யாழ்ப்பாணம், சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் ஓட்டினை பிரித்து உள்நுழைந்த முகமூடி கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

நேற்றைய தினம் சனிக்கிழமை (26) நள்ளிரவு கூரையை பிரித்து வீட்டினுள் நுழைந்த மூவர் அடங்கிய முகமூடி கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து, கத்திமுனையில் வீட்டில் இருந்த 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்ட பகுதிகளில் மூவர் அடங்கிய முகமூடி கொள்ளைக் கும்பல் இரு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன், ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (24) நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பல் அருட்தந்தையரை கத்தி முனையில் மிரட்டி, அவரின் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (25) நள்ளிரவு திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிரித்து உள்நுழைந்த மூவர் அடங்கிய முகமூடி கொள்ளைக்கும்பல் வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து, கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையிட முயன்றுள்ளது.

எனினும், அவ்வேளை, வீட்டார் கூக்குரல் எழுப்பவே, அயலவர்கள் விழித்துக்கொண்டு, தமது வீட்டு மின் விளக்குகளை ஒளிரவிட்டதை அடுத்து கொள்ளைக் கும்பல் தமது கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை நள்ளிரவு சங்கிலியன் வீதியில் மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவானோர் வருகை தந்து, தங்கி நின்று நல்லூர் ஆலயத்துக்கு சென்று வரும் நிலையில், அப்பகுதிகளில் முகமூடி கொள்ளையர்களின் அட்டூழியமும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளமை அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply