13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூறியிருக்கின்றன.
13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்க விடயத்தில், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்த நிலையில்- இரண்டு பிரதான கட்சிகளிடம் இருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருத்து வெளியாகியிருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை இந்தக் கட்சிகள் எதிர்க்கவில்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதையும் பகிரங்கமாக எதிர்க்கவில்லை. இது ஒரு வகைத் தந்திரம்.
ஏனென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது, இந்தியாவுக்கு நேரடியாகச் சவால் விடுவது போல அமையும்.
இந்திய – இலங்கை உடன்பாட்டுக்கு அமைய, கொண்டு வரப்பட்டது தான் 13 ஆவது திருத்தச்சட்டம். இதுதான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான நிலையான தீர்வு என்று, இந்தியா கடந்த 36 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறான நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், அல்லது அதனை நடைமுறைப்படுத்துவதை நிராகரித்தால், இந்தியாவை எதிர்ப்பது போல அமைந்து விடும்.
அடுத்த ஆண்டு முக்கியமான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்தியாவைப் பகைத்துக் கொள்வது நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை மஹிந்த ராஜபக்ஷவோ, சஜித் பிரேமதாசவோ அறியாதவர்கள் அல்ல.
இந்தியாவைப் பகைத்துக் கொள்வதன் மூலம், தங்களின் வெற்றி வாய்ப்பை பறிகொடுக்க எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் தயாராக இருக்காது. அதே வேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது, கடந்த 36 ஆண்டுகளாக அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
இதன் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதற்கு நடத்தப்பட்ட தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சக்தியின் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் அதன் தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், வெற்றிகளைப் பெற்று ஆட்சியமைத்து வந்திருக்கின்றன.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை ருசி பார்த்த இந்தக் கட்சிகள், இப்போது அதனை நிராகரிக்க முடியாது.
மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும், 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்க்க முடியாது.
ஏனென்றால், 13இன் கீழான அதிகாரப் பகிர்வு என்பது, தனியே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் உரியதல்ல. நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் சேர்த்தே அதிகாரங்கள் பகிரப்படும்.
ஏற்கெனவே இந்தக் கட்சிகள் மாகாண சபைகளைக் கைப்பற்றி ஆட்சி நடத்திய போது, தங்களுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்று குரல் எழுப்பியிருந்தன.
அப்போது, முதலமைச்சர்களாக, மாகாண அமைச்சர்களாக இருந்து மாகாணங்களுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியவர்கள் இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், இந்தக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை நிராகரிக்கவோ – எதிர்க்கவோ முடியாது.
அப்படியானால், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தை எதிர்க்காத ஐக்கிய மக்கள் சக்தியும், பொதுஜன பெரமுனவும், ஏன் உடனடியாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை?
இங்கு தான் சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் அரசியல் தந்திரம் இருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்காமல் இருப்பது ஒரு இராஜதந்திரம் என்றால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் தடுப்பதும் இன்னொரு இராஜதந்திரம் தான்.
இங்கு தான் அவர்கள் இரட்டை இராஜதந்திரத்தை கையாளுகின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆர்.ஜயவர்தன கொண்டு வந்த போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை தீவிரமாக எதிர்த்தது. ஆரம்பத்தில் அந்தக் கட்சி நேரடியாக மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை.
1993இல் சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய சோசலிச முன்னணி என்ற கூட்டணியின் பெயரில், போட்டியிட்ட போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலரும் போட்டியிட்டிருந்தார்கள்.
அதற்குப் பின்னர், மாகாண சபைத் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டிருக்கிறது.
ஆனாலும் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பகிருவதற்கு – இருக்கின்ற அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க தயங்குகிறது.
அதற்கு முக்கியமாக சொல்லப்படும் காரணம், காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனிநாடாக மாறி விடும் என்ற அச்சம் தான்.
பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் தனிநாட்டை அமைத்து விடுவார்கள் என்ற அச்சம் சிங்களக் கட்சிகளுக்கு இருப்பது உண்மை.
ஆனால், அதுவல்ல பிரதான காரணம்.தமிழர்கள் கூடுதல் அதிகாரங்களைப் பெற்று விடக் கூடாது என்பதே சிங்களக் கட்சிகளின் அடிப்படை நோக்கம்.
ஏனென்றால், 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு, 36 ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் முயற்சிக்கவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியா முன்மொழியும் ஒரு அரசமைப்புத் திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை காலம் வரவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன?
அந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதை சி்ங்களத் தரப்பு விரும்பவில்லை என்பது தானே உண்மை.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இது தருணமல்ல என்றால், 36 ஆண்டுகளில் அதற்கு தருணம் வரவில்லையா?
அப்படியானால் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தருணம் எப்போது வரும்? அந்த தருணத்தில் கூட 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி 13ஐ நடைமுறைப்படுத்துவதை பிற்போட சொல்கிறது பொதுஜன பெரமுன.
கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டது.
இப்போது பொருளாதார நெருக்கடி காரணமாக முன்வைக்கப்படுகிறது.
இந்த நெருக்கடி தீர்ந்த பின்னர் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு இது தருணமல்ல என்று இன்னொரு காரணம் முன்வைக்கப்படும்.
சிங்களக் கட்சிகளுக்கு காலத்துக்கு காலம் ஒவ்வொரு காரணம் கிடைக்காமலா போகப் போகிறது?
13 ஆவது திருத்தச் சட்டத்தின் ருசியை அனுபவித்தவர்கள் கூட, அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தயங்குகின்றனர். இதனை இந்தியா திணித்தது என்ற சிந்தனையும் அதற்கு ஒரு காரணம்.
தமிழர்கள் கூடுதல் அதிகாரங்களைப் பெற்று விடுவார்கள் என்பது இன்னொரு காரணம்.
13இன் ஊடாக அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு தனித்துவமானதல்ல, ஏனைய 7 மாகாணங்களுக்கு உரியதை போலவே வடக்கு, கிழக்கிற்கும் அதிகாரம் பகிரப்படும் என்பதை தெரிந்திருந்தாலும், அதனை சிங்களக் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்தியாவின் மேலாண்மையில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்தப்படுவதையும், அதன் ஊடாக தமிழர்கள் அதிகாரம் பெறுவதையும், எதிர்ப்பதே, சிங்களக் கட்சிகளின் அடிப்படை மனோநிலையாக இருக்கிறது.
இந்த மனோநிலையில் இருந்து கொண்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தருணத்தை அவர்களால் ஒருபோதும், உருவாக்க முடியாது. இந்த மனநிலையை அவர்கள் மாற்றாத வரையில் அதற்காக தருணமும் உருவாகமாட்டாது.
-சத்ரியன்–