லேசர் கதிர்களை பாய்ச்சி யானைகளை குழப்பிவிட்டு கண்டி தலதா பெரஹராவை சீர்குலைக்கும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கோரியுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியே, மேற்படி காரணத்தை ஆராயுமாறு கோரியுள்ளார்.

பௌத்த ஊர்வலங்களை சீர்குலைக்கும் மற்றும் அவமதிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டம் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி தலதா பெரஹெராவிற்கு எதிராக கூட சமூக ஊடக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சன்ன ஜயசுமண தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி தலதா பெரஹெராவில் பயணிக்கும் யானைகளை சங்கடப்படுத்தும் வகையில் சில யானைகளுக்கு லேசர் கதிர்கள் பாய்ச்சப்பட்டது. பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் லேசர் கதிர்களை வெளியிடும் சிறிய கருவிகள் ஊர்வலத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிக சக்தி வாய்ந்த லேசர் கதிர்களை வெளியிடும் கருவிகள் இலங்கைக்கு உரிய முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா, அவற்றை யார் இலங்கைக்கு இறக்குமதி செய்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் பேராசிரியர் சன்ன ஜயசுமண பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

Share.
Leave A Reply