினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவருக்கு கட்டுப்படுவதில்லை. வெறுமனே காலத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளையே எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இதன்போது சாடினார்.
பிரதமர் மற்றும் சபை முதல்வர் ஆகியோர் ஆளும் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்தி சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெடுக்கின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவரினால் அவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெறுவதில்லை. நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கட்டுப்பாடான நிலைமை காணப்பட்டது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் ஜனாதிபதியை நோக்கி கூறினார்.
இவற்றை செவிமெடுத்த ஜனாதிபதி, எதிர்க்கட்சி குறித்து எமக்கு தீர்மானிக்க இயலாது. ஆனால், பாராளுமன்றத்தில் ஒதுக்கப்படும் காலநேர முகாமைத்துவம் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுங்கள். அந்த தீர்மானத்தை 225 உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலமாக அறியப்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது கூறினார்.
வியாழக்கிழமை சந்திப்பு
திருகோணமலைக்கு செல்வதற்கு முன்னர், வியாழக்கிழமை அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து அரசியல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மோல்டா நாட்டில் நிதி முதலிட்டுள்ளதாக துமிந்த நாகமுவவின் குற்றச்சாட்டுக்கு அநுரகுமார திசாநாயக்க இதுவரை எவ்விதமான கருத்துக்களும் கூறவில்லை.
ஆனால் சாகர காரியவசம் மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார் என்று ஆசு மாரசிங்க சிரிப்பொலியுடன் கூறினார்.
ஆனால் இவ்விடயம் குறித்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுக்கு அமைச்சர் டிரான் அலஸ் அலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்திலேனும் அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் சாமர சம்பத் கூற, அனைவரும் தலையசைத்து ஆமோதித்தனர்.
வக்கீல் நோட்டிஸ் அனுப்பி வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வரும்போது 10 வருடமாகிவிடும். மோல்டா நாட்டு வங்கிக்கணக்கில் குறித்த நிதியை தவிர, ராஜபக்ஷர்கள் வழங்கிய நிதியம் உள்ளதாக கேள்விப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூற, அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.
நல்லாட்சியின்போது ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் மோசடி ஒழிப்பு அலுவலகத்தின் பிரதானியாக ஆனந்த விஜேபால என்பவரே நியமிக்கப்பட்டார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) வேட்பாளராக போட்டியிட்டார் என்று நீண்ட விளக்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கூறினார்.
ஆம். ஊழல் ஒழிப்பு அலுவலகத்தில் இருந்த வெலியமுன நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஜயம்பதி விக்ரமரத்ணவும் தற்போது நாட்டில் இல்லை. விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவும் வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளார்.
ஆனால், ஆனந்த விஜேபால சுமூகமாக வெளியில் செயற்படுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் ஸ்ரீ தொலவத்த இதன்போது ஜனாதிபதியை நோக்கி கூறினார்.
இவை அனைத்தையும் மௌனமாக கேட்டிருந்த ஜனாதிபதி எவ்விதமான மறுமொழிகளையும் கூறாது வழமையான அரசியல் நிறைந்த புன்னகையுடன் எழுந்து சென்றார்.
புதிய அரசியல் கூட்டணி
ஆளும் கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாற்று அரசியல் கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொகுதி ரீதியாக முன்னெடுப்பதற்கு ராஜகிரிய அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைவாக செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய அரசியல் கூட்டணியின் அனைத்து மாவட்டங்களுக்குமான தலைவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலான தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இதன் பின்னர் கிராமிய மட்டத்தில் புதிய அரசியல் கூட்டணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ராஜகிரிய அலுவலகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கடந்த இரு வாரங்களாக புதிய அரசியல் கூட்டணியின் முக்கிய செயற்பாட்டளரான நிமல் லன்சா வெளிநாடொன்றுக்கு சென்றிருந்த நிலையில், புதன்கிழமை நாடு திரும்பியதுடன், அன்றைய தினம் இரவு முக்கிய கலந்துரையாடலுக்காக ஏனைய உறுப்பினர்கள் கொழும்பில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒன்று கூடினர்.
இந்த சந்திப்பில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கம்பஹா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பு
புதிய அரசியல் கூட்டணியின் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்பதாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர், அச்சப்பட்டு சேரு பூசும் வகையில் செயற்பட தொடங்கியுள்ளனர் என்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை நோக்கி குறிப்பிட்டார்.
சாகர காரியவசம்
‘உண்மைதான், பொதுஜன பெரமுனவை உருவாக்கும்போது, எங்கிருந்தார் என்றே தெரியாத சாகர காரியவசம், இன்று கிளியை போன்று கூறியதையே கூறி திரிகின்றார்’ என்று அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்கள் குறித்து நாம் கவலைப்படவோ அச்சப்படவோ வேண்டியதில்லை. அவ்வாறானவர்களுக்கு பதிலளிக்கவும் கூடாது. மொட்டு கட்சி குறித்து பேசுவதற்கு சாகர காரியவசம் யார்? ஒரு வகையில் அவர் எமது புதிய கூட்டணிக்கு பிரசாரம் செய்து வருகின்றார் என நிமல் லன்சா கூறினார்.
பஷில் ராஜபக்ஷ மொட்டு கட்சியை உருவாக்கும்போது, இன்று பேசுபவர்கள் யாரும் அன்றிருக்கவில்லை.
ஒருவர் மோசடிகளில் சிக்கியவர், இவரை நல்லாட்சி காலத்தில் கைது செய்ய தேடியபோது தலைமறைவாகி இருந்தார் என்று முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
அது உண்மைதான், பஷில் ராஜபக்ஷ இலங்கை வருவதை ராஜபக்ஷ குடும்பத்தினர் விரும்பவில்லை. வரவேண்டாம் என்றே கூறினர். ஏனெனில் பஷில் நாட்டுக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ மீதான மக்கள் அலை ஓய்ந்துவிடும் என்பதாலேயே அவரது வருகைக்கு ராஜபக்ஷ குடும்த்தினர் விரும்பவில்லை.
இவ்வாறானதொரு நெருக்கடியான நிலையில் பஷில் இருந்தபோது, அவரை வரவேற்பதற்காக 3 ஆயிரம் பேருடன் விமான நிலையத்துக்கு சென்றது இன்று பேசுபவர்கள் அல்ல. மாறாக, நிமல் லன்சாவே சென்றார் என்று சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நீர்கொழும்பு பிரதேசத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த புதிய அரசியல் கூட்டணியின் முக்கிய செயற்பாட்டாளரும் ராஜகிரிய அலுவலக பிரதானியுமான சிறிபால அமரசிங்க, பஷில் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தபோது இன்று கூச்சலிடுபவர்கள் யாரும் சென்று பார்க்கக்கூட இல்லை.
இவர்களின் பேச்சுக்கள் தண்ணீரில் எழுதிய எழுத்துக்கள் போல்தான், நிலையில்லாமல் மறைந்துவிடும். சாகர காரியவசத்தின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் அவ்வாறானதுதான் என்றார்.
கட்சியை உருவாக்கும்போது, தேர்தல் அலுவலகத்துக்கு சென்றுவர ஒருவர் தேவைப்பட்டார். அப்போது விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கு தேவைப்பட்ட போது இவர் சிக்கினார். அவ்வாறு செயலாளர் ஆனவர்தான் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புன்னகையுடன் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன என்றால் அது பஷில் ராஜபக்ஷதான். ஏனையவர்களுக்கு பேசுவதற்கு உரிமை இல்லை.
ஏனெனில், அவர்களுக்கு வரலாறு தெரியாது. இல்லை அவர்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்றால், பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும் என்று கூறிய நிமல் லன்சா, புதிய கூட்டணியினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அங்கிருந்து எழுந்து சென்றார்.
(லியோ நிரோஷ தர்ஷன்)